

இரண்டாம் உலகப் போரில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு ஜப்பான். ஆனால் இன்று உலக அரங்கில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அங்கம் வகிக்கிறது. இதற்குக் காரணம் அந்த நாட்டின் தொழில் வளர்ச்சி. எந்த வளமும் இல்லாத அந்த நாட்டில் எப்படிச் சாத்தியமானது இந்த வளர்ச்சி? அங்கே ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு சிறுதொழில் செய்து கொண்டிருப்பார்கள். நம் நாட்டில் இறக்குமதியாகும் வெளிநாட்டுப் பொருட்களில் (பேனா, மின்னணு சாதனங்கள், பொம்மைகள்…) பல அவர்கள் அப்படி வீட்டில் தயாரித்தவையாகக்கூட இருக்கலாம்.
ஆனால், எல்லா வளமும் நிறைந்திருக்கும் நம் நாட்டில் கைத்தொழில் செய்வோர் மிகக் குறைவு. அந்த மிகக் குறைவான எண்ணிக்கையிலும் பெண்கள், குறிப்பிடத்தகுந்த அளவு இடம்பெற்றிருக்கின்றனர். வீட்டு வேலை, அலுவலகப் பணி என்று பெண்கள் தங்கள் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சுழன்றாலும் அந்தப் பரபரப்புக்கு இடையிலும் கைவினைப் பொருட்கள் செய்து தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்திவருகிறார்கள்.
இன்னும் சிலரோ கைவினைப் பொருட்கள் செய்வதையே தங்கள் பிரத்யேக அடையாளமாகவும் கொண்டு விளங்குகிறார்கள். மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஹேமலதா, அவர்களில் ஒருவர். எம்.டெக். முடித்துவிட்டு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் பணி நிமித்தமாக சென்னை சென்றார். அங்கு ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிட நினைத்தார். அதன் விளைவு டெரகோட்டா எனப்படும் சுடுமண் நகைகள்!
“என் தாத்தா, அப்பா இருவரும் தஞ்சாவூர் ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர்கள். அதனால எனக்கும் தஞ்சாவூர் ஓவியங்கள் வரையவும் களிமண்ணால் ஃபேஷன் நகைகள் செய்யவும் ஆர்வம் ஏற்பட்டது. டெரகோட்டா ரக நகைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்தபோது ஆன்லைனில் அவை ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுவது தெரிந்தது.
இவற்றை நாம் ஏன் குறைந்த விலைக்கு விற்கக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. உடனே அதைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினேன்” என்று சொல்லும் ஹேமலதா, இதற்காகவே இயற்கைக் களிமண்ணை வாங்கி அதைக் காயவைத்து செயின், தோடு, ஜிமிக்கி, வளையல் என்று விரும்பிய வகையில் வடிவமைத்து, சுடவைக்கிறார். பின்னர் அவற்றின் மீது பல்வேறு வண்ணங்களைத் தீட்டி, கண்கவர் நகைகளை உருவாக்கிவிடுகிறார். தான் தயாரிக்கும் ஆபரணங்களை ஆன்லைனில் 500 ரூபாய் முதல் விற்பனை செய்துவருகிறார்.
விற்பனையில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆடையைப் புகைப்படம் எடுத்து ஹேமலதாவுக்கு மெயில் அனுப்புகின்றனர். அவர் அதற்கேற்ப மேட்சிங் வளையல், தோடு, செயின் செய்து தருகிறார்.
“கவரிங் நகைகள் அணியும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். ஆனால், இந்த டெரகோட்டா நகைகளால் அப்படி எதுவும் ஏற்படாது. கைதவறி கீழே விழுந்தாலும் உடையாது, மழையில் நனைந்தாலும் கரையாது. நிறமும் மங்காது. ஈரத் துணியால் தூசியைத் துடைத்தெடுத்தாலே போதும் என்பதால் பராமரிப்பும் சுலபம்” என்று தனது ஆபரணங்கள் குறித்துச் சொல்கிறார் ஹேமலதா.
தான் தயாரிக்கும் ஆபரணங்களை ‘மேக்னா கிளேவர்’என்ற பெயரில் விற்பனை செய்யும் இவருக்கு அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உண்டு. இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஆந்திரம், கொல்கத்தா, கேரளம் ஆகிய இடங்களிலும் தனது நகைகளுக்கு அமோக வரவேற்பு இருப்பதாகப் பெருமையுடன் சொல்கிறார் ஹேமலதா.
பொழுதுபோக்காகத் தான் கற்ற கலையைப் பிறரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மதுரை, சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.
“டெரகோட்டா நகைகளுக்கான முதலீடு மிகவும் குறைவு. களிமண், அதைச் சுடத் தேவையான உபகரணங்கள் போதும். இதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்” என்று சொல்லும் ஹேமலதா, வசதி குறைந்த பெண்களுக்கு, குறிப்பாக ஆதரவற்றோர் இல்லத்திலும், மனநல மருத்துவமனையில் குணமாகும் நிலையில் உள்ளவர்களுக்கும் இலவசமாகப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறார். ஆர்வம் உள்ளவர்கள் இவரை 8056635878 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.