Last Updated : 11 Oct, 2020 09:54 AM

 

Published : 11 Oct 2020 09:54 AM
Last Updated : 11 Oct 2020 09:54 AM

நோபல் விருது: பெண்களின் பங்களிப்புக்கு மீண்டும் அங்கீகாரம்

வீட்டு வேலையோ அறிவியல் ஆராய்ச்சியோ எதுவாக இருந்தாலும் பெண்களுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் மிகக் குறைவு. உலகின் மிகப் பெரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசை இதுவரை வென்றிருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதைத்தான் உணர்த்துகிறது. இருந்தாலும், பெண்களுக்குக் இதுவரை கிடைத்திருக்கிற வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்கிறபோதும், கிடைக்கிற வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தித் தங்கள் திறமையை நிரூபித்த பெண்கள் இவர்கள்.

1901 முதல் 2019 வரை 919 தனிநபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 53 பேர் பெண்கள் என்பது ஒரு பக்கம் பெருமிதத்தையும் இன்னொரு பக்கம் பெண்கள் அடைய வேண்டிய உயரம் குறித்த அவசியத்தையும் உணர்த்துகிறது. காரணம், நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படும் அளவுக்குப் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. இதுவரையிலான நோபல் பரிசுகளில் 2009-ம் ஆண்டில் 5 பெண்களுக்கு வழங்கப்பட்டதே ஓராண்டில் அதிகம். அதற்கு அடுத்து 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 4 நோபல் பரிசுகள் பெண்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

எண்ணிக்கை உயர வேண்டும்

2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் நான்கு பெண்கள் வெவ்வேறு பிரிவுகளில் நோபலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ், இயற்பியலுக்கான நோபல் பரிசை இருவருடன் பகிர்ந்துகொண்டி ருக்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த இமானுயேல் ஷார்பென்டியே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் டௌட்னா ஆகிய இருவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அறிவியல் பிரிவில் வழங்கப்பட்ட நோபல் பரிசுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அறிவிய லாளர்கள், ஆண்களுடன் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே இருந்தது. ஆனால் ஜெனிஃபர் டௌட்னா, இமானுயேல் ஷார்பென்டியே இருவரும் அறிவியல் பிரிவில் நோபல் பரிசைப் பெறும் முதல் பெண்கள் குழு என்கிற பெருமையைப் பெற்றிருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். தங்கள் துறையில் இவர்கள் பெற்றிருக்கும் தனித்தன்மைமிக்க நிபுணத்துவமே இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

பேரண்டத்தின் மீதான பேராவல்

ஆண்ட்ரியா கெஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1965-ல் பிறந்த ஆண்ட்ரியா கெஸ், வானியற்பியலாளர், வானியல் - இயற்பியல் பேராசிரியர். பால்வீதியின் நடுவில் நாற்பது லட்சம் சூரியன்களின் எடைகொண்ட கருந்துளை இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்பியலில் நோபல் பரிசு பெறும் நான்காம் பெண் இவர். ஆரம்பத்தில் கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்த இவரது பார்வை, பின்னாளில் இயற்பியல் துறை மீது திரும்பியது. 1987-ல் மாசசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்ற இவர், 1992-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்ததற்காக இவர் போற்றப்பட்டார். பேரண்டத்தின் மையப்பகுதியின் பண்புகளைக் கண்டறியும் நோக்குடன் நட்சத்திரங்களுக்கு இடையிலான செயல்பாட்டைக் கண்டறிந்ததில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

“பேரண்டத்தின் மீது எனக்குக் கட்டுக் கடங்காத பேராவல் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள். ஒவ்வொரு முறை தொலைநோக்கியால் பார்க்கும்போது நான் ஆச்சரியமடைவேன். நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும்வரை நிச்சயம் அதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்யும்” என்கிறார் ஆன்ட்ரியா கெஸ்.

முதல் பெண்கள் அணி

ஜெனிஃபர் டௌட்னா, இமானுயேல் ஷார்பென்டியே

மரபணுவில் மாற்றம் செய்யத்தக்க வகையிலான கிரிஸ்பர் (CRISPR-Cas9) தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த தற்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் மரபணுவை வெட்டும் கத்தரிக் கோல் போன்றது இது. இதைப் பயன்படுத்தி டி.என்.ஏ.வின் குறிப்பிட்ட பகுதியை வெட்டிவிட்டு மரபணுவில் மாற்றம் செய்ய முடியும். இந்தத் தொழில் நுட்பத்தை மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் என அனைத்திலும் செயல்படுத்த முடியும் என்பதால், பெரும் பாலான ஆட்கொல்லி நோய்களுக்குத் தீர்வு காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மஸ்குலர் டிஸ்ராபி எனப்படும் தசைச்சிதைவு நோய், புற்றுநோய், மரபணுவில் ஏற்படும் சடுதிமாற்றம் போன்றவற்றை அணுகு வதில் இவர்களது கண்டுபிடிப்பு புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறது.

நம்பிக்கை தரும் விருது

பிரான்சில் 1968-ல் பிறந்த இமானுயேல் ஷார்பென்டியே தற்போது பெர்லினில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிவருகிறார். நுண்ணுயிரியல், மரபியல், உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் இவர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். “எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருது, அறிவியல் துறையில் சாதிக்க நினைக்கும் இளம் பெண்களுக்கு நம்பிக்கைதரும் செய்தியாக இருக்கும். அறிவியல் ஆய்வுகளில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்று” என்று இமானுயேல் ஷார்பென்டியே கூறியிருக்கிறார்.

வாஷிங்டனில் 1964-ல் பிறந்த ஜெனிஃபர் டௌட்னா, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வேதியியல், மூலக்கூறு - செல் உயிரியல் துறை பேராசிரியர். மரபணுவை வெட்டும் ‘கிரிஸ்பர்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிலவற்றைக் கவனத்தில் கொள்வது அவசியம் என்று இவர் கூறியிருக்கி றார். “முதலாவது பாதுகாப்பு. கருவில் இருக்கும் குழந்தையின் மீது செயல்படுத்தப்படும் போது தாய்க்கும் சேய்க்குமான பாதுகாப்பு அவசியம். பிறகு யாருக்கு இதைப் பயன்படுத்துவதில் முன்னுரிமை தருவது என்பதும் முக்கியம். மூன்றாவது, பரவலாக்கம். இந்தத் தொழில்நுட்பத்தைக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பின ருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்” என்று ஜெனிஃபர் டௌட்னா தெரிவித்திருக்கிறார்.

பிழையற்ற பாடல்

லூயிஸ் க்ளக்

1943-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த லூயிஸ் க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டாம் பெண் கவிஞர். தனி மனித இருப்பை உணர்த்தும் தன்னிகரகற்ற கவிதை வரிகளுக்காக இவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கியவர். 25 வயதில் இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘ஃபர்ஸ்ட்பார்ன்’ (1968) வெளியானது.

இதுவரை 12 கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலும் தனி மனித உணர்வுகளை மையப்படுத்தியவையாகவே இவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. கற்பனையைவிட வாழ்க் கையின் நிதர்சனத்தைச் சொல்கி றவை எப்போதுமே காலத்தை விஞ்சி நிற்கத்தா னே செய்யும். லூயிஸின் கவிதைகள் அதைச் செய்யத் தவறுவதில்லை என்று அமெரிக்கர்கள் லூயிஸைக் கொண்டாடுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x