

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதைப் பற்றி மத்திய அரசு பேசத் தொடங்கியதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியான திருமண வயது எது என்று மீண்டும் விவாதங்கள் தொடங்கிவிட்டன.
குழந்தைத் திருமணங்களைத் தடை செய்வதற்காக 1929-ல் ஆணுக்குத் திருமண வயது 18, பெண்ணுக்கு 16 என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த வயதில் பெண்ணுக்குக் கருப்பை வலுவற்று இருக்கும். மேலும், பெண்கள் அந்த வயதில் மனத்தளவில் திருமணத்துக்குத் தயாராக இருப்பதில்லை.
இப்படி உடலளவிலும் மனதளவிலும் பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்றும் அந்த வயது சரியானதல்ல எனவும் தீர்மானிக்கப்பட்டு ஆணுக்குத் திருமண வயது 21, பெண்ணுக்கு 18 என்று 1978-ல் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை செயல் படுத்தியபின் பெண்களின் வாழ்க்கை இன்பகரமானதாகிவிட்டதா?
வழக்கம்போலவே காலையி லிருந்து இரவுவரை கழுத்தை நெரிக்கும் வேலைகள், ஆண்டு தோறும் தவறாத பிள்ளைப் பிறப்பு, ரத்தத்தில் ஊறிப்போன ஆணாதிக்கச் சிந்தனையால் ஆண்கள் ஏவும் அத்தனை வேலைகளையும் பசி நோக்காது, கண் துஞ்சாது, மறுபேச்சில்லாமல் செய்ய வேண்டிய கட்டாயம், எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால்கூடப் பெண்ணைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி வசைபாடும் சமூகம் என்றுதானே பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை நகர்கிறது?
மகளுக்கு 18 வயதில் திருமணம் செய்து வைத்தால்தான் குடும்ப மானம் காப்பாற்றப்படும் என்ற அழுக்கேறிய சிந்தனையுடன் இருக்கும் பெற்றோரும் நம்மிடையே உண்டு. அவர்கள் பெண்ணின் படிப்பைப் பின்னுக்குத் தள்ளி திருமணத்தை முன்னிறுத்துகின்றனர். விஞ்ஞானியாக, ஆசிரியையாக, விமானியாக வேண்டும் என்பது போன்ற பெண்களின் வண்ணக்கனவுகள் வாசமிழந்து போவது இத்தருணத்தில்தான்.
திருமணத்துக்குப்பின் அவளுடைய சின்னச் சின்ன ஆசைகள்கூட காவு வாங்கப்படு கின்றன. அதற்குப் பின்னரும்கூட அவளுக்கு அங்கீகாரம், மரியாதை கிடைப்பதில்லை. ‘வீட்டுல சும்மாதான் இருக்கிறாள்’ என்ற பட்டம்தான் மிஞ்சுகிறது.
புரிந்துகொள்வது நல்லது
மற்றொரு பக்கம் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளும் பெண்களும் இருக்கின்றனர். அந்த வயதில் படித்து, வேலைக்குச் சென்று, சொந்தக் காலிலும் நின்றுவிடுகிறார்கள். அவளுக்கென்று புதிய வானமும் புதிய பூமியும் பிறந்துவிடுகின்றன. கனவு நனவான பிறகு மணந்துகொண்டாலும் திருமணம் அவளது கனவுகளைத் தான் காணிக்கையாகக் கேட்கிறது.
பெண்ணுக்கு 18 வயதில் திருமணம் என்றாலும் 30 வயதில் திருமணம் என்றாலும் ஒரே கதைதான். திருமண வாழ்க்கையை இதுபோன்ற வயதுக் கணக்குகள் மாற்றிவிடுவதில்லை. பெண் வளர்ப்பில் அளவுக்கு அதிகமாக மூக்கை நுழைக்கும் நம் சமூகம், ஆணை மட்டும் அப்படியே விட்டு விடுகிறது. பெண் எப்படி இருக்க வேண்டும் என்று போதனைகளை அள்ளித் தெளிக்கும் நம் சமூகம், ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதலில் பாடம் நடத்த வேண்டும்.
பெண்ணைப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் செவிவழிச் செய்தியாகத்தான் ஆணுக்குப் வந்துசேர்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கட்டுக்கதைகள். உண்மை நிலவரம் உறங்கிக்கொண்டு இருக்கிறது. பெண்ணுக்கும் தனிப்பட்ட மனமும் லட்சியமும் இருக்கின்றன; அவள் வாழ்க்கையை வாழ அவளுக்கு உரிமை இருக்கிறது என்பதைச் சிறு வயதிலிருந்தே ஆண்களுக்குப் புரியவைக்க வேண்டும். இது வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.
என்றைக்கு ஓர் ஆண், பெண்ணை மதிக்கிறானோ அன்றைக்குத்தான் அவனுக்குத் திருமண வயது வந்துவிட்டது என்று அர்த்தம். ஆணின் மனப்போக்கு மாறினால்தான் வாழ்க்கை சிறக்கும். ஆண், பெண் இருபாலருக்கும் சம வயதைத் திருமண வயதாக அரசு அறிவிக்கப் போகிறதாம். அப்படியே பெண்களைச் சமமாக நடத்துவது எப்படி என்பதையும் அறிவித்துவிட்டால் புண்ணியமாகப் போகும்.
- ஜே. லூர்து, மதுரை.