

என் தங்கையின் பக்கத்துவீட்டில் நடந்த சம்பவம் இது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தன் எட்டு வயது மகளின் தலையில் பேன் கொல்லியைத் தடவிவிட்டார் அந்தப் பெண். பிறகு மகள் டிவியிலும் அம்மா மொபைலிலும் மூழ்கிவிட்டனர். 40 நிமிடங்கள் கழித்துத் தலை அரிப்பதாகவும் உடனே குளிப்பாட்டிவிடும்படியும் மகள் சொல்லியிருக்கிறாள். செல்போனில் தீவிரமாக மூழ்கியிருந்த அம்மாவின் செவியில் மகள் சொன்னது விழவில்லை. மகள் மீண்டும் டிவி பார்க்கத் தொடங்கினாள். ஆனால், அரிப்பு அதிகமாகவே தாங்க முடியாமல் அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். அந்தப் பெண்ணும் மகளைக் குளிக்கவைத்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் சிறுமியின் முகம் வீங்கியது. நேரம் ஆக ஆக வீக்கம் அதிகரித்தது. உடனே வீட்டுக்கு அருகே உள்ள மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றார். அங்கே மருத்துவர் இல்லை என்றதும் வேறொரு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே பார்க்க முடியாது என்று சொன்னதும் வேறொரு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுமிக்கு நினைவு தப்பிவிட்டது. சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், “மருந்தின் ரசாயனம் மூளையைப் பாதித்துவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டார். இரண்டு நாட்கள் கோமாவில் இருந்த அந்தச் சிறுமி மறுநாள் இறந்துவிட்டாள்.
இத்தனைக்கும் அந்தச் சிறுமியின் அம்மா நன்கு படித்தவர். மருந்து வாங்கும்போதே 20 நிமிடங்களுக்கு மேல் தலையில் ஊறவைக்கக் கூடாது என்று மருந்துக் கடைக்காரர் சொல்லியிருக்கிறார். 30 நிமிடங்களுக்கு மேல் மருந்து தலையில் இருக்கக் கூடாது என்று மருந்துப் பெட்டியிலும் அச்சிடப்பட்டுள்ளது. இருந்தும் தன் சிறு கவனக் குறைவால் மகளைப் பறிகொடுத்த அந்தத் தாயின் கதறல் நெஞ்சை உலுக்கியது. நம்மில் பலரும் இப்படித்தான் சிறு விஷயங்களில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறோம். ஆனால், அது எவ்வளவு பெரிய ஆபத்தில் முடியக் கூடும் என்பதற்கு இந்தத் துயரச் சம்பவமே உதாரணம்.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.