Published : 20 Dec 2020 03:14 am

Updated : 20 Dec 2020 09:50 am

 

Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 09:50 AM

விடைபெறும் 2020: மாற்றங்கள் கண்டோம்!

we-saw-changes

தொகுப்பு: நிஷா

பெண்களின் மனோதிடமும் செயல்திறனும் கேள்விக்கு அப்பாற்பட்டவை. சவால்மிக்க ஆண்டாக விளங்கிய இந்த 2020ஐ அவர்கள் சமாளித்த விதம் ஒப்பிட முடியாதது. கரோனா ஏற்படுத்திய உடல்/மன நல பாதிப்புகள், பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதார பாதிப்புகள், அதிகரித்த குடும்ப வன்முறை போன்ற இன்னல்களை மீறியே இந்த ஆண்டும் பெண்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். உலக அளவில் கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டதில், ஆண்களைவிடப் பெண்களே பெரும் பங்கு வகித்தனர்; வகித்து வருகின்றனர். 2020இல் பெண்கள் சந்தித்த ஆக்கபூர்வ மாற்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு:

சொத்தில் சம உரிமை


சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை அளித்த இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005இல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, 25.3.1989க்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தங்கள் பூர்விகச் சொத்தில் பங்கு கேட்க முடியாது. இது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பூர்விகச் சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமையை யாரும் மறுக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

களமிறங்கிய ‘குடும்ப ஸ்ரீ’

‘குடும்ப ஸ்ரீ’ கேரளப் பெண்கள் சுயஉதவிக் குழு. இதில் 43,93,579 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வறுமையை ஒழிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பேரழிவுக் காலங்களில் மக்களுக்கு உதவ முதலில் களமிறங்கும். கரோனா காலத்திலும் அதுபோலவே களமிறங்கியது. மக்களுக்கு உணவு வழங்கியது, கவுன்சலிங் கொடுத்தது, கரோனா குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டது.

படைத்தளத்திலும் சரிநிகர்

இந்திய ராணுவத்தில் 1992ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்ற பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கட்டளைகளைப் பிறப்பிக்கும் ‘காமண்டர்’ பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்து 332 ராணுவ வீராங்கனைகள் 2010இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு பிப்ரவரி 17 அன்று நடத்தப்பட்டது. “ராணுவத்தில் பணியாற்றும் அனைத்துப் பெண் அதிகாரிகளுக்கும் உயர் பதவிகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

கருக்கலைப்பு சட்டத் திருத்தம்

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள கருக்கலைப்பு திருத்தச் சட்டத்தில் 20 வாரமுள்ள கருவைக் கலைக்க ஒரு மருத்துவரின் ஒப்புதலே போதுமானது. 20 முதல் 24 வாரமுள்ள கருவைக் கலைப்பதற்கான புதிய பிரிவு சேர்க்கப்படவுள்ளது. அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு இரண்டு மருத்துவர்களின் கருத்து தேவை. தாயின் உடல்நிலை அல்லது சிசுவின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு மனிதாபிமான முறையில் சட்டப்படியான, பாதுகாப்பான கருக்கலைப்பு பெண்களுக்குக் கிடைக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1971-ல் கொண்டுவரப்பட்ட மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் 20 வாரம் நிறைவடைந்த கருவைக் கலைக்க இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் கட்டாயமாக இருந்தது.

கரோனாவை வென்ற பெண் தலைவர்கள்

தைவானின் சாய் இங்-வென், நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டெர்ன், ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட பெண் தலைவர்கள், ஆட்சித் திறன், இடையறாத முயற்சிகள், சலிப்பற்ற முனைப்பு போன்றவற்றால் கரோனா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றினர். இந்தியாவில் கரோனாவைத் துணிச்சலாக எதிர்கொண்ட மாநிலம் கேரளம். அதற்கு முதன்மைக் காரணம் கேரள சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா. உலக அளவில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்ததில் பெண்களுக்கே பெரும் பங்கு உண்டு என்பதற்கு இவர்களின் செயல்பாடுகளே சான்று.

நிறமல்ல, ஆரோக்கியமே அழகு

சிவப்பாக இருப்பதே அழகு என்றும் அதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணருவதற்கும் 'ஃபேர் அண்ட் லவ்லி' க்ரீம் காரணமாக இருக்கிறது என ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. இந்நிலையில் முகப்பொலிவு க்ரீமான ‘ஃபேர் அண்ட் லவ்லி’யில் உள்ள ‘ஃபேர்’ என்கிற வார்த்தை நீக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. சிவப்பழகு குறித்த சிந்தனையை இந்த அறிவிப்பு முற்றிலும் மாற்றிவிடாது என்கிற போதும், மாற்றத்துக்கான தொடக்கப் புள்ளியாக இதைக் கருதலாம்.

