Last Updated : 20 Sep, 2020 09:30 AM

 

Published : 20 Sep 2020 09:30 AM
Last Updated : 20 Sep 2020 09:30 AM

பார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன?

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வால் தமிழகம் இழந்த மாணவிகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது. 2017 செப்டம்பரில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவில் தொடங்கி 2020 செப்டம்பர் 12 அன்று இறந்துபோன மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா வரைக்கும் மருத்துவக் கனவால் மரணித்த மாணவிகளின் பட்டியல் பல கேள்விகளை எழுப்புகிறது.

மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. பிறகு மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) என்ற தகுதித் தேர்வை எழுத வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலப் பட்டியலில் இருந்த மருத்துவப் படிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதால், மாநில அரசுகள் இந்தத் தேர்வு குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் நிகழும் மாணவர்களின் மரணங்களை எப்படித் தடுப்பது? தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கத்தான் ‘நீட்’ தகுதித் தேர்வு நடத்தப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டமும் ஒரே மாதிரியான சமூகப் பொருளாதாரப் பின்னணியும் இல்லாத மாணவர்களை எப்படி ஒரே மாதிரியான தேர்வின் மூலம் மதிப்பிட முடியும் என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

தொடரும் சோகம்

மருத்துவத் துறையிலும் கட்டமைப்பிலும் முதலிடத்தில் இருந்த தமிழகம், இன்றைக்கு மருத்துவப் படிப்பில் சேர முடி யாமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அனிதாவின் மரணம் ஆட்சியாளர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் பல அனிதாக்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரவள்ளூர் பிரதீபா, பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி, விழுப்புரம் மோனிஷா, பட்டுக்கோட்டை வைஷியா, புதுச்சேரி சிவசங்கரி, திருப்பூர் ரிது, கோவை சுப ஆகியோரது வரிசையில், தற்போது மேலும் மூவர் இணைந்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமையன்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சத்திலும் மன அழுத்தத்திலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ஜோதி துர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் ஆகியோரின் மரணத்துக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமாக இருப்பது பெற்றோரின் பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.

தற்கொலை தீர்வல்ல

இருபது வயதைக்கூடத் தாண்டாத இவர்கள் அனைவரும் ஆசைப்பட்டது டாக்டராக வேண்டும் என்ற ஒரு காரணத்துக்கு மட்டும்தான். நீட் தேர்வால் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்வதற்குப் பின்னால் தேர்வு சார்ந்த அழுத்தம் தவிர, உளவியல்ரீதியான காரணமும் இருக்கிறது.

உயிரை மாய்த்துக்கொள்வதன் மூலம் தன்னை நிரூபிப்பது என்ற கருத்து புராண காலத்திலிருந்தே தொடங்குகிறது. அதனுடைய நீட்சியாகத்தான் மாணவிகளின் தற்கொலையைப் பார்க்க வேண்டி யுள்ளது. “மருத்துவம் மற்ற படிப்புகளிலிருந்து வேறுபட்டது. பொறியியல் படித்த பெண்களைகூட வீட்டில் முடக்கிவிடுவார்கள். ஆனால், மருத்துவப் படிப்பு முடித்த பெண்ணை கௌரவத்துக்காகவாவது வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் சமூகத்துக்கு உண்டு. மருத்துவம் படிக்க மாணவிகள் முன்னுரிமை தருவதற்கு இதுவும் ஓர் காரணம். நல்ல மதிப்பெண் இருந்தால் மருத்துவ ராகலாம் என்ற நிலை நீட் வந்த பிறகு மாறிவிட்டது.

நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியவில்லை என்றால் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் சமூக அமைப்பு. ஆண் பிள்ளை தேர்வில் தோல்வியடைந்தால் அவர்களை வேறொரு வேலைக்கோ வேறு படிப்புக்கோ ஊக்குவிக்கும் போக்கு சமூகத்தில் உள்ளது. ஆனால், பெண் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் திருமணம் என்பதைத் தாண்டி வேறு விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்தச் சமூகம் கொடுப்பதில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஒன்று இல்லையென்றால் மற்றொன்று என மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும்.

அதை அரசும் கல்வி நிலையங்களும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். நாம் சாதிக்க நினைப்பதை மருத்துவராகித்தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. நாம் வாழ்ந்து காட்டுவதில்தான் நம்முடைய சாதனை அடங்கியுள்ளது.

