

கரோனா பெருந்தொற்றுக் காலம் குழந்தைகளின் அத்தனை உரிமைகளையும் பறித்துவிட்டது. முன்பு ஒரு மாதம் மட்டுமே கோடை விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில், பொதுமுடக்கக் காலமான கடந்த பத்து மாதங்களைப் படிப்பின் வாசனையே இல்லாமல் கடந்துவிட்டார்கள் குழந்தைகள். இணையம், தொலைக்காட்சி அலைவரிசைகள் போன்றவை மூலம் வகுப்புகள் நடந்தாலும் அரசுப் பள்ளி மாணவர்களையும், கிராமப்புற மாணவர்களையும் அவை முழுமையாகச் சென்றடையவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகக் குறையத் தொடங்கிய குழந்தைத் திருமண விகிதம் கரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ளது. இன்னொரு புறம் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இச்சூழலில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தொடர்ச்சியாக வகுப்புகளில் பங்கேற்காத குழந்தைகளின் கற்றலைச் சில வாரங்களில் சரிசெய்துவிட முடியும். ஆனால், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட அல்லது குழந்தைத் தொழிலாளராகப் பெரும் உழைப்பைச் செலுத்தியவர்களின் கற்றல் திறனை மீட்பது மிகப்பெரிய சவால்.
“பள்ளியிலிருந்து பாதியில் நின்ற மாணவர்களை முதலில் கணக்கெடுக்க வேண்டும்” என்கிறார் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் இனியன். “எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளில் எத்தனை பேர் பள்ளிக்கு வரவில்லை என்று கணக்கெடுக்க வேண்டும். அவர்களில் யார் யார் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர், யாருக்குத் திருமணம் நடந்துள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். குழந்தைத் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத திருமணங்கள் என்பதால் அவை செல்லுமா, செல்லாதா என்பது குறித்து அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும்.
குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு உறுதியாக சிந்திக்க வேண்டும். கல்வியாளர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்டவர்களின் கல்வி நலனுக்காக விவாதிப்பது அவசியம். இல்லையேல் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகரிக்கும். பாதிக்கப் பட்டவர்களின் தங்கைகள், தம்பிகளும் அதே பிரச்சினையில் சிக்குவார்கள். எனவே, அவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார் இனியன்.
“அரசும் சமூகமும் கடந்த ஓராண்டாகப் பள்ளிக் குழந்தைகளைக் கைவிட்டு விட்டன. அதில் குழந்தைத் தொழிலாளர்களையும், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு எப்படிக் கல்வி தருவது என்பது விடை தெரியாத பெருங்கேள்வி” என்கிறார் சுடர் நடராஜன். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள பர்கூரில் குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளை நடத்தும் ‘சுடர்’ தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் இவர்.
“அரசின் மதிய உணவுத் திட்டம், குழந்தைத் தொழி லாளர்களாக இருந்து மீட்டெடுக்கப்பட்ட மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகை போன்றவற்றால் மாணவர்களை ஓரளவுக்கே தக்கவைக்க முடியும். அவர்கள் மீண்டும் கல்வியில் ஆர்வம் செலுத்துவதற்கான சூழலை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதலில் மாணவர் மனநிலையை அறிதல், பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு வாழ்வியல் திறன்களை வளர்த் தெடுத்தல், நம்பிக்கை அளிக்கும் வகையில் கலந்துரை யாடுதல், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், ஆவணப்படங்கள் உள்ளிட்ட காட்சி வழி ஊடகங்கள் மூலம் குழந்தைத் திருமணத்தின், குழந்தைத் தொழிலாளர்களின் உடல்/மனநல பாதிப்புகளை எடுத்துரைத்தல் ஆகியவற்றைப் பின்பற்றலாம்’’ என்கிறார் சுடர் நடராஜன்.
மற்றொரு நிதர்சன நிலையை எடுத்துரைக்கிறார் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளரும், பேராசிரியருமான ஆண்ரு சேசுராஜ்: ‘‘கரோனா காலத்தில் எந்தக் குழந்தைக்கும் திட்டமிட்டுத் திருமணம் நடந்திருக்காது. மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம், படிப்பதற்குத் தடையில்லை என்கிற பெற்றோரின் வாக் குறுதியை நம்பித்தான் திருமணத்துக்குள் தள்ளப்பட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது கணவன், மாமனார், மாமியார் உள்ளிட்டவர் களின் தேவையை நிறைவேற்றும் குடும்ப பாரத்தையும் சேர்த்தே சுமப்பார்கள்.
