

அரசியலில் தங்களுக்கான அதிகாரத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவியே மக்களின் வாக்குரிமை. ஆனால், உலகின் பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாக்குரிமையைக்கூடப் போராடித்தான் பெற்றனர்.
18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மேலை நாடுகளிலும் இந்தப் போராட்டச் சிந்தனை தொற்றிக்கொண்டது. இதில் பெண்கள் மட்டுமல்லாமல் இக்கருத்தை ஆதரித்த முற்போக்குச் சிந்தனை கொண்ட ஆண்களும் பங்கேற்றனர். நியூசிலாந்தில் 1893இல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட நிலையிலும்கூடப் பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையை 1919இல்தான் பெற முடிந்தது.
இந்தியாவிலும் பெண்களின் வாக்குரிமைக்கான கோரிக்கை எழுந்தது. ஆனிபெசண்ட், டாரத்தி ஜினராஜதாசர், மார்கரட் கசின்ஸ் ஆகியோரோடு கவிக்குயில் சரோஜினி தலைமையில் 18 இந்தியப் பெண்கள் இணைந்து போராடினர். மாண்டேகு-செம்ஸ்போர்டிடம் அளிக்கப்பட்ட இவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர் முயற்சியின் விளைவாகவும் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியப் பெண்களின் ஆதரவின் தேவையை உணர்ந்தும், தேசிய அரசியல்வாதிகள் பின்னர் இதற்கு ஆதரவளித்தனர்.ஆனாலும், சொத்துரிமையும் வருமானமும் பெண்கள் வாக்குரிமை பெறும் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.
இந்தியாவில் 1923இல் ராஜ்கோட் மாநிலமே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அதைத் தொடர்ந்து படிப்படியாகப் பிற மாநிலங்களும் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன. அதன் பின்னர் பெண்கள் சட்டசபையில் இடம்பெறவும் தங்களுக்கான முன்னேற்றப் பாதைகளைச் செப்பனிடவும் பாடுபட்டனர். பல அரசியல் தலைவர்களும் பெண்கள் இயக்கங்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் 1927இல் அத்தடை நீக்கப்பட்டு, சென்னை உட்பட சில மாகாணங்களில் பெண்கள் சட்டசபையில் இடம்பெற வழியேற்பட்டது.
இவ்வளவு நெடிய போராட்டங்களின் பலனாகத்தான் இன்று பெண்கள் ஓரளவுக்காவது அரசியலில் ஈடுபட முடிகிறது. பெண்கள் அனைவரும் இதை உணர்ந்து விழிப்போடு தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். நம் உரிமையை எதற்காகவும் அடகுவைத்துவிடக் கூடாது. போதிய அரசியலறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் பெண்கள் வளர்த்துக் கொள்வதே வாக்குரிமையை மிகச் சரியாக பயன்படுத்துவதற்கான வழி.
- த. ஜான்சி பால்ராஜ்.