

பாலினச் சமத்துவம் சார்ந்து 25 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ‘வுமன் ஆஃப் இன்ஃபுளூயன்ஸ்’ அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான ‘செல்வாக்கு செலுத்திய 25 பெண்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கும் சாரா அசால்யாவின் வாழ்க்கை, கற்பனைக் கதைகளை விஞ்சக்கூடியது. இத்துடன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று பலரும் சோர்ந்துவிடக்கூடிய இடத்திலிருந்துதான் தன் வாழ்க்கைக்கான புதிய பாதையை சாரா கண்டடைந்திருக்கிறார்.
“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் கனடாவில் குடியேறியபோது குறைந்தபட்ச ஆங்கிலம் மட்டுமே என் துணை. இப்போது இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சாரா. இவர் கடந்துவந்த பாதையைப் பற்றித் தெரிந்துகொண்டால் அந்த ட்விட்டர் செய்தியை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள அகதி முகாம் ஒன்றில் சாரா பிறந்தார். போரால் அகதிகளாக்கப்படுகிறவர்களுக்கு நேரும் அனைத்துத் துயரங்களுக்கும் அந்த முகாமில் இருந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களைப் போலவே சாராவும் ஆளானார். வன்முறை, கட்டாய இடப்பெயர்வு, இவை தரும் மனப்பதற்றம் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அந்த வலியிலிருந்துதான் சாரா வல்லமையைப் பெற்றார். அகதி முகாம் கொடுமைகளால் சமூகநீதி, மனித உரிமைகள் குறித்த புரிதல் வலுப்பெற்றதுடன் பிறருக்காக உதவும் எண்ணமும் வேர்விட்டது.
புதியோருக்கு உதவி
2008இல் காசாவில் நடைபெற்ற போர், சாராவின் வாழ்க்கையில் மாற்றம் நிகழ காரணமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் போர் அச்சம் சூழ்ந்த, மரணத்தின் வாயிலுக்குச் சென்றுதிரும்புகிற இந்த வாழ்க்கையைத் தன் குழந்தைகள் வாழக் கூடாது என சாரா நினைத்தார். கணவன், மகனுடன் கனடாவில் குடியேறினார். புதிய சூழலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவும் தனக்கெனத் தனி அடையாளத்தை உறுதிசெய்யவும் கனடாவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டார். அப்போதுதான் தன்னைப்போலவே கனடாவுக்குக் குடியேறியவர்களின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.
கனடா பல்கலைக்கழகத்தில் தான் எதிர்கொண்ட அனுபவங்கள், தன்னைப் போலவே புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு உதவும் எண்ணத்தை சாராவுக்கு ஏற்படுத்தியது. புலம்பெயர்ந்த மாணவர்களுக்கான அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். அதன்மூலம் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் நிதிநல்கை, ஒதுக்கீடு போன்றவற்றைப் பெறுவது எளிதானது. புலம்பெயர்ந்த பெண்களுக்கான ‘சிஸ்டர்டூசிஸ்டர்’ அமைப்பின் மேலாளராக இருப்பதுடன், அந்தப் பெண்களைப் பொருளாதாரரீதியாக முன்னேற்றுவதற்கான பணியையும் செய்துவருகிறார். ரையர்சன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டும் உதவியாளராகவும் செயல்பட்டுவருகிறார் சாரா. சொந்த மண்ணில் இருந்த தன் வீடு இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டு, மிச்சமிருக்கும் வாழ்க்கை அகதி முகாமுக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் தனக்கான பாதையைக் கண்டதுடன் பிறகுக்கும் வழிகாட்டியாகச் செயல்பட்டுவருகிறார் 32 வயது சாரா.