

உழவர்கள் விளைவித்த பொருள்களை உண்பதைத் தவிர அவர்களுக்கும் நமக்கும் தொடர்பில்லை என்று பலரும் நம்புகிறோம். அதைப் போன்றதுதான் உழவர்கள் நடத்திக்கொண்டிருக்கிற போராட்டத்துக்கும் நமக்கும் தொடர்பில்லை என்று நினைத்துக் கடந்துசெல்வது. ஆனால், மூன்று தலைமுறையாக வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டிருக்காத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், உழவர்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். உழவர்கள் தரப்பில் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண்ணும் அவர்தான். அவர், ‘நீடித்த, நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்’பைச் (ASHA) சேர்ந்த கவிதா குருகந்தி.
உழவர் என்றதும் நம் மனக் கண்ணில் தோன்றும் சித்திரம் என்ன? ஏர்க்கலப்பையுடனோ டிராக்டர் மீது அமர்ந்தபடியோ இருக்கும் ஆணின் தோற்றம்தானே. இது உண்மைக்குப் புறம்பான முழுக் கற்பனை என்று மூடநம்பிக்கைகளை உடைக்கிறார் கவிதா குருகந்தி. இந்தியாவில் கிட்டத்தட்ட பத்து கோடிப் பெண் உழவர்கள் இருக்கின்றனர் என்று கூறும் இவர், வேளாண் பணிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை பெண்களே மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார். நாற்பது நாள்களுக்கும் மேலாகத் தொடரும் உழவர்களின் அறப்போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றிருப்பதை இதன் தொடர்ச்சியாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.
அறிவில் சிறந்த பெண்கள்
கவிதா குருகந்தி, ஹைதராபாத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஆய்வுப் பணிக்காக தெலங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்துக்குச் சென்றார். அந்தப் பயணம், கவிதாவின் வாழ்க்கைப் பாதையை திசைதிருப்பிவிட்டது. படிப்பறிவற்ற, வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட பெண்களின் வேளாண்மை குறித்த மரபறிவும் திறமையும் கவிதாவை வியக்கவைத்தன.
குறிப்பாகப் பருவத்துக்கு ஏற்பவும் குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் தானியங்களை உற்பத்திசெய்யும் பெண்களின் ஆழ்ந்த வேளாண் அறிவு அவரைக் கவர்ந்தது. அதனால், மேற்படிப்பு முடித்ததும் கிராமத்துக்கே குடிபெயர்ந்துவிட்டார். அன்றிலிருந்து உழவர்களின் நலனுக்காகப் பணியாற்றிவருகிறார்.
பெண் உழவர்களுக்கு அங்கீகாரமும் அடையாளமும் தரும் நோக்கில் 24 மாநிலங்களைச் சேர்ந்த பெண் உழவர்கள், வேளாண் சங்கத்தினர், ஆராய்ச்சியாளர்கள், பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்க ளுடன் சேர்ந்து ‘மகிளா கிசான் அதிகார் மன்ச்’ (MAAKAM) அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறார்.
1950-களில் நிலவிய உணவுப் பஞ்சத்தைக் களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ பிற்காலத்தில் ஏற்படவிருந்த ஆபத்தைக் கண்டுகொள்ளாததைப் போலவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை ஆதரிப்பதும் ஆபத்தை நோக்கிய அவசரப் பயணமே என்கிறார் கவிதா. மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக 15 ஆண்டுகளாகப் போராடிவருகிறார்.
எவ்வித நெறிமுறையும் இல்லாமல் தயாரிக்கப்படும் விதைகளை அதிக மகசூல் தரும் என்கிற ஆர்வத்துடன் உழவர்கள் பலர் பயன்படுத்துவது வேதனைக்குரியது என்கிறார். மரபு விதைகளையும் வேளாண் முறைகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்பது இவர்களுடைய அமைப்பின் செயல்பாடுகளில் முதன்மையானது.
‘அவன்’ அல்ல ‘அவள்’
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள குறை பாடுகளை எதிர்த்து, உழவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறார் கவிதா. 41 விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசித்து அவர்களின் குரலாகவும் இவர் செயல்படுகிறார். இரண்டு வேளாண் மசோதாக்களின் திட்டவரைவில் கவிதா பங்களித்திருக்கிறார்.
அதில் உழவரைக் குறிப்பிடும் இடத்தில் எல்லாம் ‘She’ என்று குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்த மக்களவை ஆலோசகர் ஒருவர் அனைத்தையும் ‘He’ என்று மாற்றிவிட்டார். வரைவைச் சரிபார்த்தபோது இதைக் கண்டறிந்த கவிதா, அனைத்தையும் மீண்டும் ‘She’ என்றே மாற்றச் சொன்னாராம். அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டால் பெண்களை உழவர்களாக அங்கீகரித்த பெருமையை நாம் பெறலாம்.
“உழவர்களின் தற்கொலையைத் தடுப்பது, எந்த நிலையிலும் பின்வாங்கக் கூடாது என்பதை கவிதா வலியுறுத்துகிறார். வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்த வேண்டும். கடன் வழங்குவது, கடனைத் தள்ளுபடி செய்வது போன்றவற்றைவிட இது முக்கியமானது. வேளாண்மையிலும் கார்ப்பரேட்டுகள் நுழைவது ஆபத்தானது என்பதும் ‘ஆஷா’ அமைப்பின் நிலைப்பாடு.
இது சிறு, குறு உழவர்களைப் பாதிக்கும். உழவர்களின் கட்டுப்பாட்டில் சந்தை இருக்கும் வரைதான் அவர்கள் பிழைத்திருக்க முடியும். வெளிநாடு களில் செயல்படுத்தப்பட்டுத் தோல்விகண்ட இந்தத் திட்டத்தை இங்கே செயல்படுத்த முயல்வது உழவர்களைப் பாதிக்கும் என்பதை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கவிதா” என்கிறார் ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்’பைச் சேர்ந்த அனந்து.
கவிதா குருகந்தி வேளாண்மை சார்ந்த பின்னணியைக் கொண்டவரல்ல என்றபோதும் உழவர்களுடனான அவரது பிணைப்பு உயிர்ப்புடையது. அதுவே உழவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து அவரைச் செயல்பட உந்தித்தள்ளிக்கொண்டு இருக்கிறது.