ஜூஸ் விற்றுப் பிழைக்கும் பட்டதாரிகள்!

ஜூஸ் விற்றுப் பிழைக்கும் பட்டதாரிகள்!

Published on

சென்னை மடிப்பாக்கம் 10ஆவது பிரதான சாலை அருகே இருக்கும் லேக்வியூ சாலையோரத்தில் பூத்திருக்கிறது ஒரு பழச்சாறுக் கடை. செயற்கைச் சுவையூட்டிகள் சேர்க்காமல் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பழச்சாறு எசென்ஸ்களை சோடாவுடன் சேர்த்துக் கொடுக்கின்றனர். மழைக்குச் சூடான பானத்தைச் சுவைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிஸ்கெட்-கப்பிலேயே மணக்கும் இஞ்சி டீயைச் சுடச்சுட தருகிறது நசீர் முகமது – நஸ்ரின் ஜோடி! ‘இருவருக்கும் பெயர் பொருத்தமே அருமையாக இருக்கிறதே’ என வியப்பவர்கள், இவர்களின் முழுக் கதையைக் கேட்டால் ஆச்சரியத்தில் கிறுகிறுத்துப் போய்விடுவார்கள்.

பெண்ணாகப் பிறந்து உடல்ரீதியாக ஆணாக மாற நினைப்பவர்களைத் திருநம்பி என அழைப்பார்கள். பெண்ணின் உடலுடன் இருந்தாலும் ஆணின் மனத்துடன், சிந்தனையுடன் தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் திருநம்பிகள். சமூகத்தில் திருநங்கைகளைப் பற்றி ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வில் பத்து சதவீதம்கூடத் திருநம்பிகளைப் பற்றி ஏற்பட்டிருக்காது. இந்த அடிப்படையில் பெண்ணாகப் பிறந்து, ஆணாகத் தன்னை மாற்றிக்கொண்டவர்தான் நசீர். திருநம்பியான நசீரை மணந்ததாலேயே நஸ்ரினின் வேலையும் பறிபோய்விட்டது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த நசீருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டது.

“சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியருக்குக்கூடப் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தருகிறார்கள். என்னுடைய பாலின வெளிப்பாடு திருநம்பி என்பதில், அவர்களுக்கு என்ன பிரச்சினை என்றே புரியவில்லை. நான் எம்.எஸ்சி., படித்திருக்கிறேன். ஆனாலும், எனக்கு வேலை தருவதற்குப் பலரும் யோசிக்கிறார்கள். இருவரும் பட்டதாரியாக இருந்தாலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்காததால் சாலையோரத்தில் பழச்சாறு விற்கும் ‘கனாஸ் ஃபிஸ்ஸி ஹாங்அவுட்’டைக் கடந்த வாரம் தொடங்கினோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர் மழை, வெயில் இரண்டையும் சமாளிக்கும் வகையில் மொபைல் கடை நடத்துவதற்கு உதவியாக எம்-ஆட்டோ ஒன்றை வாங்கிவிடுங்கள் என யோசனை கூறினார்கள். வங்கிக் கடனோ, தன்னார்வலர்களின் உதவியோ கிடைத்தால் அதுபோன்ற ஒரு ஆட்டோவில் வியாபாரத்தைத் தொடரும் எண்ணம் இருக்கிறது” என்கிறார் நசீர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in