Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

விவாத களம்: மனமாற்றமும் விழிப்புணர்வுமே பெண் அரசியலுக்குத் தீர்வு

அரசியல் என்பது ஆண்களுக்கு மட்டுமே என்று நம்பப்பட்டு வரும் இந்தச் சமூகத்தில் பெண்களுக்கு அரசியலில் சம வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து அக்டோபர் 25 அன்று வெளியான ‘பெண் இன்று’ இதழில் ‘என்று தணியும் பெண்களின் அரசியல் தாகம்’ என்கிற தலைப்பில் எழுதியிருந்தோம். பெண்களின் அரசியல் பங்களிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்றும் அதில் கேட்டிருந்தோம். பொதுப்புத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் பெண்களின் அரசியல் அறிவை மேம்படுத்துவதும் அதற்கான வழிகள் என்று பெரும்பாலோர் சொல்லியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:

தாய்வழிச் சமூகத்தின் நீட்சி

நாகரிகம் தோன்றாக் கற்காலத்தில் கூடத் தாய்வழிச் சமூகம் தானென்பது வரலாறு. நாகரிகம் முதிர்ந்ததாய்ச் சொல்லும் இக்காலத்தில்தான் யார்வழிச் சமூகம் என்பதில் தகராறு. குடும்பப் பொறுப்பு, வீட்டு வேலைகள் போன்றவை பெண்களுக்கு மட்டுமே என்று நிந்திக்கப்பட்டுவிட்டதால், அரசியல் ஆண்கள்வசமாகிவிட்டது. தவிர, எதிலுமே பெண்ணின் கை ஓங்குவதை ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாத தாழ்வு மனப்பாங்கும் ஒரு முக்கியமான காரணம். தடைகளை மீறி பெண்கள் அரசியல் பேச வந்தால் உடனே அந்தப் பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவார்கள். இதற்குப் பயந்தும் பெண்கள் பலர் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். அரசியல் பேசும் பெண்களைப் பெண்களே ஆதரிப்ப தில்லை. ஆனாலும், இவையனைத்தையும் வென்று அரசியலில் நுழைந்து, சமுதாயத்தில் புதியதொரு மாற்றத்தையும் உத்வேகத்தையும் வளர்ச்சியையும் பெண்கள் கொண்டுவர வேண்டும். பெண்களின் அரசி யலில் நுழைவைக் குடும்பத்தினர் வரவேற்க வேண்டும்.

- தேஜஸ், கோவை.

பொதுப்புத்தியில் மாற்றம் வேண்டும்

பெரும்பான்மை பெற்ற ஓர் அரசு தடாலடி முடிவுகள் எடுக்கும்போது அதை ஆண்தன்மையுடைய அரசு என்றும், கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்திய அரசு ஒரு முடிவை எடுக்கத் தடுமாறும்போது அதைப் பெண்தன்மையுடைய அரசு என்றும் விமர்சித்து நாளிதழ் ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருந்த கட்டுரையே பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் அரசியல் சார்ந்த எண்ண ஓட்டத்தைப் புரியவைத்துவிட்டது. ஆண்கள் அவர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எங்கள் வீட்டில் என் அம்மா, அத்தை, நாத்தனார், மச்சானின் மனைவி எல்லோருமே நாளிதழ் வாசிப்பதுடன் அதில் வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது விவாதிப்போம். குடியுரிமைச் சட்டம் குறித்து எங்கள் தெருவில் வசிக்கும் அண்டைவீட்டாரிடம் என் அம்மாவும் நானும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதெல்லாம் சிறு மாற்றம்தான். பெண்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டுமெனில் அவர்களுக்கான அங்கீகாரம் தக்க நேரத்தில் கிடைக்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் அங்கீகாரம் திறமையைப் பார்த்துக் கிடைப்பதில்லை. மாறாக, திறமைசார் ஆளுமைகளைத் தனது கட்சியில் சேர்த்தால் எங்கே நம்மைப் பின்னுக்குத்தள்ளி அவர்கள் முன்னேறிவிடுவார்களோ என்கிற பயத்திலேயே பெண்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறன. அதிலேயே பல ஆளுமைகள் புதைந்துவிடுகின்றனர். பிஹாரில் கண்ணையா குமாரைப் போன்ற ஆண்களுக்கே இந்நிலைமையென்றால் பெண்களது நிலைமை கேள்விக்குறிதான். இட ஒதுக்கீடும் குடும்பங்களின் ஆதரவும் பெண்களின் அரசியல் நுழைவுக்கு வழிகோலும்.