மருத்துவம் என்பது ஒரு பரந்துப்பட்ட துறை. அதில் மருத்துவரின் பங்கு ஒரு பகுதி மட்டுமே. மருத்துவத் துறைச் சார்ந்து தற்போது நிறைய படிப்புகள் உள்ளன. அவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்தலாம். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்ற எண்ணம் இருந்தால், இதுபோன்ற முடிவை மாணவர்கள் எடுக்க மாட்டார்கள். தற்கொலை எந்தச் சிக்கலுக்கும் தீர்வாகாது” என்கிறார் சிநேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனரும் மனநல மருத்துவருமான லட்சுமி விஜயகுமார்.

தகுதியை நிர்ணயிக்கும் தேர்வல்ல

தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் இந்த முடிவுக்கு மேம்படுத்தப்படாத தமிழகப் பாடத்திட்டம்தான் காரணம் என்றொரு கருத்தும் உள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைத் தமிழகத்தில் பின்பற்றினால் இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க முடியும் எனச் சிலர் வாதிடுகிறார்கள். “சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினால், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்பது பிரச்சினையைத் திசைதிருப்பும் முயற்சி. நீட் வந்தால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழலை ஒழித்துவிட முடியும், அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்கப்படும் என்றார்கள். ஆனால், இவையெல்லாம் நடக்கவில்லை. அதற்குப் பதில் புற்றீசல்போல் கோச்சிங் சென்டர்கள்தான் உருவாக்கியுள்ளன.

மருத்துவப் படிப்பு மாநிலப் பட்டிய லில் இருந்தவரைக்கும் பன்னிரண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே தகுதியாக இருந்தது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து தமிழகத்தில் சிறந்த மருத்துவர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஆனால், நீட் வந்தபிறகு வசதி உள்ளவர்களால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை அரசு உருவாக்கி விட்டது. நீட்டில் தேர்ச்சி பெறுவதுதான் தகுதிவாய்ந்த மருத்துவரை உருவாக்கும் என்பதெல்லாம் பொய்” எனச் சாடுகிறார் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

கல்வி என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதாக அமைய வேண்டுமே தவிர, அவர்களை இருட்டுக்குள் தள்ளிவிடக் கூடாது. ஒரே விதமான கல்வி முறையும் வாழ்க்கை முறையும் இல்லாத மாணவர்களிடம், ஒரே மாதிரியான தேர்வை மட்டும் எழுதச் சொல்வது எப்படிச் சரியாகும்?

இப்படியும் சில கேள்விகள்:

மருத்துவத் துறையிலும் கட்டமைப்பிலும் முதலிடத்தில் இருந்த தமிழகம், இன்றைக்கு மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இப்படியும் சில கேள்விகள் மாணவர்களின் நீட் தேர்வு மரணங்களைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சில அம்சங்கள் குறித்து விவாதங்கள் எழுந்திருக்கின்றன. அவை:

1. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாநிலப் பாடத்திட்டத்தையும் மாணவர்களின் கல்வித் திறனையும் மேம்படுத்த வேண்டும்.

2. ஏழை, கிராமப்புற மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் அதிக எண்ணிக்கையில் நீட் பயிற்சி மையங்களை அரசே நடத்த வேண்டும்.

3. நீட் தகுதித் தேர்வை வேண்டாம் எனச் சொல்லும் மாநிலங்களில் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு இறுதியாண்டில் ஒரு தகுதித் தேர்வை வைத்து, அதில் தேர்ச்சிபெற்றால் மருத்துவராகச் செயல்படும் நடைமுறையைக் கொண்டுவரலாம்.

4. நீட் தேர்வில் விலக்கு கேட்கும் மாநிலங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும் நிலை வந்தால், அதை எப்படி எதிர்கொள்வது?

5. மாணவர்களின் நீட் தேர்வு தற்கொலையைக் காரணமாக வைத்து அரசியல் கட்சிகள் சர்ச்சையைக் கிளப்புகின்றன. மாணவர்களின் இறப்புக்கு இரக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் நிவாரணத்தொகை வழங்குவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாடுபட்டுத் தங்களைப் படிக்க வைத்த பெற்றோருக்குப் பணம் கிடைக்கிறது என்ற எண்ணமேகூட மாணவர்களின் தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைந்துவிடாதா என்ற கவலையும் கேள்வியும் எழுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x