

மாற்றுத் திறனாளிகளாகப் பிறந்துவிட்டால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் தானும் சொந்தக்காலில் நின்றுகொண்டே தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளையும் சொந்தக்காலில் நிற்கவைக்கிற போராட்டக் களத்தில் செயல்படுபவர் அன்னகாமு.
படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் எல்லோரும் படிக்க முடிகிறதா என்ன? வறுமையில் உள்ளவர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதித்துக்கொண்டே படிப்பார்கள். வறுமை ஒருபுறம் வதைக்க, போலியா நோய் தாக்குதலில் கால்களில் பலம் குன்றிப்போனார். கால்களின் பலம் போனால் என்ன? அன்னக்காமு தனது மனத்தின் பலத்தைப் பலமடங்கு அதிகரித்துக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஜம்புலியான்பட்டி கிராமத்தில் பிறந்தவர் அன்னகாமு. வறுமையான குடும்பம். ஐந்து குழந்தைகளில் இவர் ஒருவர். வறுமையான குடும்பச் சூழலில் இவரது பெற்றோர்களால் பள்ளிக் கல்வி வரைதான் படிக்கவைக்க முடிந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அன்னகாமுவுக்கு மாற்றுத் திறனாளி என்பது அவரது வாழ்க்கையில் கூடுதல் சுமையாக இருந்தது. ஆனாலும் தன் சொந்தக்காலில் நிற்பதற்குத் தேவையான கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
17 வயதிலேயே வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார். கிடைத்த கூலி வேலைகளைச் செய்தார். பின்னர் நேரு யுவகேந்திர இளைஞர் மன்றத்தில் வேலை கிடைத்தது. வாய்ப்பு கிடைத்த இடங்களிளெல்லாம் கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டே தன் படிப்பையும் தொடர்ந்தார். எம்.ஏ. பட்டத்தை முடித்து எம்.ஃபில். ஆய்வுப் பட்டத்தையும் முடித்தார். ஆசிரியப் பயிற்சியிலும் டிப்ளமோவரை படித்துள்ளார்.
அவரது நிலையில் அவர் தன்னை உயர்த்திக்கொள்கிற பணிகளைச் செய்வதே பெரிய விஷயம்தான். ஆனால், அதோடு அவர் தேங்கிப் போய்விடவில்லை. தன்னைப் போல சிரமப்படுவோருக்காக உழைக்கவும் தயாரானார். வறுமையான குடும்பங்களின் குழந்தைகள் நன்றாகப் படிக்க உதவும் வகையில் மாலை நேர இலவச வகுப்புகளை எடுத்தார்.
படிக்க வாய்ப்பு கிடைக்காமல் குறிப்பிட்ட பணத்துக்குப் பஞ்சாலைக்கு அடமானம் வைக்கப்பட்ட பெண் குழந்தைகள் மேல் அவரது கவனம் திரும்பியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம் என்று இதற்கு பெயர். அவர்களை மீட்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டார்.
கல்குவாரியில் ஏறக்குறைய கொத்தடிமைகளாகப் பணிபுரியும் பெண்கள் மீது உதவும் பணியாக இது வளர்ச்சியடைந்தது. அவர்களின் உரிமை குறித்த விழிப்புணர்ச்சியையும் சட்ட ஆலோசனைகளையும் வழங்குவதாக இந்தப் பணி இருந்தது. தன்னைப் போன்ற ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் இத்தகைய பணிகளைச் செய்வதைக் கேள்விப்படும் மற்ற மாற்றுத் திறனாளிப் பெண்கள் இவரிடம் வர மாட்டார்களா? அவர்களுக்கும் இவரது உதவிக்கரம் நீண்டது. அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண உதவி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது என்று இவரது களப்பணி தொடர்ந்து வருகிறது.
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அன்னகாமுவைப் போய்ப் பார்க்கலாம்; நம்மை அதிலிருந்து விடுவித்துவிடுவார் என்று பெண்களிடம் நம்பிக்கையைப் பெற்றுவிட்டவராக இப்போது அவர் இருக்கிறார்.
இத்தகைய பணிகள் தமிழகத்தில் செயல்படுகிற ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பின் மாநிலப் பொறுப்பாளராக அவரை மாற்றின. மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகளைக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் இது அவரை ஈடுபடுத்தியது.
தொடர்ந்து சமூகப் பணியில் அவர் ஈடுபட்டுவருவதை ஊக்கப்படுத்தும் விதத்தில் கடந்த சுதந்திர தினத்தன்று தமிழக அரசு 2015-ம் ஆண்டின் ‘சமூகப் பணியில் சாதனை படைத்த இளைஞர் ’ என்ற விருதை வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் இவரது களப்பணியைப் பாராட்டி விழா நடத்தியுள்ளது. “யாருடைய சார்பும் இல்லாமல் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சியையும் தன்னம்பிக்கையையும் எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய அனுபவமும் என் போன்றவர்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் நான் தெரிவிக்கும் செய்தியும்” என்கிறார் அன்னகாமு.