Last Updated : 27 Sep, 2020 08:24 AM

 

Published : 27 Sep 2020 08:24 AM
Last Updated : 27 Sep 2020 08:24 AM

பெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க் செப்டம்பர் 18 அன்று, 87 வயதில் மறைந்தார். பெண்களை நித்தமும் பின்னுக்குத் தள்ளும் அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து, பெண்களுக்கான புதுப்பாதையை அமைத்துக்கொடுத்த பேராளுமைகளில் ஒருவர் அவர். அவரது மறைவு ஒட்டுமொத்த அமெரிக்காவை, குறிப்பாக அமெரிக்க இளையோரைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தலைமுறை அமெரிக்க இளையோரைப் பொறுத்தவரை, கின்ஸ்பெர்க் ஒரு ராக் ஸ்டார். அவர்களின் ஆதர்ச நாயகி. அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகாட்டி.

யார் இந்த கின்ஸ்பெர்க்?

நியூயார்க்கில் 1933ஆம் ஆண்டு கின்ஸ்பெர்க் பிறந்தார். அப்பா கம்பளி வியாபாரி, அம்மா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர். அவருடைய தொடக்கக் கால வாழ்க்கைக்குப் பெரும் உந்துதலாக இருந்த அவருடைய அம்மா, கின்ஸ்பெர்க் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னரே புற்றுநோயால் மறைந்துவிட்டார்,

1954-ல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று கின்ஸ்பெர்க் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டில் மார்டினை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கத் தொடங்கினார்.

1956-ல் ஹார்வர்டில் படித்தபோது, அவருடைய கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் ஹார்வர்டில் முதலிடம் பெற்றதுடன், தன் கணவர் படிப்புக்குப் பெரும் உந்துதலாகவும் ஆசிரியராகவும் கின்ஸ்பெர்க் திகழ்ந்தார். ஆணாதிக்க மனோபாவம் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. பாலின பேதம் தலைவிரித்தாடிய ஹார்வர்டில் அவர் சந்தித்த சவால்களும் அவமானங்களும் ஏராளம்.

பாலினப் பாகுபாடு

சட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பெண் எனும் ஒரே காரணத்துக்காக, அவரை எல்லா சட்ட நிறுவனங்களும் புறக்கணித்தன. பேராசிரியர் ஒருவரின் பரிந்துரையால், வேலை கிடைத்தது. அங்கே ஆண்களைவிடக் குறைவான ஊதியமே அவருக்கு வழங்கப்பட்டது. 1970களில் அமெரிக்க சிவில் லிபர்ட்டீஸ் யூனியனின் செல்வாக்குமிக்க மகளிர் உரிமைகள் திட்டத்தை இவர் வடிவமைத்தார். அந்தக் காலகட்டத்தில், பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துக்கும் தலைமை வகித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி

பாலினப் பாகுபாட்டைக் குறித்த ஆழமான புரிதலையும் பரந்த பார்வையையும் கின்ஸ்பெர்க் கொண்டிருந்தார். பெண்களுக்காக மட்டுமல்லாமல், ஒடுக்கப்படும் ஆண்களுக்காகவும் கின்ஸ்பெர்க் போராடினார், வாதாடினார்.

அமெரிக்காவில் பெண்ணுரிமைக்கு வித்திட்ட ஆறு முக்கிய வழக்குகளில் வாதிட்டு, வெற்றியும் பெற்றார். 1980இல் கொலம்பியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 1983இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மறையும்வரை அந்தப் பதவியில் அவர் தொடர்ந்தார்.

கின்ஸ்பெர்கின் தொடர் முன்னெடுப்பால் பெண்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கும் சட்டம் 2009இல் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் ஒபாமாவுடன் இணைந்து கின்ஸ்பெர்க்கும் கையெழுத்திட்டிருந்தார்.

வலியை மீறி எழும் வலு

நீதி வழங்குவதில், அவருடைய பாணி தனித்துவமானது. பாலினப் பாகுபாடுகளை ஒட்டுமொத்தமாக மறுவரைவுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, அதன் குறிப்பிட்ட கூறுகளையும், பெண் உரிமை மீறல்களையும் குறிவைத்து அவர் தாக்கினார். எந்தச் சமூக மாற்றமும் நீதிமன்றங்களிலிருந்து வரக் கூடாது, அது நாடாளுமன்றங்களிலிருந்தும் மக்களிடமிருந்தும் வர வேண்டும் என்பதே அவரது அணுகுமுறை.

தனிப்பட்ட இழப்புகளும் அவற்றின் சோகங்களும் தன்னைப் பாதிக்க கின்ஸ்பெர்க் ஒருபோதும் அனுமதித்ததில்லை. கணையப் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையிலும்கூட நீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருந்தார். 2010இல், கணவர் காலமானதற்கு மறுநாளே பணிக்குத் திரும்பினார். வலியை மீறி எழுந்துநிற்கும் வலு பெண்களுக்கு இயல்பிலேயே உண்டு. கின்ஸ்பெர்க்குக்கு அந்த வலு அதிமாகவே இருந்தது. அதுதான் தலைசிறந்த ஆளுமையாக மக்கள் மனத்தில் அவரை நிலைத்திருக்கச் செய்திருக்கிறது.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x