

சிறிய வயதில் கற்கும் அனைத்தும் எந்த வயதிலும் கை கொடுக்கும் என்பது உண்மை. அரக்கோணத்தைச் சேர்ந்த சோபியா, கைவினைக் கலைஞர். மூன்றாம் வகுப்பு படித்தபோது தனது ஆசிரியை ஃபிலோமினா கற்றுக்கொடுத்த கைத்தொழிலை இன்றுவரை விடாமல் தொடர்கிறார். அதில் தன் கற்பனையைக் கலந்து மேம்படுத்திச் செய்துவருகிறார்.
களிமண்ணால் அவரே செய்த உருவங்களை நெருப்பில் சுட்டு, பலவித அணிகலன்களாக மாற்றி ஆச்சரியப்படுத்துகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்க்கும் அவர், பகுதி நேரமாக, சுட்ட களிமண்ணால் கைவினைப் பொருட்கள் செய்கிறார். முழுவதும் கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காக இவர் அச்சுக்களைக்கூடப் பயன்படுத்துவதில்லை.
காதணிகள், கையணிகள், தலையணிகள், செல்போன் வைத்துக்கொள்ள உதவும் அழகிய கைப்பகள், அழகிய சிறிய அன்பளிப்பு பைகள் உட்பட சிறுமிகளுக்கான அலங்கார உடைகள் என தனது கைவண்ணத்தையும் கற்பனையையும் ஒன்றிழைத்துக் கலைப் பொருட்களைச் செய்கிறார் சோபியா.
சுட்ட மண் உருவங்களுக்கு ‘வார்னிஷ்’ பூசி அவை உலோகத்தில் செய்யப்பட்டவை போலத் தோற்றம் அளிக்கச் செய்கிறார். கனம் குறைவாக இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. களிமண்ணைப் பக்குவமாகச் சுட்டெடுப்பதால் இந்த நகைகள் கீழே விழுந்தாலும் பெரும்பாலும் உடைவதில்லை. இவற்றின் மீது ‘வார்னிஷ்’ பூசப்படுவதால் தண்ணீர் பட்டாலும் வண்ணம் போய்விடாது என்கிறார் சோபியா. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்குக் கைவினைப் பொருட்கள் செய்யும் முறையைக் கற்றுத்தந்திருக்கும் இவருக்கு, அப்துல் கலாம் கூறிய, ‘கனவு என்பது தூங்கவே விடாதது’ என்ற வார்த்தைகளே வேதம் என்கிறார்.
காலத்திற்கு ஏற்றாற்போல் இந்த நகைகள் டிரண்டியாக இருப்பதே இந்தக் கலையின் புதுமை என்கிறார் சோபியா.