மாதவிடாய் விடுமுறை

பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெண்க ளுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியமும் ஊக்கத்தொகையும் கொண்ட இரண்டு நாள் விடுப்பை அறிவித்தது. இந்த விடுமுறைக்காக விண்ணப்பிப்ப தற்குப் பெண்கள் எந்தவிதத் தயக்கமும் கொள்ளத் தேவை யில்லை. இந்த விடுமுறை திரு நங்கைகளுக்கும் பொருந்தும். பெண்களுக்குப் பேறுகாலத்தில் மட்டும் விடுப்புடன் கூடிய விடுமுறை நடைமுறையில் இருக்கும் நிலையில், மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அறிவித்துள்ள இந்நிறு வனத்தின் நடவடிக்கை பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

நான்கு பெண்களுக்கு நோபல்

வேதியியலுக்கான நோபல் பரிசை ஜெர்மனியின் இமானுயேல் ஷார்பென்டியே, அமெரிக்காவின் ஜெனிஃபர் டௌட்னா (அறிவியல் பிரிவில் நோபல் பரிசை பகிர்ந்து பெற்றுக்கொள்ளும் முதல் பெண்கள் குழு), இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவராக அமெரிக்காவின் ஆண்ட்ரியா கெஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் லூயிஸ் க்ளக் ஆகியோர் இந்த ஆண்டு பெற்றனர். நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. இந்த ஆண்டு நான்கு பெண்கள் நோபல் பரிசு பெற்றிருப்பது கொண்டாடத்தக்கது.

திருநங்கைக்குக் குடும்பச் சொத்தில் பங்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அன்புராஐன் 2012ஆம் ஆண்டு திருநங்கையாக மாறி ஊர்வசி எனப் பெயர் மாற்றம் செய்துகொண்டார். திருநங்கை ஊர்வசிக்குத் தாயாரின் சொத்தைப் பிரித்துத் தர அவருடைய சகோதரர்கள் மறுத்திருந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மூன்றில் ஒரு பங்கு சொத்தை ஊர்வசிக்கு வழங்க உத்தரவிட்டார். தமிழகத்தில் திருநங்கைக்குக் குடும்பச் சொத்தில் பங்கு பிரித்துத் தரப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

பெண் புரோகிதர் நடத்திய திருமணம்

சென்னையைச் சேர்ந்த சுஷ்மா - விக்னேஷ் இரு வரின் திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்றது. திருமணத்தின் மூலம் பாலினச் சமத்துவத்தை எடுத்துரைக்க மைசூருவைச் சேர்ந்த பிரம்மரம்ப மகேஸ்வரி என்னும் பெண் புரோகிதர் திருமணத்தை நடத்தினார். “எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பெண் புரோகிதர்க ளாலும் செயல்பட முடியும். திருமணங்களை நடத்த அவர்களை அழைத்து ஊக்கு விக்க வேண்டும்'' என்கிறார் சுஷ்மா.

முதல் துணை அதிபர்

தமிழகத்தைப் பூர்விகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்குத் தேர்வான முதல் ஆசிய, ஆப்ரிக்க - அமெரிக்கப் பெண்.

முதல் பெண் அதிபர்

கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கத்ரீனா சக்கெல்லரோபோலு பதவியேற்றார்.

முதல் அமைச்சர்

நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சராக பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் ரஃபேல் விமானி

அதிநவீன ரஃபேல் போர் விமானத்தை இயக்கவிருக்கும் முதல் இந்தியப் பெண் என்கிற வரலாற்றைப் படைத்திருக்கிறார் வாராணசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங்.

முதல் பைலட்

‘மிக் 21’ ரக போர் விமானத்தைத் தனியாக ஓட்டிச் சென்றதன் மூலம், போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்கிற பெருமையை அவனி சதுர்வேதி பெற்றார்

முதல் விமானப் பொறியாளர்

சண்டிகரைச் சேர்ந்த விமான லெப்டினென்ட் ஹினா ஜெய்ஸ்வால் முதலாவது பெண் விமானப் பொறியாளராக இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் தலைமை

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் 144 ஆண் வீரர்களைக் கொண்ட ஓர் அணிக்குத் தலைமை வகித்த முதல் பெண் வீராங்கனையானார் 26 வயது பாவனா.

முதல் மாலுமி

சென்னையில் பிறந்து உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கும் ரேஷ்மா நிலோஃபர், இந்தியாவின் முதல் பெண் மாலுமி.

முதல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

அரசு ஆம்புலன்ஸ் வாகனமான 108 சேவையின் முதல் பெண் ஓட்டுநர் என்கிற பெருமையை தமிழகத்தின் வீரலட்சுமி (30) பெற்றுள்ளார்.

முதல் ஐபிஎஸ் அதிகாரி

யூ.பி.எஸ்.சி. தேர்வு மூலம் குமரியிலிருந்து தேர்வான முதல் பெண் ஐ.பி.எஸ். என்கிற பெருமையை பிரவீணா (27) பெற்றிருக்கிறார்.


மாற்றங்கள் கண்டோம்2020பெண்களின் மனோதிடம்பெண்கள்கரோனாசொத்தில் சம உரிமைகுடும்ப ஸ்ரீகருக்கலைப்புபெண் தலைவர்கள்நிறம்மாதவிடாய் விடுமுறைபெண்களுக்கு நோபல்திருநங்கைபெண் புரோகிதர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x