

ஆண்களே விவசாயிகளாக அறியப்படு கிற இந்தியச் சமூகத்தில் 80 சதவீத விவசாயப் பணிகளைப் பெண்கள்தாம் செய்கிறார்கள். இருந்தபோதும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவு. பெரும்பான்மையான பெண்கள் விவசாயக் கூலிகளாகவே இருக்கின்றனர். ஒரு நாளின் 16 மணி நேரத்தை வீட்டு வேலைகளிலும், விவசாய நிலத்திலும் கழிக்கும் விவசாயக் கூலிப் பெண்களின் வாழ்வாதாரத்தை கரோனா கால ஊரடங்கு குலைத்துப் போட்டுவிட்டது.
ஆய்வுக்காக, விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருக்கும், மிக பின்தங்கிய சூழல் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தின் சோழியசொற்குளம் என்கிற கிளைப்பஞ்சாயத்தை எடுத்துக்கொண்டோம்.
இங்கே ஆண்களுக்கு ஒரு நாள் விவசாயக் கூலி ரூ. 500, பெண்களுக்கு ரூ. 100. பெண்களுக்குக் கடந்த ஆண்டுவரை 80-90 ரூபாய் என இருந்த கூலி, 2020-ம் ஆண்டுதான் ரூ.100 ஆக ஆக்கப்பட்டுள்ளது.
அரை ஏக்கர் முதல் 4-5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருப்பவர்களே அதிகம். சொந்த நிலம் வைத்திருந்தாலும் வறட்சி, பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக மற்றவர்கள் நிலத்தில் வேலை செய்யும், ஓலை வீடுகளில் வசிக்கும், 'நிலமுள்ள கூலிகள்' பெரும்பான்மையாக உள்ளனர்.
நிலமுள்ளவர்கள் விவசாயம் செய்வதற்கான முதலீடே, பெண்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் கிடைக்கும் சொற்ப வருமானமும், தங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருக்கும் புதுச்சேரி போன்ற வெளியூரில் வேலைசெய்யும் ஆண்களின் கூலியும்தான். கரோனா காலம் அதற்கும் உலைவைத்துவிட்டது. உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டனர். பூக்களைத் தெருவில் கொட்டி, மிளகாய்களை வயலிலேயே கருகவிட்டு, மூட்டைக்கு ரூ.3,000 குறைவாகக் காராமணியை விற்று, விற்ற பொருட்க ளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல், ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என சராசரியாக ஒவ்வொரு பெண் கூலித் தொழிலாளியும் நான்கு வகையான கடன்களை இன்றைக்குச் சுமக்கிறார்.
அதிகரிக்கும் கடன் சுமை
அரசு வங்கிகளில் கடன் பெற நிலத்தை அடமானம் வைக்க வேண்டியிருப்பது, ஏக்கருக்கு இவ்வளவுதான் கடன் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருப்பதால், பெரும்பாலானவர்கள் தங்களை நம்பிக் கடன் தரும் தனியார் நிதிநிறுவனங்களிடம் (Micro finance) அதிக வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள். தனியார் சிலர் குறைந்த வட்டியில் வங்கியில் கடன் வாங்கி, அந்தப் பணத்தை அதிக வட்டிக்கு இவர்களைப் போன்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
'தமிழ்நாடு வுமன் கலெக்டிவ்' (Tamilnadu Women Collective) அமைப்பின் நிறுவனர் ஷீலு, "ஏப்ரலில் 62 தமிழகக் கிராமங்களிலும் செப்டம்பர் மாதத்தில் 66 கிராமங்களிலும் நாங்கள் கணக்கெடுப்பு நடத்தினோம். இதில், ஏப்ரல் மாதத்தில் பெண்களிடையே 24 சதவீதமாக இருந்த பசிப் பிரச்சினை, 6 மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதத்தில் 42 சதவீதமாக அதிகரித்திருந்தது. இந்த விகிதம் இப்போது இன்னும் அதிகரித்திருக்கும். வீட்டு உணவுத்தேவையை நிறைவேற்ற வீட்டிலிருந்த பாத்திரங்கள், ஆடு, மாடுகளை பெண்கள் விற்றுள்ளனர்.
பெண்களுக்கு விவசாயி என்கிற அங்கீகாரம் இல்லாததால் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. சில பெண்கள் தனியாகவோ குழுவாகவோ நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகின்றனர். அவர்களுக்கு உழவர் அட்டையோ, கிசான் கிரெடிட் கார்டோ கிடைக்காது. எனவே, மத்திய அரசின் 6,000 ரூபாய் நிதியுதவி அவர்களுக்குக் கிடைக்காத சூழல் உள்ளது" என்கிறார்.
விவசாயக் கூலிப் பெண்களை அங்கீகரித்து, அவர்களைக் கைதூக்கிவிடும் திட்டங்களின் தேவையை கரோனா கால நெருக்கடி அதிகரித்துள்ளது. கல்விச் செயல்பாடுகளின் வழியே உருவாக்கப்படும் பாலினச் சமத்துவத்தைவிட, நேரடியான சமூகப் பொருளாதார விளைவுகளை உருவாக்கும் திட்டங்களாக இவை அமையும்.
கரோனா தொற்றினால் ஏற்பட்ட பாலின ரீதியிலான தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்கிய 'மீனா சுவாமிநாதன் ஊடகக் கூட்டாய்வுக்காக' பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் முக்கிய சாராம்சம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in