

தேர்தல் வந்துவிட்டது. அனைத்துக் கட்சிகளும் மக்களை நோக்கி வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. வாக்குறுதிகளின் மழையில் மக்கள் நனைந்துகொண்டிருக்கிறார்கள்.
அடிப்படையில் இந்தக் கட்சிகள் அனைத்துமே பெண்களை மிகப் பெரும் வாக்குவங்கியாக உணர்ந்திருக்கின்றன. எனவே, பெண்களை ஈர்ப்பது மிக அவசியம் என்கிற புரிதல் அவற்றுக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் புரிதலின் பின்னணியில் பெண்களின் நடப்பு வாழ்க்கையின் மேம்பாடு, பெண்ணினத்தின் விடுதலை போன்றவற்றைக் குறித்த பார்வை இருக்கிறதா என்பதுதான் நம்முன் இருக்கிற மிகப்பெரிய கேள்வி.
பெண்ணினத்தின் நலன் என்று சொல்லும்போது நடைமுறையில் இருக்கிற ஆணாதிக்க அமைப்பின் மீது, அது கேள்வி எழுப்புவதில்லை என்பதுடன் அந்த அமைப்பை ஒரு வகையில் பாதுகாக்கும் என்றுகூடச் சொல்லலாம். பெண்ணினத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்துடன் தொடர்புடையது. இந்த வேறுபாட்டை மனத்தில் நிறுத்தி, இவர்கள் அறிக்கைகளுக்குள் பயணிக்க வேண்டும்.
வரவிருக்கும் தேர்தலுக்கான அறிக்கைகள் முழுமையாக அனைத்துக் கட்சியினராலும் வெளியிடப்படாத நிலையில் அவர்கள் வெளியிட்டுவரும் சில அறிக்கைகளை வைத்தும், ஆள்பவர்கள் கடந்த தேர்தலில் அளித்திருந்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டி ருக்கின்றன என்பதையும் ஆய்வுக்குட் படுத்தலாம்.
சொன்னதும் செய்ததும்
2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அஇஅதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் பெண்கள் நலன் என்று அறிக்கையில் சொல்லியி ருந்த சில அம்சங்கள் முக்கியமானவை:
# மகளிர் நலத் திட்டங்கள் என்றறியப்படும் திருமண உதவித் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம் ஆகியவை அப்படியே அல்லது கூடுதல் தொகையுடன் தொடரும் என்கிற அறிவிப்பு.
# பெண்களுக்கு ஆட்டோ ஓட்டப் பயிற்சி அளித்து, ஆட்டோ வாங்க மானியம் அளிக்கும் திட்டம்.
# பணிக்குச் செல்லும் பெண்களுக்குச் சலுகை விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
# மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கப்படும்.
- இந்த அறிவிப்புகளின்படி பலனடைந்திருக்கும் பயனாளிகள் குறித்த எந்த வெள்ளை அறிக்கையையும் அரசு வெளியிடவில்லை. பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ஆங்காங்கே பத்திரிகைச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார்களே ஒழிய, ஒரு சமுதாய மாற்றத்துக்கான பரந்துபட்ட செயல்பாடாக அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? நியாயப்படி, மேற்கண்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட தனி அலுவலகம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
பணிக்குச் செல்லும் பெண்களுக்குப் பாதி விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஏன் பெருமளவில் பெண்கள் அதனால் பலன் பெறவில்லை, அதற்கு என்னென்ன தடைகள் என்பதும் விளக்கப்படவில்லை.
சுயஉதவிக் குழுக்களுக்கு…
மகளிர் சுய உதவிக் குழுக்கள் வளர்ச்சியில் அரசின் ஆதரவு கணிசமாகத் தொடர்வதை ஒப்புக்கொள்ள வேண்டும். முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒரு திருப்பத்தைக் கண்ட இந்தத் திட்டம், தொடர்ந்து செயல்படுவதுடன் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைக்குப் பொருளாதார வலிமையூட்டுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. எனவே, இரண்டு கட்சி ஆட்சியாளர்களுமே பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் வளர்ச்சியில் துணை நின்றிருக்கிறார்கள்.
மேலே கூறியிருக்கும் திட்டங்களில் திருமண உதவித் திட்டம், மகப்பேறு கால உதவி ஆகியவற்றை ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் உதவிகள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இவை கணவன்கள், தகப்பன்களுக்கான உதவியாகவே முடிகின்றன. பணிக்குச் செல்லும் பெண்கள், தொழில்முனைவோர் பெண்களுக்குச் செய்யும் உதவியே பெண்ணின வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் வழிவிடும்.
