

பெரியாரின் பெயரைச் சொன்னதுமே கோபத்தில் அவர் உதிர்த்த சொற்களைச் சுட்டிக்காட்டி சிலர் விமர்சிக்கலாம். ஆனால், எதையும் அவை சொல்லப்பட்ட அல்லது எழுதப்பட்ட காலத்துடன் பொருத்திப் பார்ப்பதுதான் அறிவுடைய செயல்..
எடுத்துக்காட்டுக்குப் பெண் குழந்தைகளுக்கு 14 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றார் காந்தி. தேவைப்பட்டால் அதை 16 வயதாகவும் உயர்த்தலாம் என்று வாதாடினார். பெண்ணின் திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில், இதைக் கேட்கும்போது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், ஐந்து, ஆறு வயதிலேயே மணம் முடித்து வைக்கப்பட்டுப் பெரும்பாலான பெண்கள் மிகச் சிறு வயதிலேயே கைம்பெண் கோலத்துக்கு ஆளாக்கப்பட்ட காலத்தில்தான் காந்தி இப்படியொரு முழக்கத்தைச் செய்தார். இதை உணர்ந்துகொண்டால் நோக்கம் நமக்குப் பிடிபட்டுவிடும். பெரியாரையும் அப்படித்தான் நாம் வாசிக்க வேண்டும்.
கைம்பெண் மறுமணம்
பெண்ணுரிமைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் அவர். தான் நடத்திவந்த ‘குடி அரசு’ இதழில் பெண்ணுரிமைக்காக அவர் எழுதிய கட்டுரைகள் இன்றைக்கும் பொருந்திப்போகின்றன. நூறாண்டுக்கு முன்பு குழந்தைத் திருமணமும் அதைத் தொடர்ந்த கைம்பெண் கொடுமைகளும் கோலோச்சிய காலத்தில் கைம்பெண் மறுமணம் குறித்து ஊர்தோறும் பேசினார். அதற்காகவே மிக மோசமாக விமர்சிக்கவும்பட்டார். பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகளுக்காக அப்போது அவரை விமர்சித்தவர்களில் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. ஆனால், அவர்களின் மீட்சிக்காகவும்தான் அவர் பேசினார்.
1926 ஆகஸ்ட் 22 அன்று வெளியான ‘குடி அரசு’ இதழில் “மக்கள் படைப்பில் ஆண் - பெண்ணை ஏற்றத்தாழ்வுடன் படைக்கப்படவில்லை என்பதை அறிவுடைய உலகம் ஏற்கும். அங்க அமைப்பிலன்றி அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் - பெண்ணுக்கு ஏற்றத்தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ? இயலவே இயலாது. திமிர்பிடித்த இந்த ஆண் உலகம் சாந்தகுல பூஷணமான பெண்ணுலகத்தைத் தாழ்த்தி, அடிமைப்படுத்தி வருதல் முறையும் தர்முமான செயலாகாது” என்று கண்டித்து எழுதியிருக்கிறார் பெரியார்.
கைம்பெண் மறுமணம் குறித்துப் பேசுவது, எழுதுவதுடன் தான் நின்றுவிடவில்லை எனச் சொல்லியிருக்கும் அவர், பத்து வயதில் கைம்பெண் கோலம் பூண்டுவிட்ட தன் தங்கை மகளுக்கு வீட்டினரின் எதிர்ப்பை மீறி மறுமணம் செய்துவைத்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். சொல்லிய வண்ணம் வாழ்வதுதானே தலைவனுக்குத் தகுதி! தந்தை பெரியாரும் அப்படித்தான் வாழ்ந்துகாட்டினார்.
அறிவே அடையாளம்
பெரியார் 1948-ல் ‘தாய்மார்களுக்கு’ என்று குறிப்பிட்டுச் சொன்னவை இப்போதும் தேவைப்படுகின்றன. “நகைகளிலோ சேலைகளிலோ உங்களுக்குள்ள பிரியத்தை ஒழித்துவிடுங்கள். இவற்றில் பிரியம் வைத்துக்கொண்டிருப்பீர்களானால், ஜவுளிக் கடையிலும் நகைக் கடையிலும் சேலை விளம்பரத்துக்காக அவ்வப்போது வெவ்வேறு சேலை உடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே வைக்கும் வெறும் பொம்மைகளாக நீங்கள் ஆக நேரிடும். ஆகவே, அவ்விருப்பங்களை விட்டுக் கல்வியறிவில் விருப்பம்கொள்ளுங்கள். வீரத் தாய்மார்களாக ஆக ஆசைப்படுங்கள்” என்று சொல்லி, கல்விதான் பெண்ணைக் கரைசேர்க்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார். கல்விக் கண் திறந்துவிட்டாலே பெண்ணுக்கு விடியல்தானே!