

நான் இல்லத்தரசி. வாரம் முழுக்கச் சமையல், வீட்டு வேலை செய்தே அலுத்துப்போய்விடுகிறேன். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது குழந்தைகள், கணவருடன் வெளியே செல்ல விரும்புகிறேன். ஆனால் என் கணவரோ அன்று ஒரு நாள் மட்டுமாவது நான் வீட்டில் இருக்கிறேனே என்கிறார். ஓய்வெடுக்க வேண்டும், புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட என் கணவரைச் சார்ந்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அதே சமயம் தனியாக ஒரு விஷயத்தைச் செய்யவும் முடியவில்லை. நான் என்ன செய்வது?
- குமுதா, சென்னை
டாக்டர் சரஸ் பாஸ்கர், உளவியல் நிபுணர், சென்னை.
இந்தப் பிரச்சினையைப் பற்றி உங்கள் கணவரிடம் விரிவாகப் பேசுங்கள். நீங்கள் கூட்டுக் குடும்பத்தில் வசித்தால், கணவர் குடும்பத்தின் மற்ற உறவினர் களுடன் வெளியே செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் கணவர், குழந்தைகளுடன் மட்டும் தனியாக வசித்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வெளியே செல்லுங்கள். ஞாயிற்றுக் கிழமையை உங்கள் உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து செலவிடுங்கள். உங்கள் கணவருடன்தான் வெளியே செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒரு வாரம், வெளியே செல்லும்போது குழந்தைகளை நீங்கள் அழைத்துச்சென்றால், அடுத்த வாரம் உங்கள் கணவரிடம் அவர்களைப் பார்த்துக்கொள்ளும்படி வீட்டில் விட்டுச் செல்லுங்கள். உங்கள் கணவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். புரிதலை உருவாக்கிக்கொள்ளுங்கள். இல்லத்தரசியாக இருப்பதால் சுயஅனுதாபம் கொள்ளத் தேவையில்லை. ஒருநாளில், நீங்கள் என்னென்ன வேலைகள் செய்கிறீர்கள் என்பதை எழுதுங்கள். இந்த வேலைகளையெல்லாம் யாருடைய துணையும் இல்லாமல் நீங்களே சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் என்பதை உணருங்கள். அதேமாதிரி வெளியே செல்வதற்குத் தேவைப்படும் உங்களுக்கான சுதந்திரத்தையும் நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்களுடைய அனுமதியில்லாமல் யாரும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால், உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை.