கண்ணீரும் புன்னகையும்: பெண்களைப் பாதிக்கும் பருவநிலை மாறுதல்கள்

கண்ணீரும் புன்னகையும்: பெண்களைப் பாதிக்கும் பருவநிலை மாறுதல்கள்
Updated on
1 min read

உலக அரசியல்வாதிகள் உண்மையிலேயே பாலின சமத்துவத்தில் அக்கறையுடையவர்களாக இருந்தால், பருவநிலை மாற்றம் குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டுமென்று உலக சுகாதார அமைப்பும், டாக்டர்ஸ் ஃபார் க்ளைமேட் ஆக்‌ஷன் அமைப்பும் வலியுறுத்தியுள்ளன. பருவநிலை மாறுதல் தொடர்பாக பாரீஸ் நகரத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பசுமைக்குடில் வாயுக்களை அதிகம் வெளியிடுவதால் உலகமெங்கும் பருவநிலையில் ஏற்படும் மாறுதல்கள் பெண்களையும் அவர்கள் வாழ்வாதாரத்தையுமே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாட்டுப் பெண்கள்தான் பருவநிலை மாறுதல்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர். பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் வெள்ளச்சேதங்கள் மற்றும் வெப்ப அலைத் தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான போதிய உள்கட்டமைப்பை ஏழைநாடுகள் சமாளிக்க முடிவதில்லை.

அதீதமான பருவநிலைகள் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கின்றன. வங்கதேசத்தில் 1991-ல் தாக்கிய சூறாவளிப் புயலில் இறந்த ஒன்றரை லட்சம் பேரில் 90 சதவீதம் பேர் பெண்கள்.

எல்லைப் பாதுகாப்பில் சம அளவில் பெண்கள்

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பிரிவில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் படைப்பிரிவு பணியில் பெண்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவம் தருவதற்கான முதல் முயற்சி இது. இந்திய-சீன எல்லையில், இமாலய மலைத்தொடர்களில் 17 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 40 டிகிரி குளிரில் அவர்கள் பணியாற்ற வேண்டும்.

தற்போது 2 சதவீதம் பெண்களே இப்படையில் வேலையில் இருக்கின்றனர். “எங்கள் படைப்பிரிவில் 50 சதவீத இடத்தைப் பெண்கள் வகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது சாத்தியமாகாவிட்டால் குறைந்தபட்சம் 30 சதவீதத்தை எட்டுவோம்” என்கிறார் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் படையின் தலைமை இயக்குனர் கிருஷ்ணா சவுத்ரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in