இந்தச் சூழலில் அவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பது, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அவசர அவசரமாக முடிப்பது, தேர்வுக்குத் தயார்படுத்துவது என்று கல்விச் சுமையையும் உடனடியாக அதிகரிக்கக் கூடாது. 100 சதவீதத் தேர்ச்சிக்காக அத்தகைய குழந்தைகளை மற்ற மாணவர் களைப் போல் கையாளக் கூடாது. சாதாரணக் குழந்தைகளைக் காட்டிலும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
அவர்கள் பயந்துபோய் வேலையிலோ அல்லது திருமணம் நடந்ததால் புகுந்த வீட்டிலோ முடங்கும் சூழலை உருவாக்காமல் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களே உளவியல் ஆலோசனை கொடுக்கக் கூடாது. மனநல ஆலோசனை தேவைப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, 24 மணி நேரமும் இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் தமிழக அரசின் 104 மருத்துவச் சேவை, அரசு மருத்துவமனைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் முறையான பயிற்சி பெற்ற கவுன்சலிங் நிபுணர்கள் மூலம் ஆலோசனை பெற உதவ வேண்டும்.
குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது குழந்தைத் தொழிலாளராக மாறியவரை மீண்டும் பள்ளி மாணவியாக மாற்றுவது அரசு - ஆசிரியர்களின் பொறுப்பே. 18 வயதுவரை திருமண வாழ்க்கைக்குள் செல்லாமல், கருவுறாமல், தொடர்ந்து கல்வி கற்பவராக இருக்க வழிகாட்ட வேண்டும். தேவைப்பட்டால் மாணவியின் கணவர், உறவினர்கள், பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுக்கலாம்’’ என்கிறார்.
கரோனா பெருந்தொற்று ஆண்டில் ஐந்து லட்சம் சிறுமிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடந்து முடிவதற்கான அபாயம் இருப்பதாக ‘சேவ் தி சில்ரன்’ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கல்வி வழங்குவதை உறுதிசெய்வது எவ்வளவு அவசியமோ, குழந்தைத் திருமணத்துக்குள் தள்ளப் படாமல் குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதும் அதே அளவுக்கு அவசியம்தான்.
இப்படியும் தீர்க்கலாம்
l குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு போலீஸார் தலைமையில் காவல் துறையினர், சமூகநலத் துறையினர், குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவினர் அடங்கிய பிரத்யேகக் குழு அமைத்து தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து, குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களின் கல்வி வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும்.
l மாணவிகள் தங்களுடன் படிக்கும் சக மாணவிக்குத் திருமண ஏற்பாடு நடந்தாலும் அல்லது தங்களுக்கே திருமண ஏற்பாடு நடந்தாலும், அதைத் தடுத்து நிறுத்த 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். குழந்தைத் திருமணம் நடந்து முடிந்த பிறகும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்பட வேண்டும்.
l எட்டாம் வகுப்புவரை இலவசக் கல்வி என்று இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. பெண்களுக்கு முதுகலைப் பட்டம்வரை இலவசக் கல்வி என்று அந்தச் சட்டத்தின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும். அதன் மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கலாம்.
l அனைத்துப் பள்ளிகளிலும் இலவச காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்க வேண்டும். உண்டு உறைவிடப் பள்ளிகளை அதிகரிக்க வேண்டும்.
l பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு ஜனவரி 2021இல் தொடங்கியுள்ளது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழகத்திலும் இதைச் செயல்படுத்தலாம்.
l குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கல்வி பயில ஒவ்வொரு கட்டத் தேர்விலும் வெற்றிபெற்றால், கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
l குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவதும், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட அத்தனை பேருக்கும் மறுவாய்ப்பாக கல்வி அளிப்பதுமே தமிழக அரசின் 2021ஆம் ஆண்டுக்கான இலக்காக இருக்க வேண்டும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in