Published : 25 Oct 2020 10:15 am

Updated : 25 Oct 2020 10:15 am

 

Published : 25 Oct 2020 10:15 AM
Last Updated : 25 Oct 2020 10:15 AM

விவாதம்: என்று தணியும் பெண்களின் அரசியல் தாகம்?

women-s-politics

உலகின் இள வயது பிரதமர் எனக் கொண்டாடப்பட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன், தற்போது இரண்டாம் முறையாக நியூசிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 120 இடங்களைக் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஜெசிந்தா சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றிப் பெருவெற்றி பெற்றிருக்கிறது.

2017 தேர்தலில் வெற்றிபெறுவதற்குமுன் 2008, 2011, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மூன்று தேர்தல்களிலும் அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும், அரசியலையே தன் அடையாளமாகக் கொண்டிருக்கும் ஜெசிந்தா ஆர்டெர்ன், மனம் தளராமல் அடுத்துவந்த தேர்தலில் வெற்றிபெற்று வரலாற்றில் இடம்பிடித்தார். ஜெசிந்தாவின் இந்த வெற்றி, அரசியலில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவுக்குத் தேவை என்பதையும் பெண்கள் அதிகாரத்தில் அமரும்போது நாட்டை எப்படி ஆக்கபூர்வமாக முன்னேற்ற முடியும் என்பதையும் உணர்த்துகிறது.


மக்கள் நலச் செயல்பாடு

ஜெசிந்தாவின் இந்த இரண்டாம் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், கரோனா வைரஸ் தொற்றை அவர் கையாண்ட விதம் முக்கியமானது. தன்முனைப்பு இல்லாத, சமூகநலன் சார்ந்த அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவருக்குச் செல்வாக்கைப் பெற்றுத்தந்தன. ‘ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம்’ என்னும் முழக்கத்தின் மூலம் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மக்கள் அனைவரையும் ஈடுபடுத்தினார். அதுதான் 2020 ஆகஸ்ட்டில், முன்னேறிய நாடுகளில் 100 நாள்களில் ஒரேயொரு புதிய தொற்றுகூட இல்லாத முதல் நாடாக நியூசிலாந்தை மாற்றியது. உலகின் மற்ற பெண் தலைவர்கள், இவரைப் போலவே மக்கள் நலப் பணிகளில் ஆர்வத்துடன் செயல்படு கிறார்களா என்கிற கேள்விக்கு நேர்மறையான பதிலைச் சொல்ல முடியாதபோதும், ஜெசிந்தா போன்ற விதிவிலக்குகளின் வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. இந்தக் கொண்டாட்டத்துடன், நாம் பெண்களுக்கு அரசியலில் போதுமான வாய்ப்பை வழங்கு கிறோமா என்பதையும் பரிசீலிப்போம்.

பெண்ணுக்கு இடமில்லை

உலகின் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியாவில் மாநிலத்திலும் மத்தியிலும் எத்தனைப் பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதே நம் அரசியல் பின்னடைவைச் சொல்லிவிடும்.

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த 193 நாடுகள் கொண்ட பட்டியலில் 2019 ஜனவரி 1 நிலவரப்படி இந்தியா 149ஆம் இடத்தைப் பிடித்து மோசமான நிலையில் இருக்கிறது. பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு, முதல் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அமல்படுத்தப்பட்ட நாடு என்று பெருமையடித்துக்கொள்வதால் என்ன பயன் இருந்துவிடப் போகிறது?

ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கிற நாட்டில், பெண்களின் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பில் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள்? 2019இல் நடந்த 17ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 78 பேர் மட்டுமே பெண்கள். அரசியல் என்பது வியாபாரமாகிவிட்ட இந்நாளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பெண்கள் நலன் சார்ந்து செயல்படுவார்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்போது பெண்களுக்கு எதிரான செயல்பாடு களுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுப்பதற்கான சாத்தியம் ஏற்படும்.

அரசியல் ஆண்களுக்கானதா?

பெண்களின் அரசியல் பங்களிப்பு என்பது வாக்களிப்பது மட்டுமல்ல என்றாலும், வாக்களிக்கும் உரிமையைக்கூடப் பெண்கள் பலரால் சரியான விதத்தில் பயன்படுத்த முடிவதில்லை. தன் குடும்பத்தினர் சார்ந்த கட்சிக்கோ அல்லது வீட்டு ஆண்கள் சொல்கிற நபருக்கோதான் பெண்கள் வாக்களிக்கின்றனர். பெண்களுக்குப் போதுமான அரசியல் புரிதலும் தெளிவும் இல்லாததும் இதற்குக் காரணம். படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்த பெண்கள்கூட அரசியல் என்பது ஆண்களுக்கானது என்றே நினைக்கின்றனர். உணவு, உடை, வீடு, குழந்தை வளர்ப்பு என்று விவாதிக்கிற பெண்களில் பலர், தங்கள் பகுதியில் நடக்கிற அரசியல் செயல்பாடுகளில்கூட ஆர்வம் காட்டுவதில்லை. தவிர, பெண்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் துறையாகவும் அரசியல் இருப்பதில்லை. காரணம், இந்தச் சமூகம் கட்டமைத்துவைத்திருக்கும் ‘பாதுகாப்பான’ வேலைகளுக்குள் இது அடங்காது.

