

எங்களுடையது பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் மாமியாருடன் எனக்கு சிறு வாக்குவாதமும் மனக்கசப்பும் ஏற்பட்டது. இதனால் என் கணவர், குழந்தைகளை அழைத்துக்கொண்டு நான் என் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். நாங்கள் இரண்டு ஆண்டுகள் என் அம்மா வீட்டில் இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக என் அப்பாவுடனும் அண்ணனுடனும் என் கணவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், என் கணவர் தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
ஒரு வருடமாக எத்தனையோ முறை நான் அழைத்துப் பார்த்தும் இங்கே வர மறுக்கிறார். நான் அவர் வீட்டுக்குச் சென்று வாழலாம் என்றால் என் அப்பா தடுக்கிறார். இந்நிலையில், என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் என்னை விரும்புவதாகச் சொல்கிறார். என் கணவரிடம் திரும்பிச் செல்வதா, அல்லது என்னை விரும்புபவரை ஏற்கலாமா? நான் மிகுந்த குழப்பத்திலும் மனவேதனையிலும் இருக்கிறேன். எனக்கு வழிகாட்டுங்கள்.
- பெயர் வெளியிட விரும்பாத அரியலூர் வாசகி.
டாக்டர் சுபா சார்லஸ், மனநல மருத்துவர், சென்னை
திருமணம் செய்துகொள்வது சேர்ந்து வாழ்வதற்குத்தான். இந்தப் பிரச்சினையில் உங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் யாருடைய விருப்பத்துக்கு முதலிடம் கொடுக்கப் போகிறீர்கள் என்பதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. உங்கள் அப்பாவின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பதா அல்லது கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதா என்ற குழப்பம் தேவையில்லை. இந்த நேரத்தில், உங்கள் கணவர் வீட்டுக்குச் சென்று வாழ்வதுதான் சரி.
மாமியாரை எப்படி எதிர்கொள்வது என்று சங்கடப்படவேண்டாம். உங்களுடைய அப்பா, மாமியார் என யாரைப் பற்றியும் யோசிக்கத் தேவையில்லை. அலுவலகத்தில் உங்களை விரும்புவதாகச் சொல்லும் நபரையும் நீங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் உங்களுக்கு வந்திருக்கும் மனத் தடுமாற்றம் இது. அந்த நபர் உங்களோடு உங்கள் குழந்தைகளையும் சேர்த்து ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. நீண்டகால அடிப்படையில் இந்த உறவு எப்படியிருக்கும் என்பதையும் உங்களால் தீர்மானிக்க முடியாது. அதனால், உங்கள் காதல் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
என் சகோதரியின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சாலை விபத்தில் பேசும் திறனையும், நடக்கும் திறனையும் இழந்துவிட்டார். அவருடைய தாய், இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவரைத் தன்னுடன் வைத்துக் கவனித்துக்கொள்கிறார். மனைவி, குழந்தைகளை அவர் அருகில் விடுவதேயில்லை. இந்நிலையில், அவர் பெயரில் உள்ள சொத்துக்களைத் தன் பெயரில் மாற்றிக்கொண்டார். அத்துடன், என் சகோதரியையும், இரண்டு பெண் குழந்தைளையும் வீட்டை விட்டு வெளியேற்றவும், விவாகரத்து செய்வதற்காகவும் காவல் நிலையத்தில் பொய்ப் புகார்கள் கொடுக்கிறார்.
குழந்தைகளையும் கொடுமைப்படுத்துகிறார். என் சகோதரியின் கணவர் சைகையால், தன் தாய் செய்வதெல்லாம் சரிதான் என்று சொல்கிறார். யாரிடம் சென்று புகார் அளித்தால் இந்தக் குழந்தைகளுக்கு நியாயமும் அவர்களுடைய தந்தையும் கிடைப்பார்? தகுந்த சட்ட அலோசனை வழங்கவும்.
- பெயர்வெளியிட விரும்பாத வாசகி
வழக்கறிஞர் ஏ.கே ஸ்ரீராம், சென்னை.
சொத்துப் பிரச்சினையைப் பொறுத்தவரை, உங்கள் சகோதரியின் கணவர் அவருடைய அம்மாவுக்கு எழுதிக்கொடுத்திருப்பது ‘அதிகாரபூர்வமான பதிவுசெய்யப்பட்ட பத்திரம்’தானா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அது அதிகாரபூர்வமான பத்திரமாக இருந்தாலும், உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை ஏமாற்றிச் சொத்துக்களை எழுதிவாங்கி யிருக்கிறார்கள் என்று உங்கள் சகோதரியின் மாமியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
உங்கள் சகோதரிக்கு, அவர் கணவர் திரும்பக் கிடைக்க வேண்டுமென்றால், அவர் குடும்ப நல நீதிமன்றத்தில், தாம்பத்ய உரிமை மீட்டல் (Restitution of conjugal rights) என்பதை முன்வைத்து மனு தாக்கல் செய்யலாம்.
அதே மாதிரி, உங்கள் சகோதரியின் கணவரை அவருடைய மனைவிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவுகளை வழங்கச் சொல்லியும் வழக்கு தொடர முடியும். குழந்தைகளின் கல்வி, மற்ற அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி இடைக்காலப் பராமரிப்புச் செலவையும் இதனால் பெற முடியும்.
கடைசியாக, உங்கள் சகோதரியையும் குழந்தைகளையும் கொடுமைப்படுத்தியது தொடர்பாக குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் மூலமும் வழக்குப் பதிவுசெய்ய முடியும். குடும்ப வன்முறையைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பாதுகாப்பு அலுவலர்களை (Protection Officers) அரசு நியமித்திருக்கிறது. சென்னையில் சிங்காரவேலர் மாளிகைக்குச் சென்று, பாதுகாப்பு அலுவலரைச் சந்தித்து, இதுபற்றி மனு கொடுக்கலாம். அவர் அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பார். தேவைப்பட்டால், உங்கள் சகோதரியின் கணவரிடம் நேரடியாக விசாரணை நடத்துவார். அப்படியில்லாவிட்டால், உங்கள் மனுவை மேஜிஸ்டிரேட்டிடம் விசாரணைக்கு அனுப்புவார்.
உங்கள் கேள்வி என்ன?
‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் உங்கள் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in