

உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புறப் பெண்களின் பிரச்சினைகள் குறித்த செய்திகளை வெளியிடும் வார செய்திப்பத்திரிகை ‘கபர் லகாரியா’. இதன் ஆசிரியர் கவிதாவையும் அவருடன் பணிபுரியும் மூன்று சக பத்திரிகையாளர்களையும் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசித் துன்புறுத்தியதற்காக சதாம் என்ற நிஷூ சென்ற மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
‘கபர் லகாரியா’, முழுமையாக பெண்களுக்காக பெண்களாலேயே 2002-ம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் செய்திப் பத்திரிகை. 2009-ல் யுனெஸ்கோ கல்வியறிவு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட வார இதழும்கூட. ஒரு பத்திரிகையாளராக இருந்தும், தங்கள் புகாரை காவல் துறையினர் அத்தனை தீவிரமாக முதலில் எடுத்துக் கொள்ளவில்லையென்பதைப் பகிர்ந்துகொண்ட கவிதா, இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் சாதாரணப் பெண்களுக்கு எப்படி உடனடித் தீர்வு கிடைக்கும் என்று கேட்கிறார்.
பிராந்திய மொழிப் பத்திரிகைகளில் அதிகமாக ஆண்களே ஆதிக்கம் செய்கின்றனர் என்றும் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியிருக்கிறார்.
பக்கவிளைவுகள் அற்றதா குடும்பக் கட்டுப்பாடு ஊசி?
தேசியக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் மத்திய அரசு குடும்பக் கட்டுப்பாடு ஊசி மருந்தான டி.எம்.பி.ஏ-வை (Depot-medroxy progesterone acetate (DMPA) அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதலைத் தடுக்க அரசு மருத்துவமனைகளில் தற்போது செயல் படுத்தப்படும் நடைமுறை களைவிடப் புதிதாக அறிமுகமாகவிருக்கும் ஹார்மோன் ஊசி மருந்து பெண்களுக்கு ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் குறித்து விவாதங்களும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியைப் போடுவதன் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறையை எளிமையாக்குகிறது இந்த ஊசிமருந்து. ஆனாலும் நீண்டகாலம் இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் எலும்புகளில் புரதமும் தாதுச்சத்தும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். எப்படியிருப்பினும் டி.எம்.பி.ஏ-வைப் பயன்படுத்துவதற்கு முன்னர் பெண்கள் முறையாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
நடன பார்களுக்குத் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மகாராஷ்டிரத்தில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் பெண்கள் நடனமாட தடைவிதித்து மாநில அரசு 2005-ல் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் தடைவிதித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக மகாராஷ்டிரத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகள், பெண்களின் கவுரவத்தைப் பாதுகாப்பதாகக் கூறி நடனங்களை ரத்துசெய்திருந்தன.
ஆனால் இந்த நடனத் தொழிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இந்தத் தடையை எதிர்த்துவந்தனர். மகாராஷ்டிரத்தில் இருக்கும் 2 ஆயிரத்து 500 நடன விடுதிகளில் 75 ஆயிரம் பெண்கள் நடனத் தொழிலை நம்பி வாழ்ந்து வந்தனர்.
இத்துடன் 75 ஆயிரம் சமையல்காரர்கள் மற்றும் பரிசாரகர்களும் சார்ந்துள்ள தொழில் இது. இதுதொடர்பாக இடைக்காலத் தடைவிதித்துள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவும் பிரஃபுல்ல சி.பந்தும் பெண்களின் கவுரவம் பாதிக்காத வகையில் கண்காணிக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நவம்பர் 15-ம் தேதி வரவுள்ளது.