Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

நூறில் நால்வர்

மாற்றத்துக்கு வித்திட்ட, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்ட நூறு பெண்களின் பட்டியலை பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பெண்களைக் கொண்ட அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நால்வர் இடம்பெற்றிருக்கின்றனர். பில்கிஸ் பானு, இசைவாணி, மானசி ஜோஷி, ரிதிமா பாண்டே ஆகியோர்தான் அந்தப் பெருமைக்குரிய நால்வர்.

தளராத உறுதி: பில்கிஸ் பானு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் எழுந்த போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது டெல்லி ஷாகீன் பாக்கில் நடைபெற்ற போராட்டம். அந்தப் போராட்டத்தையே தன் அடையாளமாகக் கொண்டவர் பில்கிஸ் பானு. இஸ்லாமியரின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 82 வயதிலும் போராட்டத்தில் பங்கேற்றார் பில்கிஸ் பானு. கொட்டும் பனியிலும் அயராமல் அமர்ந்திருந்து எதிர்ப்புக்கும் உறுதிக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். “என் ரத்த நாளங்களில் ரத்தம் பாய்வது நிற்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும்.

இந்த நாட்டுக் குழந்தைகளும் உலகமும் நீதியின், சமத்துவத்தின் காற்றைச் சுவாசிக்க இது உதவக்கூடும்” என்று போராட்டக் களத்தில் கூறினார் பில்கிஸ் பானு. போராட்டக் களத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, சில மீட்டர் தொலைவில் மேடையில் இருந்தபடி, “துப்பாக்கிக் குண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்” எனத் துணிச்சலுடன் முழங்கினார். போராட்டக்காரர்களால் ‘ஷாகீன் பாகின் தாதி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரை, அமெரிக்காவின் ‘டைம்’ இதழும் 2020இல் செல்வாக்கு செலுத்திய 100 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

புரட்சி கானா: இசைவாணி

ஆண்களுக்கென்றே எழுதிவைக்கப்பட்ட கானா உலகில் பெண்ணாகத் தடம் பதித்ததற்காகவே இசைவாணியைப் பாராட்டலாம். ‘பிபிசி’யும் அப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறது. ‘கானா உலகில் கோலோச்சும் ஆண்களுக்கு இணையாக ஒரே மேடையில் கானா இசைத்ததே சாதனைதான்’ என்று ‘பிபிசி’ தெரிவித்தி ருக்கிறது. ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவைச் சேர்ந்த இசைவாணி, சென்னையின் மரபு இசைவடிவமான கானாவைப் பாடுவதன்மூலம் தன்னைப் போலவே கானாவில் ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் பலருக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறார்.

சென்னை ராயபுரத்தில் வளர்ந்த இசைவாணியின் இசையார்வத்துக்குக் காரணம் மெல்லிசைக் கச்சேரிகளில் பாடிய அவருடைய தந்தை. தன் தந்தையைப் பார்க்க வீட்டுக்கு வரும் கானா பாடகர்களின் பாடலால் ஈர்க்கப்பட்டு, கானா பாடத் தொடங்கினார். பல்வேறு தடைகளைத் தாண்டி, கானாவில் தனக்கெனத் தனி இடத்தையும் பிடித்தார். அரசியல், கலை வடிவம் கொள்ளும்போது அது பலதரப்பையும் சென்று சேரும் என்பதற்கு இசைவாணியின் அரசியல் நையாண்டி கானாவே சான்று. இவரது கானா, சாதிய வேறுபாட்டையும் பெண்ணியத்தையும் பேசத் தவறுவதில்லை.

உடல் குறைபாடு தடையல்ல: மானசி ஜோஷி

எதையும் சாதிக்க உடல் குறைபாடு தடையல்ல என நிரூபித்திருக்கிறார் மானசி ஜோஷி. குஜராத்தைச் சேர்ந்த இவர், விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்தார். செயற்கைக் கால் பொருத்தப்பட்ட நிலையில், 2019இல் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அந்தத் தளராத உழைப்புதான் அவரைச் சிறந்த பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது. மானசி ஜோஷியை ‘அடுத்த தலைமுறையின் தலைவி’ எனக் குறிப்பிட்டிருக்கும் ‘டைம்’ இதழ், அவரது படத்தை அட்டையில் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது.

இளமையில் விவேகம்: ரிதிமா பாண்டே

சமூகப் பொறுப்புடன் செயலாற்றுவதற்கும் வயதுக்கும் தொடர்பில்லை என்பதற்கு 12 வயது ரிதிமா பாண்டேவே சாட்சி. இவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சரியான விதத்தில் கையாளவில்லை என்று மத்திய அரசின் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தபோது ரிதிமாவுக்கு ஒன்பது வயது. பருவ நிலை மாற்றத்தைக் கண்டுகொள்ளாத உலக நாடுகள் குறித்து ஐ.நா.வில் புகார் அளித்த இளம் பசுமைப் போராளிகளில் ரிதிமாவும் ஒருவர். “குழந்தைகளின், வருங்கால சந்ததியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்பது ரிதிமாவின் முழக்கங்களில் ஒன்று.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x