Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் - வன்முறையிலிருந்து வேண்டும் விடுதலை

தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள ஒரு நகரத்தைச் சேர்ந்த மாலாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 37 வயது. தன் மீது நிகழ்த்தப்பட்ட குடும்ப வன்முறை யாவும் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றே நினைத்து வாழ்ந்துவருபவர். தன்னைப் போலத்தான் மற்றப் பெண்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற அவரது நினைப்பில் உண்மை இல்லாமலும் இல்லை.

மாலா வேலைக்குச் செல்வதில்லை என்றபோதும், வீட்டு வேலைகளே முதுகை ஒடித்துவிடும். ஏழரை மாதத்திலேயே குழந்தை பிறந்து விடுகிற அளவுக்கு வேலை வாங்கும் உரிமையை மாலாவின் மாமியார் கையிலெடுத்திருந்தார். அம்மா தவறவிடுகிற கொடுமைகளைச் செயல்படுத்துவார் மாலாவின் கணவர். பிறந்த வீட்டுக்குச் செல்லவோ அவர்களிடம் பேசவோகூட மாலா அனுமதிக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் நடுவே அவரும் வாழ்ந்தார் என்பதற்கு அடையாளமாக மகளும் மகனும் பிறந்தனர்.

மாலாக்கள் சூழ் உலகு

மணமாகி 15 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் மாலாவின் வாழ்க்கையில் வசந்தம் வீசவேயில்லை. தற்போது தீபாவளி பரிசாகப் பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். எப்படிச் சமைப்பது என்று கற்றுக்கொண்டு வரவேண்டுமாம்! மாமியாரும் கணவரும் தன்னைக் கொடுமைப்படுத்தியதை எவ்வித உணர்வும் இன்றி அமைதியாக அவர் சொன்னதைக் கேட்டபோது வருத்தமாக இருந்தது. இரண்டு தோள்பட்டைகளிலும் கரண்டியால் கணவர் அடித்த வடு தெரிந்தது. மாமியார் தன் பங்குக்கு ஆங்காங்கே கிள்ளிவைத்ததில் நகங்கள் பதிந்து சதை கிழிந்திருந்தது.

குழந்தைகளுக்காகத்தான் தான் உயிருடன் இருப்பதாகச் சொல்லும் மாலாவுக்கு, உலகம் முழுவதும் நவம்பர் 25 அன்று பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுவது தெரியாது. இந்த நாளை ‘ஆரஞ்சு நாள்’ என்று அறிவித்திருக்கும் ஐ.நா., நவம்பர் 25 அன்று உலகின் முக்கிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரச்செய்வதன்மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அறிவித்திருக்கிறது.

நிழல் பெருந்தொற்று

இந்த ஆண்டு உலகம் முழுவதுமே கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி யிருக்க, ஊரடங்குக் காலத்தில் பெண்கள் அதிகப்படியான இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை, குறிப்பாகக் குடும்ப வன்முறை ஊரடங்கு நாள்களில் அதிகரித்திருக்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களும் இதை உறுதிப் படுத்துகின்றன. பெருந்தொற்றுக்கு இணையான பெண்களுக்கு எதிரான வன்முறையை ‘நிழல் பெருந்தொற்று’ என ஐ.நா., குறிப்பிடுகிறது. ‘ஆரஞ்சு நாளை’ யொட்டி ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை ஐ.நா. அறிவிக்கிறது. இந்த ஆண்டு, உலகளாவிய நிதி ஆதாரத்தை வலுப்படுத்துவது, கோவிட் 19 காலத்தில் வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தருவது, வன்முறையைத் தடுப்பது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த தரவுகளைத் திரட்டுவது போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு செயல்பட வேண்டும் என அறிவித்துள்ளது.

எளியோரே வன்முறையின் இலக்கு

ஐ.நா. மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பெண்ணிய அமைப்புகளும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கப் பல்வேறு விதங்களில் தொடர்ந்து போராடி வரு கின்றன. இவற்றின் விளைவாகக் குறிப்பிட்ட சதவீதப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றாலும், வன்முறை குறைந்தபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அதிகரித்துவருவதுடன் புதுப்புது வடிவமும் எடுத்துவருகிறது. உடல் ரீதியான, உளவியல்ரீதியான வன்முறை போன்றவற்றின் நீட்சியாகத் தற்போது இணையவழித் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இத்தனைக்கும் பதிவு செய்யப்படும் குற்றங்கள், தரவுகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் நாம் வினையாற்றுகிறோம்.

