

சமமான வாய்ப்பு, உரிமை, பங்கேற்புக்காகப் போராடும் பெண்களின் வாழ்வு எப்படியிருக்கிறது? சுதந்திரமாக வெளியே போய் வர, நினைத்ததைப் படிக்க, காதலிக்க, விருப்பப்படி கல்யாணம் செய்ய எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்துவிட்டனவா? இதற்கே வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சமுதாயத்தை நிர்வாகம் செய்யக்கூடிய அதிகாரமான பதவிகளுக்கு வருவது எப்படி? வந்த பதவியில் ஆண்களின் எதிர்ப்புகளை மீறி வேலை செய்வது எப்படி? அப்படிப்பட்ட ஒரு போராட்டத்துக்கான அடையாளமாக இருக்கிறார் தாழையூத்துப் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் கிருஷ்ணவேணி.
1996-ம் ஆண்டிலிருந்துதான் பஞ்சாயத்துகளுக்குத் தேர்தல் நடக்கிறது. லட்சக்கணக்கான பெண்கள், எளிய கிராமப்புறப் பெண்கள், பஞ்சாயத்துத் தலைவர்களாகச் செயல்படுவதற்கான முதல் வாய்ப்பைப் பெற்றனர். அப்படித்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணவேணி வெற்றி பெற்றார். சாதி அடுக்குகளில் அடியில் இருக்கிற அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் அவர். தமது மக்களில் பெரும்பாலோர் இருப்பதைப் போல அவரால் அடங்கிக் கிடக்க முடியவில்லை. தங்களது பகுதியில் உள்ள பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகளுக்காகக் குரல் கொடுப்பதில் தொடங்கியது அவரது பொது வாழ்க்கை. ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் விடவே மாட்டார் அவர். அவர் காட்டிய அந்த உறுதிதான் தலித் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக அவரை ஆக்கியது.
சும்மாவே சுறுசுறுவென இருப்பவர் தலைவரானால் என்ன செய்வார்? ஊரின் சொத்துக்களில் கைவைத்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார். இதுவரையிலும் கவனிக்கப்பட்டாத மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். எந்தப் பாரபட்சமும் இல்லாமல் நிர்வாகத்தை நடத்த முயன்றார். நல்ல காரியங்கள் செய்தால் எதிர்ப்புகள் வரும் அல்லவா? பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்ளிட்ட பலரின் எதிர்ப்புகள் கிளம்பின. அன்றாடப் பணிகளையே செய்ய முடியாத அளவுக்கு அவரை முடக்க முயன்றனர். ஆனாலும் தனி ஆளாக அவரது பணி தொடரவே செய்தது. எதனாலும் அவர் பணியாற்றுவதைத் தடுக்க முடியாத எதிரிகள் கடைசியில் அவர் மீது கொலைவெறித் தாக்குதலை ஏவினார்கள்.
அனைத்து இடங்களிலும் இரண்டாம்தரமாகவே மதிக்கப்படுகின்ற ஒரு பெண், அதிலும் அருந்ததியினப் பெண், தலைவராக இருந்து நம்மை அதிகாரம் செய்வதா? கிராமத் தேவை ஒவ்வொன்றுக்கும் அவரது அனுமதி தேவையா? என்பதை சகித்துக்கொள்ளவே முடியாத ஆண் உறுப்பினர்களும் ஆதிக்க சாதி மக்களும் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் செய்வது, காசோலையில் கையெழுத்திட மறுப்பது, அவதூறு வார்த்தைகள் பேசுவது போன்ற செயல்களால் அவரது மனஉறுதியைக் குலைக்க முயன்றனர்.
இத்தனை பிரச்சினைகளுக்கு இடையிலும் கிராமத் தேவைகளை முடிந்த அளவுக்குப் பூர்த்தி செய்வதில் அவர் தவறவில்லை. அவர் பதவியில் இருந்த 5 ஆண்டு காலத்தில் சுமார் 20 தடவை அவரது பணியைச் செய்வதற்குத் தடை என்று வெவ்வேறு பிரச்சினைகளுக்காகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியருக்கும் புகார்கள் அளித்துள்ளார். பலவற்றுக்கு நடவடிக்கை இல்லை, அல்லது மேம்போக்கான நடவடிக்கை. இத்தனை வன்முறைகளையும் ஏறக்குறைய தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கிற சூழலிலும் தைரியமாக சுய சிந்தனையோடு அவர் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
பதவிக் காலம் முடிய இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒருநாள் அவரது வீட்டுக்கு மிக அருகில் ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலரால் அவர் படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளானார். உடலில் மட்டும் 17 இடங்களில் வெட்டு, தலையில் பலமான அடி. கூந்தல் கத்தரிக்கப்பட்டது. சுமார் 3 மாதம் தீவிர சிகிச்சை பெற்று சுமார் ஓராண்டு திருநெல்வேலியிலும் சென்னையிலும் சிகிச்சை பெற்று இப்போது நடமாடிக்கொண்டிருக்கிறார். சிகிச்சையில் இருந்துகொண்டே அடுத்து நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். பயமாக இல்லையா என்று கேட்டதற்கு, “தவறு செய்தவர்கள் பயப்படாமல் இருக்கும்போது சரியாகச் செயல்பட்ட நான் ஏன் பயப்படவேண்டும்? நான் பயந்தால் அது அவர்களுக்கும் அவர்களைப் போன்றவர்களுக்கும் வெற்றியாகும். நம்மைப் போன்ற பெண்கள் அந்த வெற்றியை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது” என்றார். பண, சாதிய, அரசியல் பலத்தின் முன் அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் அவர் தேர்தலில் போட்டியிட்டதே அவரது உறுதிக்கு ஒரு சான்று.
சமீபத்தில் கிருஷ்ணவேணியைத் தொடர்புகொண்டு, எப்படி இருக்கீங்க என்று கேட்டதற்கு, “என்னை வெட்டியவர்கள் என் கண் முன்னே சுதந்திரமாக நடமாட, நான் நல்லா இருக்கேன்” என்று சாதாரணக் குரலில் கூறிவிட்டு வேறு வேறு விஷயங்களைப் பேசினார். எனக்குத்தான் பேச நா எழவில்லை.