திருநங்கையருக்கு மரியாதை

திருநங்கையருக்கு மரியாதை
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்றுப் பேரிடர் அனைவரையும் போலவே திருநங்கை உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஆனால், வழக்கம்போல் அதிலிருந்தும் மீண்டுவருவதற்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது ஸ்வேதாவின் ‘சாதிக்கப் பிறந்தவர்கள்’ சமூக அமைப்பு. ‘பார்ன் டு வின்’ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு எட்டாம் ஆண்டாகத் திருநங்கை நாள்காட்டியை அண்மையில் வெளியிட்டது.

முன்னுதாரண காலண்டர்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் திருநங்கைகளை முன்னுதாரண மாகப் பொதுவெளியில் அடையாளப்படுத்த 2013இல் தொடங்கப்பட்ட ‘பார்ன் டு வின்’ அறக்கட்டளை மூலம் 2014இல் முதல்முறை யாக நாள்காட்டி வெளியிடப்பட்டது. “நாள்காட்டியின் வழியாக முன்னோடி திருநங்கைகளை வெளிக்கொணர்ந்ததில் நாம் முன்னோடிகள்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஸ்வேதா.

குடும்பச் சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறும் இளம் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்விக் கனவை நனவாக்க இந்த அமைப்பு உதவுகிறது. அத்துடன் தையல், சோப்புத் தயாரிப்பு, அடுமனை போன்ற தொழில்களை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது. இவர்களுக்கென்றே தையல் பிரிவு, அடுமனைப் பிரிவு போன்ற வையும் இயங்குகின்றன. 2021ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வெளியீட்டு விழாவில் இவர்களே தயாரித்த கேக், பிஸ்கட்களைப் பரிமாறியதில் அவர்களின் கைவண்ணமும் கைமணமும் வெளிப்பட்டன.

விரும்பும் படிப்பைப் படிப்பதற்கு உதவுவதோடு, படிப்புக்குப் பின் அவர்கள் சிறுதொழில் செய்வதற்கு விரும்பினால் அதற்கான கடன் உதவியையும் வங்கி களின் மூலமாகப் பெற்றுத்தர உதவுகிறது இந்த அமைப்பு.

திருநம்பிகளுக்கும் உதவி

திருநம்பிகளையும் ஆதரித்து, ஆலோசனை வழங்கி, அவர்களுக்கான பணி வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகின்றனர். அவர்களின் கருத்துகளை மேடையில் சொல்லவைப்பதன் மூலமாக அவர்களைப் பற்றிய சமூகத்தின் தவறான பார்வையையும் போக்கிவருகின்றனர். 2021 நாள்காட்டியில் இடம்பிடித்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநம்பி தாரன், தற்போது சென்னை மாநகராட்சியின் கோவிட் விழிப்புணர்வுத் திட்டப்பணி கண்காணிப்பாளராக இருக்கிறார். மற்றொரு திருநம்பி பிரதீஷ், ஃபோர்டு நிறுவனத்தில் சில காலம் பணி செய்துவிட்டுத் தற்போது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக இருக்கிறார்.

“இசை, பக்தி, தொழில்முனைவோர், கல்வி, அழகுக் கலை இப்படி ஒவ்வொரு பிரிவிலும் சாதனை புரிந்த திருநங்கை களைக் கொண்ட காலண்டர்களை வெளியிட்டு வருகிறோம். மூன்றாம் பாலினத்தவருக்கான கல்வி, பணிகளில் இடஒதுக்கீட்டை தருவதற்கு அரசு சார்ந்த அமைப்புகளிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். அரசு இடஒதுக்கீடு கிடைப்பதில்தான் மாற்றுப் பாலினத்தவருக்கான எதிர்காலம் இருக்கிறது” என்கிறார் ஸ்வேதா.

காலண்டரைப் பெற தொடர்புக்கு: 9941887862

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in