

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஐ.நா. சபை அழைப்பு விடுத்திருக்கிறது. வன்முறையை ஒழிக்க உலகை ஆரஞ்சுமயமாக்குவோம் என்ற ஐ.நா.வின் அழைப்பைக் கடந்த வாரம் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழ் முன்மொழிய, நாங்கள் அதை உடனே வழிமொழிந்துவிட்டோம்.
நான் பணிபுரியும் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என்பதை உணர்த்துகிற விதத்தில் அனைவரும் ஆரஞ்சு நிறத்தில் உடையணிந்து வந்தோம். பெண் ஊழியர்களின் இந்த முயற்சிக்கு ஆண்கள் அனைவரும் ஆதரவு தந்தது மாற்றத்துக்கான அறிகுறியாக அமைந்தது.
உணவு இடைவேளையின்போது நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய எங்கள் கோட்ட மேலாளர், “பெண்களுக்கு எதிரான வன்முறை கண்டிக்கத்தக்கது. நம் கண்ணெதிரில் நடக்கும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உறுதுணையாக நிற்பதுடன் அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்” என்றார். “நாலு பேருக்கு முன்னால் மனைவியைக் கேவலமாகப் பேசுவதும் வன்முறையே” என்று முத்தாய்ப்பு வைத்தார் வணிக மேலாளர்.
நிகழ்ச்சியின்போது பெண் ஊழியர்கள் அனைவரும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்து விவாதித்தனர். அதில் சில:
“என்னதான் பெண்கள் படித்து, வேலைக்குப் போனாலும் கணவனிடம் அடிவாங்கி, மறுபேச்சு பேசாமல் மனதுக்குள் புழுங்கும் நிலைதான் பெரும்பாலும் இருக்கிறது.
ஆண்கள் முற்போக்குவாதியாக இருந்தாலும் ஏதாவது ஒரு கணத்திலாவது அவர்கள் மனதில் ஆணாதிக்கச் சிந்தனை தலைதூக்குகிறது.
குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுத்தருவதுடன் வன்முறை என்பது கீழ்த்தரமானது என்ற சிந்தனையோடு வளர்க்க வேண்டும்”.
அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதுடன் அவற்றைச் செயல்படுத்தவும் முயற்சிப்போம் என்று உறுதியெடுத்துக்கொண்ட அந்த நாள் உண்மையிலேயே அற்புதமானது!
- இரா. பொன்னரசி, வேலூர்.