

மகளிர் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை அடித்த இரண்டாம் வீராங்கனை, முதல் இந்திய வீராங்கனை ஆகிய இரண்டு பெருமைகளைப் பெற்றிருக்கிறார் அவர். அதோடு ஒரு நாள் போட்டி யில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் வீராங்கனை என்கிற சாதனை யையும் நிகழ்த்தியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் - ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் 10 ஆயிரம் ரன்களைக் கடந்திருக்கிறார்கள். ஆனால், வீராங்கனைகள் 10 ஆயிரம் ரன்களைக் கடப்பது அரிதுதான். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பெண்களுக்கு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுவதே இல்லை. அடுத்து, ஒரு நாள், இருபது ஓவர் தொடர்களையும் ஆண்களுக்கு நடத்தப்படுவதைப் போலத் தொடர்ச்சியாக மகளிருக்கு நடத்தப்படு வதில்லை. இந்தச் சூழலில் சர்வதேச அரங்கில் மகளிர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் குவிப்பது என்பது மலைக்க வைக்கும் சாதனை. அந்தச் சாதனையைப் படைத்து அசத்தியிருக்கிறார் மிதாலி ராஜ்.
1999-ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுவரும் மிதாலி ராஜி, இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் 663 ரன்களை எடுத்துள்ளார். 214 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 7,098 ரன்களையும், 89 இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்று 2,364 ரன்களையும் குவித்திருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட் போட்டி களிலும் பங்கேற்று 10 ஆயிரம் சர்வதேச ரன்கள் என்கிற புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறார் மிதாலி.
இராண்டாம் வீராங்கனை
இதற்கு முன்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் மட்டுமே மகளிர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் சர்வதேச ரன்களைக் கடந்த ஒரே வீராங்கனையாக இருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், 10,273 ரன்களைக் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். மிதாலி ராஜ் 10,125 ரன்கள் குவித்து இரண்டாமிடத்தில் இருக்கிறார். தற்போது 38 வயதாகும் மிதாலி ராஜ், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் கேப்டன் என்ற அந்தஸ்தோடு விளையாடிவரும் மிதாலி, அடுத்த சில போட்டிகளில் சார்லோட் எட்வர்ஸ் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதேபோல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் மிதாலி படைத்திருக்கிறார். இந்த இரண்டு சாதனைகளையும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் மிதாலி நிகழ்த்தினார். ஏற்கெனவே ஒரு நாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்கிற சிறப்பும் மிதாலி வசமே உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்காக மிதாலி ராஜ் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இந்தச் சாதனை அவருடைய மணிமகுடத்தின் புதிய முத்து!