சேவையுடன் தொடர்புடைய ஆசிரியப் பணிக்கும் மருத்துவப் பணிக்கும் மட்டுமே பெண்கள் விரும்பி அனுப்பப்படுகிறார்கள். தற்போது வங்கிப் பணியும் மென்பொருள் துறையும் அதில் சேர்ந்திருக்கின்றன. இவை தவிர, பிற துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அதேநேரம் விவசாயம், கட்டிடத் தொழில், வீட்டு வேலை போன்ற உடலுழைப்புப் பணிகளில் ஆண்களைவிடப் பெண்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவற்றில் வேலை அதிகம், வருமானம் குறைவு. எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் ஒரே வேலையையே செய்துகொண்டிருக்க வேண்டும். இவற்றை நெருங்கிப் பார்க்கும்போது உழைக்கிறவர்கள் பெண்களாகவும் பலனை அனுபவிக்கிறவர்கள் ஆண்களாக வுமே இருக்கின்றனர் என்பது புரியும். அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல என்றபோதும் இதுபோன்ற வேலை பங்கீட்டில் இருக்கிற அரசியலைப் புரிந்து கொண்டு வினையாற்றவும் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அவசியமாகிறது.

இடஒதுக்கீடு மட்டும் போதுமா?

சமூகநீதி பேசுகிறவர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது ஒடுக்கப்பட்ட ஆண்க ளுடன் சேர்த்துப் பெண்களுக்கும் சிறிது வெளிச்சம் கிடைத்தது. பெண்களுக்கும் ஒடுக்கப் பட்டோருக்கும் தனித்தொகுதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இப்படியான இடஒதுக்கீடுகள் அவற்றின் உண்மையான இலக்கை அடைந்தனவா என்பதைக் கேள்விக்குறியாக்குகின்றன நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள். ஊராட்சி மன்றத் தலைவராகவோ வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கோ தேர்வாகிற பெண்கள், அவர்களது பணியைத் தன்னிச்சையாகச் செய்ய முடிவதில்லை. அவர்கள் வெறும் பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை இயக்கும் கயிறுகளை ஆண்களே வைத்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள், தலைவராகவே இருந்தாலும் அந்த ஊர் மக்களுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெண் தலைவரைத் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுப்பது, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பெண் தலைவரைத் தரையில் உட்கார வைப்பது, தன்னை மரியாதை குறைவாக நடத்தும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரையும் மற்ர உறுப்பினர்களையும் கண்டித்து பெண் தலைவர் உண்ணாவிரதம் இருப்பது போன்ற செய்திகளை இப்போதும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பெண்களின் அரசியல் அறிவு

வீட்டுப் பெண்கள் தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற ஆணாதிக்க மனம், சாதிவெறி கொள்ளும்போது பெண் தன்னை ஆள்வதை எப்படிச் சகித்துக்கொள்ளும்? ஆனால், இதையெல்லாம் தாண்டித்தான் பெண்கள் அரசியலுக்கும் ஆட்சி அதிகாரத்துக்கும் வர வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று சொல்கிறபோது, அதைச் செயல்படுத்துகிற அளவுக்கு நாம் பெண்களைத் தயார்படுத்தி வைத்திருக்கிறோமா? நாம் சொல்கிற நபருக்கு வாக்களிக்கவும், தேர்தலில் வென்றால் கையெழுத்துப்போடவும் தெரிந்தால் மட்டும் போதும் என்பதுதான் பெரும்பாலான ஆண்களின் நினைப்பாக இருக்கிறது. கட்சிகளும், தங்கள் கட்சியின் முக்கியப் பதவிகள் எதிலும் பெண்கள் இருந்துவிடக் கூடாது என்கிற கவனத்துடன் இருக்கிறார்கள். மகளிர் அணியே பெண்க ளுக்குப் போதும் என்று சமாதான மடைந்து விடுகிறார்கள்.

ஒரு பெண்ணைத் தலைவராகவோ, செயலாளராகவோ, செயற்குழு உறுப்பின ராகவோ கொண்ட கட்சிகள் இங்கே குறைவு. மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசியக் கட்சிகள்வரை இதுதான் நிலை. தனித் தொகுதிகள், மகளிர் அணி போன்றவை மட்டுமே பெண்களின் அரசியல் பங்களிப்புக்குத் தீர்வல்ல. மைய நீரோட்டத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை மறுப்பது என்பது, பெண்களுக்கான அனைத்து விஷயங்களையும் ஆண்களே முடிவுசெய்வோம், ஆண்களே செயல் படுத்துவோம் என்கிற ஆணாதிக்கச் மனோபாவத்தின் செயல்வடிவமே. பெண்களைத் தெய்வமாகப் புகழ்வதாலோ தாயாகக் கொண்டாடுவதாலோ நிதர்சனத்தில் கிடைக்கும் பலன் ஒன்று மில்லை. அவர்களுக்கு அதிகாரத்தைக் கையளிப்பதுதான் பெண்களுக்கு சமூகம் செய்யும் ஒரே மரியாதை.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

விவாதம்தணியும் பெண்கள்அரசியல் தாகம்பெண்களின் அரசியல்Women's politicsPoliticsமக்கள் நலச் செயல்பாடுஅரசியல்இடஒதுக்கீடுபெண்ணுக்கு இடமில்லைஅரசியல் அறிவு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x