உண்மையில் மாலாவைப் போன்று, தன் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எந்த இடத்திலும் பதிவுசெய்யாத பெண்களே நம்மிடையே அதிகம். இவர்களில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமெல்லாம் இல்லை. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பெண் என்கிற ஒரே காரணத்துக்காக ஒடுக்கப்படுகிறவர்கள் இங்கே ஏராளம். அதிலும் வன்முறைக்கு எளிதில் இலக்காகும் வகையில் பலவீனமான நிலையில் இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுப் பாலினத்தவர், அகதிகள், புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் அதிக அளவில் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறையைப் பாலின பேதத்தின் வெளிப்பாடு என்று குறுக்கிவிட முடியாது. அது பெண்களைப் பாதிப்பது மட்டு மல்லாமல், பாலினச் சமத்துவத்தை அடையும் உலகளாவிய நோக்கத்துக்குப் பெரும் தடையை ஏற்படுத்துவதுடன் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் சேர்த்தே பாதிக்கிறது.

ஆணையும் கணக்கில் கொள்வோம்

எவ்வளவோ இழப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு பெண்களையும் குழந்தைகளை யும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தண்டனைகளும் கடுமையாக்கப் பட்டுள்ளன. இருந்தாலும் 2015ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா முழுவதும் 3,27,394 வழக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறையின்கீழ் பதிவுசெய்யப் பட்டுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்ணைப் பற்றி மட்டுமே பேசும் நம் சமூகம், அந்தப் பெண்ணின் மீது வன்முறையை நிகழ்த்திய ஆணைக் கண்டுகொள்வதில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிபோல் சித்தரித்து அவள் மீது களங்கத்தைச் சுமத்தும் நம் சமூக மனநிலையே சட்டத்தின் உதவியை நாட விடாமல் பெண்களைத் தடுக்கிறது. தவிர, நீதி கிடைப்பதற்கான நெடிய போராட்டத்தில் ஏற்படும் அலைக்கழிப்பும் குற்றவாளிக்குத் தண்டனையைப் பெற்றுத்தர முடியாத அதிகாரப் படிநிலையும் பெண்களைச் சோர்வுறச் செய்கின்றன. போராடத் துணிகிற பெண்கள் அனைவரும் வெற்றிபெற்றுவிடுவதில்லை என்கிறபோதும் தன்னைப் போலவே பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்கள் நம்பிக்கை அளிக்கத் தவறுவதில்லை.

சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் சட்டத்தின் உதவி எளிதில் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டியது அரசின் கடமை. அதுதான் பெண்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே சுருக்கிவிடவில்லை என்பதற்கான சான்றாக இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதி என்பது குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படுகிற தண்டனை மட்டுமல்ல, அந்தப் பெண் தற்சார்புடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருவதும்தான்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதிலும் அழித்தொழிப்பதிலும் சட்டத்தின் பங்கு சொற்பமே. அச்சத்தால் குற்றங்களைக் குறைப்பதைவிட, குற்றச் செயல் களுக்குக் காரணமான மனநிலையை மாற்றுவதுதான் அவசியம்.

எது நாகரிகம்?

பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற எல்லாக் குற்றங்களுக்கும் ஆணிவேராக இருப்பது ஆணாதிக்கச் சிந்தனைதான். சில நேரம் அது பெண்களின் வழியாகவும் செயல்படுத்தப்படலாம். ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் தாழ்ந்தவள் அல்ல என்பதை இருபாலினரும் உணர வேண்டும். அதற்கான பொறுப்பைக் குடும்பங்கள் ஏற்க வேண்டும். குடும்பங்களுக்கு அப்படிப்பட்ட படிப்பினையை வழங்க வேண்டிய பொறுப்பு பண்பட்ட சமூகத்துக்கு உண்டு.

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு என்கிற பெயரில் எழுதப்பட்ட நூல்களில் தொடங்கி, அனைத்துவிதமான ஊடகங்கள்வரை பெண்கள் ஆணுக்கு அடங்கி நடக்கிற அடிமைகளாகவும் காட்சிப் பண்டங்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றன. அதுதான் ஸ்மார்ட் போன் காலத்திலும் கணவனைத் தொழுது எழுவதுதான் பெண்ணின் இயல்பு எனப் பலரையும் பேச வைக்கிறது. நாகரிகம் என்பது நம் ஆடைகளிலும் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகளிலும் இல்லை. சக மனுஷியான பெண்ணைத் தனக்கு நிகராக நடத்துவதுதான்.

அந்தப் புரிதல் இல்லததால்தான் பெண்கள் குடும்ப வன்முறைக்கு இரையாகிறார்கள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள், கல்வியும் பணி வாய்ப்பும் இன்றி ஒடுக்கப்படுகிறார்கள், பொதுவெளியில் தரக்குறைவாக விமர்சிக்கப்படுகிறார்கள், கற்பென்னும் பெயரால் தாழ்த்தப்படுகிறார்கள். இனியாவது பெண்ணுக்கு நீதி போதிப்பதை விட்டுவிட்டு ஆணாதிக்கச் சிந்தனை நிறைந்திருப்போருக்குச் சமத்துவத்தைப் பயிற்றுவிப்போம். அதுவே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் போன்றவற்றை அனுசரிப்பதற்குத் தேவையில்லாத நாளை உருவாக்கும்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x