மகளிர் நலம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கை பெண்கள் நலன் குறித்துத் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறது. 1. மகப்பேறு நலன், 2. பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு, 3. ரத்த சோகை, பெண் சிசுக் கொலைத் தடுப்பு, பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் - கருப்பை நோய்கள் தடுப்பு, பாதுகாப்பு, 4. பாலியல் குற்றங்களைத் தடுக்கப் பாதுகாப்பு குழுக்கள் அமைப்பு, 5. கணவனை இழந்து வாடும் பெண்களுக்கான பொருளாதார வாழ்வாதாரப் பாதுகாப்பு, அவர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்புரிமை, அவர்களை இழிவாக நடத்துவதற்கு எதிரான சட்டம், 6. மாவட்டந்தோறும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் ஏற்படுத்துதல், 7. தமிழக அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, 8. மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய 33 சதவீத்துக்கு அழுத்தம் அளித்தல், 9. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான ஆதரவு போன்றவை அதில் முக்கியமானவை.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டிருக்கும் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவை. உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இருக்கும் 30 சதவீத இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும், ஒரு லட்சம் பெண்களுக்குத் தொழில் தொடங்கக் கடனுதவி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. அஇஅதிமுக அறிக்கையுடன் ஒப்பிட்டாலே திமுக-வின் தேர்தல் அறிக்கை பெண்கள் நலன் என்பதைத் தாண்டி விடுதலைப் பாதையில் பெண்கள் வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.
இடதுசாரி இயக்கங்களின் கொள்கை அறிக்கை இரண்டு திராவிட கட்சிகளின் பெண்கள் நலத் திட்டங்களை வழிமொழிவதுடன் சில சிறப்பான கூடுதல் அம்சங்களை முன்வைத்துள்ளன. அவை 1. பாலின நிகர்நிலை கண்ணோட்டத்துடன் (Gender Budgeting) தயாரிக்கப்படும் மாநில அரசின் நிதிநிலை அறிக்கை, 2. வலிமையூட்டப்பட்ட மாநில மகளிர் ஆணையம், 3. பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறப்பு உதவித் திட்டங்கள், 4. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் புகாரளிக்கும் அமைப்புகள், புதிய சட்டங்கள், 5. பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள் போன்றவை.
என்ன தேவை?
இந்தத் தேர்தலில் இடதுசாரி இயக்கங்களும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே அணியிலிருப்பதால் இவற்றை இணைத்துப் பார்க்கலாம். ஆனால், இடதுசாரி இயக்கங்களாக இருந்தாலும், திராவிட கட்சிகளாக இருந்தாலும் பெண்கள் நலன் என்பதில் செலுத்தப்பட்டிருக்கும் அளவுக்குப் பெண்கள் உரிமைக்கான குரல் இல்லை. பெண்கள் நலன், பாதுகாப்பு ஆகிய இரண்டும்தான் அடிப்படையாக நிற்கின்றன. ஆனால், பெண்ணுரிமைச் சமுதாயம் வேண்டுவோர் இவற்றைத் தாண்டியும் பயணித்தாக வேண்டும். எனவே, சில கூடுதல் கோரிக்கைகளை வைப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.
# தங்கள் வேட்பாளர்களில் முதற்கட்டமாக 33 சதவீதம் பெண்களை கட்சிகள் நிறுத்த வேண்டும்.
# இந்து திருமணச் சட்டத்திலிருந்து சுய மரியாதைத் திருமணச் சட்டத்தைப் பிரித்து, அதை அனைத்து மதத்தினருக்கும், மதமற்ற வர்களுக்குமானதாக மாற்ற வேண்டும்.
# விவாகரத்து வழக்குகளில் கணவன், மனைவி இருவரில் ஒருவருக்குச் சேர்ந்துவாழ விருப்பம் இல்லாவிட்டாலும், மணமுறிவு பெறும் வகையில் விவாகரத்துச் சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். விவாகரத்தின்போது தீர்மானிக்கப்படும் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதற்குத் தெளிவான வழிமுறைகள் வேண்டும்.
# ஆடம்பரத் திருமணங்களைக் குற்றமாக்குகிற வகையில் சட்டம் தேவை.
#சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு தர வேண்டும்.
# பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கான கழிப்பறைகளில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
# பெண்களின் நேரம் வருமானம் ஈட்டவும், அரசியல் செயல்பாடுகளில் தடையின்றி ஈடுபடவும் பயன்பட வேண்டுமானால், வீட்டின் சமையல் அறையிலேயே பெருமளவு நேரம் செலவிடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக சுகாதாரமான பொது சமையற்கூடங்கள் (community kitchen) அமைத்து, அனைவருக்குமான உணவு தயாரிப்பை முன்னெடுக்க வேண்டும்.
# பெண் தொழில் முனைவோருக்கான வாரியம் உருவாக்கி, பெண்கள் தொழில் தொடங்குவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
# பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்குச் சலுகைகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
# தனித்து வாழ விரும்பும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் முறையான பராமரிப்புடன் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்
இந்தப் பாதை மிகவும் நீளமானதுதான். ஆனால், பயணத்தைத் தள்ளிப்போட முடியாது. அனைத்துக் கட்சிகளும் இந்தப் பாதையில் பயணிக்க வேண்டியது பெண்ணினத்தின் கோரிக்கை மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும்கூட.
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk