

இந்தியாவின் இள வயது நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பெருமையைப் பெற்ற சந்திராணி முர்மு, தன்னைத் தவறாகச் சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு கொடுத்திருக்கிறார்.
சந்திராணி முர்மு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் ஒடிஷா மாநிலம் கியாஞ்சோர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போதைய தேர்தலுக்கு முன்பு சந்திராணியைத் தவறாகச் சித்தரிக்கும் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ ஒடிஷாவின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியானது. அப்போது அவர் கொடுத்த புகாரின் பேரில் அந்தத் தொலைக்காட்சியின் நிருபர் கைது செய்யப்பட்டார். காவல் துறையினராலும் ஆளும் பிஜு ஜனதா தள கட்சியாலும் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று அந்தத் தொலைக்காட்சி சார்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 15 முதல் அந்தத் தொலைக்காட்சி தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு பரப்பிவருவதாக சந்திராணி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் இள வயது பெண் எம்.பி., என்று என்னைக் குறிப்பிட்டீர்கள். அதுவும், பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் எம்.பி., என்று பெருமைப்படுத்தினீர்கள். தற்போது மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இந்த நிகழ்வை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்” என்றும் சந்திராணி குறிப்பிட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து சந்திராணி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “மணமாகாத பழங்குடியினப் பெண்ணான என் நற்பெயருக்குக் களங்கும் ஏற்படுத்தும் வகையில் தவறாகச் சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு எப்போது நீதி கிடைக்கும். நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்று அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.