

இந்த வருட நவராத்திரிக்கு ஒன்பது படிகள் கொலு வைக்க வேண்டும் என்று மனதில் இடம் இருந்தாலும் வீட்டில் இடம் இருக்க வேண்டுமே. அடுக்கிவைத்த தீப்பெட்டிகள் போல் இருக்கும் அடுக்கு மாடி வீடுகளில் கொலு வைக்க முடியுமா என ஏங்குபவர்களுக்கு, கொலு வைப்பதற்குச் சில யோசனைகளைச் சொல்கிறார் சரஸ்வதி ஸ்ரீனிவாசன். வீட்டு உள் அலங்காரம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்துப் பல புத்தகங்களை எழுதியிருப்பதுடன் பல முன்னணித் தொலைக்காட்சிகளிலும் நேயர்களுக்குப் பல யோசனைகளைச் சொல்பவர் இவர்.
மனம் இருந்தால் புல்தரை
அடுக்குமாடிக் கட்டிடங்களில் இருப்பவர்கள் சிறிய வரவேற்பறையில் உள்ள பொருட்களை எங்கு போடுவது, படி எங்கு கட்டுவது எப்படி அலங்கரிப்பது, இருக்கும் குறைந்த பொருட்களைக் கொண்டு கொலுவை எப்படி அழகான முறையில் காட்டுவது, இருக்கும் சிறிய இடத்தில் புல்வெளி அமைக்க முடியுமா போன்ற பல கேள்விகள் தோன்றும். ரசனையும் செய்யும் ஆர்வமும் இருந்தால் எதுவும் சாத்தியமே!
இந்தக் காலத்தில் கிடைக்காத பொருட்களே கிடையாது. அதிலும் நம் பட்ஜெட்டுக்குத் தகுந்தபடி தேர்ந்தெடுக்கும் விதத்தில் பொருட்கள் சந்தையில் வந்துவிட்டன. உங்களிடம் உள்ள பொம்மைகள், அலங்காரப் பொருட்களை எடுத்து அடுக்கிவைத்துக் கொள்ளுங்கள். அதன் எண்ணிக்கையைப் பொறுத்து நீள பெஞ்ச் அல்லது ஸ்டூல் போட்டு அலங்கரித்து பொம்மைகள் வைக்கலாம்.
‘லான் கார்ப்பெட்’ என்று ரெடிமேட் புல்தரை கிடைக்கிறது. உங்கள் அறையில் எந்தப் பக்கம் இடம் ஒதுக்க முடியுமோ, அந்த இடத்தின் நீள, அகல அளவைக் குறித்துக்கொண்டு அந்த அளவுக்கு லான் கார்ப்பெட் வாங்கிக் கொள்ளலாம். அதை அப்படியே தரையில் விரித்தால் போதும். பச்சைப் பசேல் புல் தரை தயார்.
கொலுப்படி வைக்கக்கூட இடமில்லையெனில், அதிலேயே ஒரு ஓரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். மற்ற இடங்களில் யானை, குதிரை பொம்மைகள், ரயில் வண்டி, கார் பொம்மைகள் போன்றவற்றை அழகுற அடுக்கி பார்க் அமைப்பு தரலாம். நடுவில் நீரூற்று வைத்து மேலும் அழகு சேர்க்கலாம்.
ஓரங்களில் மரக் கன்றுகள் வைக்கலாம். விளக்குகள் போட்டு அலங்கரிக்கலாம். இப்பொழுதெல்லாம் வாழைக்கன்றுகள்கூடத் தொட்டிகளில் வைத்து வளர்க்கும் அளவுக்குக் கிடைக்கின்றன. அதை வீட்டு முகப்பு, வராண்டா, சிட்-அவுட் என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
சிறியதிலும் சிறப்புண்டு
எவ்வளவு பொருட்கள் வைக்கிறோம், எவ்வளவு பெரிய கொலு வரிசை என்பது முக்கியமில்லை. மிகச் சிறிய இடமாக இருந்தாலும், அந்த இடத்தில் எவ்வளவு அழகாக அமைத்துள்ளோம். எவ்வளவு கலையம்சம் கொண்டதாக உள்ளது என்பதுதான் முக்கியம். நம் கற்பனைத் திறன் எந்த அளவுக்கு ரசனையைத் தருகிறது என்பதுதான் முக்கியம்.
ஓரளவு வசதியும் இடமும் இருப்பவர்கள் யோசிக்க வேண்டாம். நாமும் வீட்டுக்குப் பலரை அழைக்க வேண்டும், நம்மால் இயன்றவரை செய்து வீட்டைக் கலையம்சம் நிறைந்ததாகக் காட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகத்தான் இந்த டிப்ஸ்களும் சிறிய காட்சியும்.
இந்த லான் கார்ப்பெட் மூலம் தரையும் வீணாகாது. கல், மண்ணைக் கொட்டி அலங்கரிக்கும்போது மீண்டும் சுத்தம் செய்து பழைய நிலைக்குக் கொண்டுவருவதும் சிரமமாகக்கூட இருக்கும். எனவே இது போதிய அழகைத் தருவதுடன் பராமரிப்பும் சுலபம். நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்தே அலங்கரிக்கலாம். பண்டிகை முடிந்து, வெயிலில் போட்டு தட்டி எடுத்துச் சுருட்டி, பரணில் வைத்துவிடலாம். மீண்டும் அடுத்த ஆண்டுக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தட்டுகளில் பூக்கோளம்
அடுக்குமாடிக் கட்டிடங் களில் வசிப்பவர்கள் கோலம் போட வராண்டா இல்லையே என நினைக்க வேண்டாம். எப்பொழுதும் கிடைக்கக் கூடிய சாமந்தி, ரோஜா போன்றவற்றைக் கொண்டு பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி அலங்கரிக்கலாம். பெரிய பெரிய தட்டுக்களில் போட்டு அதில் தீபங்கள் ஏற்றி வைக்கலாம்.
பூக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. எந்தப் பூவைப் பயன்படுத்துகிறோமோ, அந்தப் பூவின் உபயோகப் பயனும் தீப ஒளியும் நமக்கு நிச்சயம் நல்ல பலனைத்தான் தரும். அத்துடன் சேர்ந்து மெல்லிய காற்றினில் வரும் கீதமும் ஊதுபத்தி மணமும் சேர்ந்தால், கண்டிப்பாக நம் வீட்டில் பண்டிகை களைகட்டிவிடும்.
பண்டிகைகள் நம் பாரம்பரியத் தையும் குடும்ப ஒற்றுமையையும் காத்துவரும் சந்தர்ப்பங்கள். எனவே எப்படிச் செய்ய முடியும் என யோசிக்காமல், எப்படியும் நம்மால் செய்ய முடியும் என்று யோசிக்கலாமே!
படங்கள்: எல். சீனிவாசன்