- நா. ஜெஸிமா ஹுசேன், திருப்புவனம் புதூர்.

அரசியல் அறிவு அவசியம்

பெண்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ, சமூகத்திலோ சந்திக்கும் கொடுமைகள், தீயை அணைக்கும் தண்ணீரைப் போல அவர்களின் முன்னேறும் உணர்வை அணைத்துவிடுகின்றன. பெண்கள் என்றால் குழப்பவாதிகள், தீர்க்கமான முடிவை எடுக்கத் தெரியாதவர்கள் என்று சமுதாயத்தில் நிலவும் கருத்து வீர மங்கையரின் வெற்றியையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது. பெண்கள் துணிச்சலோடு அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெரியார் சொன்னதுபோல நகைக் கடையிலும் துணிக் கடையில் கூடும் பெண்களின் கூட்டத்தைவிடப் பன்மடங்கு வாசக சாலையில் கூட வேண்டும். சமூகம் என்பது ஒரு கண்ணாடி. பயத்தோடு பார்த்தல் பயத்தையே பிரதிபலிக்கும். தைரியமாக, தனித்துவத்தோடு பார்ப்போம், வெல்வோம்.

- தபசும் அப்துல்ரகுமான்.

நசுக்கப்படும் குரல்

சமூக வலைத்தளங்களில் அரசியல் பேசினாலே தனிமனித தாக்குதல்களுக்கும் சைபர் வன்முறைக்கும் ஆளாக்கப் படுகின்றனர். பொருளாதாரம் பெண்களிட மிருப்பது மிக அவசியம். அரசியல் பேசும் பெண்கள் ஆழ்ந்த புரிதலுடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும். ஓர் ஆண் அரசியல் பேசினால் அது அவனோடு முடிந்துவிடும். ஆனால், பெண் அரசியல் பேசினால் அவளது குடும்பத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் செல்லப்படும். அதன் மூலமே மாற்றங்களும் நிகழும். இனி உரக்க அரசியல் பேசுவோம்!

- விஜய பிரியங்கா, வேடசந்தூர்.

பெண்களைச் சமமாக நடத்துவோம்

நாம் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும்கூடப் பெண் விடுதலை என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்கிறது. ஆணுக்குப் பெண் சமம் என்பது இன்னமும் ஏட்டளவிலே உள்ளது. அரசியலுக்கு வரும் பெண்களுக்கு எதிரான விமர்சனங்கள் இங்கே மிகக் கடுமையாக உள்ளன. அதைத் தாங்கும் மனப் பக்குவம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ‘பெண்களால் முடியாது’ என்று திட்டமிட்டே பொய்க்கருத்தைப் பரப்பி, இயல்பாகவே பெருவாரியான பெண்களிடம் தாழ்வு மனப்பான்மை உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான மோசமான கருத்துக்களைக்கூடப் பகிரங்கமாக வெளியிடுவதால் பெண்கள் அரசியலுக்கு வர அச்சப்படுகின்றனர். என்றைக்கு இந்தச் சமூகம் பெண்களைச் சக தோழமையாகக் கருதத் தொடங்குகிறதோ அந்த நாளில் அரசியலில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும்.

- பொன்.கருணாநிதி, கோட்டூர்,

சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்துவோம்

அரசியல் செய்திகளைப் படிக்கக்கூடப் பெரும்பாலான பெண்களுக்கு ஆர்வமில்லை. கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகச் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பெண்களுக்கான அரசியல் களமாகப் பயன்படுத்தலாம். அரசியல் குறித்த விழிப்புணர்வை எளிமையாகப் புரியவைக்கும் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், பட்டிமன்றங்களை அவற்றின்மூலம் நடத்தலாம். ‘அரசியலை நாம் தவிர்த்தால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள்வார்கள்’ என்று பிளாட்டோவின் கூற்றில் இருக்கும் உண்மை நாம் அறியாதது அல்ல. அதனால் பெண்கள் முனைப்புடன் அரசியலில் பங்கேற்க வேண்டும்.

- பு. பிரேமலதா, பருத்திப்பட்டு, சென்னை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x