

கடந்த மாதம் வெளியான ‘சி யூ சூன்’ (C U Soon) மலையாளத் திரைப் படம் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் படப்பிடிப்புக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டதற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம். தவிர, இந்த ஊரடங்கு நாள்களில் மக்களின் இணையப் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் இணையவழியில் பாடம் படிக்க, பெரியவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் பெரும்பாலான நேரம் செல்போனிலோ கணினியிலோ மூழ்கியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ இந்தப் படத்தைப் பார்க்கும் போது நாமும் படத்தின் ஓர் அங்கமாக மாறிவிடுவதுபோல் தோன்றுகிறது.
மக்களைக் கட்டிப்போட்டிருக்கும் செயலிகளில், டேட்டிங் செயலிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தில் ஓர் ஆணும் பெண்ணும் அப்படியான டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி, மணந்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். இணையத் திருட்டும் இணையவழி மோசடிகளும் அதிகரித்துவரும் இந்நாளில், நாம் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தில் வரும் சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. நம் இணைய இணைப்பும் செல்போன் எண்ணும் தெரிந்தால், நம் செல்போனுக் குள் இருக்கும் அவ்வளவு தகவல்களையும் எடுத்துவிட முடியும் என்பது அதிர்ச்சி யளிப்பதாக இருந்தது. அப்படித் தகவல்களைத் திருடுவது நன்மை கருதித்தான் என்று இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது அச்சமாகத்தான் இருக்கிறது. நேரில் கேட்காத, பார்க்காத எதையும் நம்பக் கூடாது; செல்போனில் அந்தரங்கம் என்று எதுவும் இல்லை என்பதையும் இந்தப் படம் உணர்த்தியது.
இந்தப் படம் கையாண்டிருக்கும் முக்கியமான அம்சம் ஆள்கடத்தல். குறிப்பாகப் பெண்களைக் கடத்துவது. வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் பெண்கள் குறித்த செய்திகளை நாமும் கடந்துவந்திருப்போம். ஆனால், அங்கே பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களைப் பற்றி அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. எந்தக் குற்றத்திலும் வன்முறையிலும் பெண்களே மிக எளிதான இலக்காக இருக்கிறார்கள்.
மிக அரிதாக இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் பெண்ணைப் போன்றவர்களால் மீண்டுவர முடிகிறது. மற்றவர்கள் அந்தக் கொடிய சுழலுக்குள் சிக்கிக் காணாமல் போகிறார்கள். பெண்களைக் காட்சிப்பொருளாக மட்டுமே கையாளும் படங்களுக்கு மத்தியில், பெண்கள் சந்திக்கும் சிக்கல்களையும் அவர்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் இதுபோன்ற சில படங்கள் விதிவிலக்குகளே.
- சித்ரா, திருநின்றவூர்.