

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் கணிசமானவை. காரணம், பெண்களின் தயக்கம். அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியே சொல்வதில் பெண்களுக்கு எப்போதும் தயக்கம் இருக்கும்.
இதில் படித்தவர், படிக்காதவர் என்று எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், அந்தத் தயக்கம் உயிருக்கே ஆபத்தானதாக முடியும் என்பதைப் பலரும் அறிவதில்லை. அதனால்தான் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.
எல்லாப் புற்றுநோயும் மரணத்தை ஏற்படுத்து வதில்லை. மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலி ருந்து முழுமையாக மீண்டுவிடலாம். மார்பகப் புற்றுநோயைச் சுயபரிசோதனை மூலம் நாமே எளிதில் கண்டறியலாம். 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மாதம் ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனையுடன், தேவை எற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று முறை யான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
காரணங்கள்
மார்பகப் புற்றுநோய் ஏற்படுவற்கு குறிப்பிட்ட காரணம் எதையும் வரையறுக்க முடியாது. இளம் வயதில் பூப்படைந்தவர்கள், 50 வயதுக்கும் மேல் மாதவிடாய்ச் சுழற்சி நடைபெறுவது, 30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தை பிறப்பது, ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருப்பது, உணவுப் பழக்கம், உடல் பருமன், உடலில் கொழுப்பு அதிகரித்தல், உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதிருப்பவர்கள் போன்றோருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். ஆனால், இவர்களுக்குப் புற்றுநோய் வந்தே தீரும் என்பதில்லை. மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் புற்றுநோய் வரக்கூடும்.
அறிகுறிகள்
மார்பில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி, மார்பகம் தடிப்பது, மார்புக் காம்பிலிருந்து ரத்தம் அல்லது திரவம் கசிதல், மார்புக் காம்பு உள்ளிழுத்துக் கொள்ளுதல், அக்குளில் வீக்கம் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதேநேரம் மார்பில் வலி ஏற்பட்டாலே, அது மார்பகப் புற்றுநோயாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிலநேரம் மார்பகப் புற்றுக்கட்டி தொடக்க நிலையில் மட்டுமல்ல, முற்றிய நிலையிலும் வலிக்காது. அது நெஞ்சுடன் ஒட்டிச் சுருங்கும் நிலையில்தான் வலிக்கும். இப்படி நோயை முற்றவிடுவது ஆபத்தானது. கையால் லேசாக அழுத்தினாலே மார்பில் கட்டியிருப்பதைக் கண்டறியலாம். மார்பின் வடிவம், நிறம் போன்றவற்றில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
சிலர், தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் வராது என நினைப்பார்கள். அது முழு உண்மையல்ல. தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவுதானே தவிர, வராது என்று சொல்வதற்கில்லை. அதேநேரம், தாய்ப்பால் கொடுக்காவிட்டால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது அதிகரிக்கக்கூடும்.
சிகிச்சை முறைகள்
மார்பகப் புற்றுநோய் வந்தால் மார்பை அகற்றிவிட வேண்டும் என்பதில்லை. சிலருக்குக் கட்டியை மட்டும் நீக்குவதன் மூலம் அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும். அறுவைசிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சை போன்றவற்றின் மூலம் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தலாம். அதனால், பெண்கள் மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வதுடன் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.