Last Updated : 11 May, 2014 10:00 AM

 

Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM

எளிமையே அழகு

ஈரோடு, கைகாட்டிவலசு பகுதியைச் சேர்ந்த ரேணுகா, படிப்பில் புலி என்றால் கைவினைக் கலைகளில் பாயும் புலியாக இருக்கிறார். எம்.பி.ஏ. முடித்துவிட்டு பகுதிநேரமாக எம்.ஃபில். படித்துக்கொண்டிருக்கிறார். ஏ.சி.எஸ். ஃபைனல் படித்துக்கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் படிப்பும் இன்னொரு பக்கம் கைவினைக் கலைகளுமாக எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்கிறார்.

டைல் பெயிண்டிங், பென்சில் ஸ்கெட்ச், வெல்வெட் பெயிண்டிங், பலவிதமான பூக்கள், கோல்டன் ட்ரீ, பூந்தொட்டி, கிளாத் பெயிண்டிங், குஷன் பில்லோ, பாட் பெயிண்டிங், கிளே டிசைன், ஃபேஷன் நகைகள் என்று பல கலைகளில் வித்தகியாக இருக்கிறார் ரேணுகா.

“எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் வரையறது ரொம்பப் பிடிக்கும். எப்பவும் எதையாவது வரைஞ்சுக்கிட்டே இருப்பேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பென்சில் ஸ்கெட்ச் மட்டும் முறைப்படி கத்துக்கிட்டேன். மத்தது எல்லாமே நானே முயற்சி செய்து கத்துக்கிட்டதுதான்” என்கிற ரேணுகா, ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் என்னும் அமைப்பில் பயிற்றுநர். இந்த அமைப்பில் இருக்கிற பெண்களுக்குக் கைவினைக் கலைகளில் பயிற்சியளிக்கிறார்.

தான் செய்கிற பொருட்களில் பெரும்பாலும் பரிசுப் பொருட்கள்தான் அதிகம் இருக்கும் என்கிற ரேணுகா, கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்.

“என் வீட்ல எல்லோருமே எனக்கு சப்போர்ட்தான். அக்கம்பக்கத்துல இருக்கறவங் களும் பாராட்டுவாங்க. எனக்கு எந்த கிராஃப்டையுமே ரொம்ப காம்ப்ளிகேட்டடா செய்தா பிடிக்காது. செய்றதுக்கு எளிமையாவும் பார்க்க அழகாவும் இருக்கற மாதிரியான பொருட்களைத்தான் நான் செய்வேன். மெல்லிய செயின், சின்னச் சின்ன கொலுசுகள், எடை குறைவான கம்மல் இவையெல்லாம் அதிகமா விற்பனையாகும்.

கிளேவில் செய்கிற கீ ஹோல்டர்ஸ், டைல் பெயிண்டிங் இவற்றுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்று சொல்லும் ரேணுகாவுக்குக் கைவினைக் கலை பயிற்சி வகுப்பு எடுக்க ஆசையாக இருந்தாலும், நேரம் ஒத்துழைக்க மறுக்கிறதாம். சரியான தருணத்துக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x