விண்கலத்தை வழிநடத்தியவர்

விண்கலத்தை வழிநடத்தியவர்
Updated on
1 min read

சிவப்புக் கோள் என அழைக்கப்படும் செவ்வாய்க் கோளில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் தரையிறங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தருணத்தை உலகம் முழுவதும் கொண்டாடக் காரண மானவர்களில் விண்வெளி ஆராய்ச்சி யாளர் ஸ்வாதி மோகனும் ஒருவர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி, ஒரு வயதானபோது அமெரிக்காவில் குடியேறினார். வடக்கு வர்ஜீனியாவில் வளர்ந்தார். ஒன்பது வயதானபோது அவர் பார்த்த ‘ஸ்டார் ட்ரெக்’ என்கிற தொலைக்காட்சித் தொடர் ஸ்வாதியை ஆச்சரியப்படுத்தியது. வேற்றுக் கோளில் நடக்கிறவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த அறிவியல் புனைகதையால் ஈர்க்கப்பட்டுத் தானும் அப்படிப் புதுப் புது உலகங்களுக்குச் செல்ல நினைத்தார். அத்துடன் குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்கிற கனவையும் இணைத்துக்கொண்டார். ஆனால், அது 16ஆம் வயதுவரைதான். அவருடைய இயற்பியல் ஆசிரியர், ஸ்வாதியின் கனவுக்கு வேறு வடிவம் கொடுத்தார். பொறியியலைப் படித்துவிட்டு வானியல் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று நினைத்து அதன்படியே இயந்திர வானியலை முடித்தார். பிறகு வானியலில் முதுநிலைப் படிப்புடன் ஆய்வுப் படிப்பையும் நிறைவுசெய்தார்.

வானியல் ஆய்வில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது நாசாவின் ‘மார்ஸ் 2020’ திட்டம்.

காரணம், இதுவரை பிற கோள்களுக்கு அனுப்பப்பட்ட வான் உயிரியல் ஆய்வுக் கூடங்களிலேயே மிகச் சிறந்தது ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ விண்கலம். அதை வான்வெளியில் அதற்குரிய பாதையில் வழிநடத்தி செவ்வாய்க் கோளில் தரையிறக்கும் பணியைச் செய்த குழுவைத்தான் ஸ்வாதி மோகன் வழிநடத்தினார். இவர்களது குழுவின் பணியை இந்தத் திட்டத்தின் ‘கண்களும் காதுகளும்’ என்கின்றனர். இரண்டையும் வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததால் ஸ்வாதிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாயில் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும், “பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயின் தரையைத் தொட்டுவிட்டது. தன் தேடலைத் தொடங்கவிருக்கிறது” என்று சொன்னார் ஸ்வாதி. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2013ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின் பல்வேறு பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார். கேஸினி எனப்படும் சனிக்கோள் திட்டத்திலும் ஸ்வாதி பங்களித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in