

நாட்டின் பாதுகாப்புக்காகச் செயல்பட்டுவரும் முப்படைகளில் பெண்களுக்கான வாய்ப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. என்றபோதும் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் வரலாறு படைக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் அதிநவீன ரஃபேல் போர்ப்படை விமானத்தை இயக்கவிருக்கும் முதல் இந்தியப் பெண் என்கிற வரலாற்றைப் படைத்திருக்கிறார் ஷிவாங்கி சிங்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இந்திய விமானப்படையின் இரண்டாம் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர். போர் விமானங்களை இயக்க 2017-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூவரும் முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்திய விமானப் படையில் 1,875 பெண் அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் பத்துப் பேர் போர் விமானிகள், 18 பேர் போர் விமான வழிகாட்டிகள்.
சவால் நிறைந்த வேலை
போர் விமானங்களை இயக்கத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களுக்குக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படும். காரணம், அதிநவீன சூப்பர்சானிக் விமானங்களை இயக்குவது சவால் நிறைந்தது. இந்த ரக விமானங்களை இயக்குவதற்கு ஒரு விமானிக்குப் பயிற்சியளிக்க 15 கோடி ரூபாய் செலவாகிறதாம்.
லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங், உலகின் அதிவேக மிக் - 21 ரக போர் விமானத்தை இயக்கும் பயிற்சியைப் பெற்றுள்ளார். இந்த விமானத்தை மேலேற்றுவதும் தரையிறக்குவதும் மிக அதிக வேகத்தில் இருக்கும் (மணிக்கு 340 கி.மீ). இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர் ஷிவாங்கி. விமானப்பட்டை போர் விமானங்களில் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவை என்பதால், போர் விமானிகளுக்கு ஒவ்வொரு விமானத்தை இயக்கவும் தனித்தனிப் பயிற்சிகள் அளிக்கப்படும். அந்த வகையில் லெஃப்டினண்ட் ஷிவாங்கி ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் பயிற்சியை தற்போது பெற்றுவருகிறார்.
விமானப்படையில் முதல் பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த அவனி சதுர்வேதிதான் ரஃபேல் விமானத்தை இயக்கத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடுமையான தேர்வுக்குப் பிறகு ஷிவாங்கிங்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் விமானப்படை தளத்தில் கமாண்டர் அபிநந்தனுடன் இணைந்து பணியாற்றியவர் இவர். ரஃபேல் விமானப் பயிற்சியை முடித்ததும் ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள ‘கோல்டன் ஏரோ’ விமானப் படைப்பிரிவில் இவர் பணியாற்றுவார். இதன்மூலம் அதிநவீன ரஃபேல் போர் விமானத்தை இயக்கவிருக்கும் முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையை ஷிவாங்கி பெறுகிறார்.