இல்லத்தரசியும் உழைப்பாளியே

இல்லத்தரசியும் உழைப்பாளியே
Updated on
1 min read

வீட்டுவேலை செய்து முதுகொடிந்துபோகும் பெண்களின் உழைப்பு புறக்கணிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் புதிய செய்தியல்ல. ஆனால், வேலைசெய்து சம்பாதிக்கும் ஆணுக்கு நிகரானதுதான் வீட்டை நிர்வகிக்கும் பெண்ணின் வேலை என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு புதியது; வரவேற்கத்தக்கது!

டெல்லியில் 2014-ல் நடந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து ஜனவரி 5 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டை ரூ.11.2 லட்சத்திலிருந்து ரூ.33.2 லட்சமாக உயர்த்தியதுடன், அதை 2014ஆம் ஆண்டிலிருந்து 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டுத் தர வேண்டும் என்று நீதிபதிகள் என்.வி.ரமணா, சூர்யகாந்த் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பில் இல்லத்தரசிகள் குறித்து சிலவற்றை நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது.

தீ விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அந்தப் பெண்ணின் வீட்டு வேலைகளுக்கான தோராய சம்பளத்தை அடிப்படையாகக்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2001இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

“2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 15.98 கோடிப் பெண்கள் வீட்டு வேலையைத் தங்கள் முதன்மைத் தொழிலாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், 57.9 லட்சம் ஆண்கள் மட்டுமே வீட்டு வேலைசெய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். வீட்டு வேலைக்குச் செலவிடும் நேரம் குறித்த தேசிய கணக்கெடுப்பு ஒன்றில் பெண்கள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தை வீட்டு வேலைகளுக்காகச் செலவிட, ஆண்களோ ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்குகின்றனர்.

வீட்டு வேலைக்கு 16.9 சதவீத நேரத்தையும் குடும்ப உறுப்பினர்களை வளர்ப்பது, பாதுகாப்பது போன்றவற்றுக்காக 2.6 சதவீத நேரத்தையும் பெண்கள் செலவிட ஆண்களோ அவற்றுக்காக 1.7 சதவீதம் மற்றும் 0.8 சதவீத நேரத்தை மட்டுமே செலவிடுகின்றனர்” என்று நீதிபதி ரமணா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கணக்கில் வராத உழைப்பு

இல்லத்தரசிகள் செய்யும் வீட்டு வேலைகளைக் கணக்கிட்டால் ஆச்சரியமே மிஞ்சும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சமைப்பது, சுத்தம்செய்வது, வீட்டு உறுப்பினர்களைப் பரமாரிப்பது, வருமானத்துக்கு ஏற்ப குடும்பத்தை நடத்துவது என்று ஏராளமான வேலைகளைப் பெண்கள் செய்கிறார்கள் என்றும் கிராமப்புறப் பெண்கள் விதைத்தல், அறுவடை செய்தல், கால்நடைகளைப் பராமரித்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“வேறு வழியில்லாமலோ சமூக/பண்பாட்டு நெருக்கடிகளாலோ வீட்டு வேலையைச்செய்யும் பெண்களின் பன்முகத் திறனுக்குத் தரும் அங்கீகாரம்தான் அவர்களின் உழைப்புக்கான ஊதியமாகத் தோராயமான ஒரு தொகையை நிர்ணயிப்பது. மாறிவரும் மனநிலையின் வெளிப்பாடுதான் இந்தத் தீர்ப்பு.

சமூக சமத்துவத்தையும் ஒவ்வொரு மனிதரின் கண்ணியமான வாழ்க்கையையும் கோரும் நம் அரசியலமைப்பின் இலக்கை அடைவதற்கான சிறு நகர்வு இது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஊதியமோ வேறு எந்தவிதமான அங்கீகாரமோ இல்லாத இல்லத்தரசிகளின் உழைப்பையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்கிற இந்தத் தீர்ப்பு, மாற்றத்துக்கான தடம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in