

ஒரு நாள் மதிய உணவின்போது என்னுடன் வேலை செய்யும் தோழிகள் இருவர், அவர்களுடைய தோழியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் மணமானவர்கள். தங்கள் தோழிக்கு அவள் கணவனால் நடக்கும் கொடுமைகளைப் பற்றிக் கவலையுடன் பேசிக்கொண்டனர்.
“அவளுடைய கணவன் அவளை தினமும் அடிக்கிறான். அவளுடைய ஏ.டி.எம். கார்டைப் பிடுங்கி வைத்துக்கொண்டு சம்பளம் முழுவதையும் அவனே செலவு செய்கிறான். அவளுடைய சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது. வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் அவளே செய்ய வேண்டும். அவனோ வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான்” என்று அவர்கள் பேசியதைக் கேட்கவே கஷ்டமாக இருந்தது. கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிற சம்பவங்களை நான் எங்கள் ஊரில்தான் பார்த்திருக்கிறேன். படித்து, வேலைக்குச் சென்று தன் சொந்தக் காலில் நிற்கும் பெண்களுக்கும் இதே நிலைமையா என்று ஆச்சரியமாக இருந்தது. யாரென்றே தெரியாத அந்தப் பெண்ணை நினைத்துப் பரிதாபமாகவும் இருந்தது.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பெண் குறித்து என் அலுவலகத் தோழிகளிடம் விசாரித்து வைப்பேன். நான் அடிக்கடி கேட்கவே, ஒரு நாள் என்னுடைய தோழி பரபரப்பாக வந்து, “அவள் என்ன செய்தாள் தெரியுமா?” என்றாள். பதற்றத்துடன் அவள் சொல்வதைக் கேட்டேன்.
“அவள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்து விடுதியில் தங்கியிருக்கிறாள்” என்று சொன்னாள். அவள் தன் உடல்நிலை குறித்துக் கவலைப்படாமல் இருப்பதைப் பற்றிதான் இவர்கள் கவலைப்படுக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் கவலை வேறு.
“அவளுக்குக் கொழுப்பு அதிகமாகிவிட்டது. எவ்வளவு சொன்னாலும் திரும்ப வீட்டுக்குப் போக முடியாதுன்னு சொல்றா” என்று அவர்கள் சொன்னதும் நான் அதிர்ந்தேன். இத்தனை நாட்களாக அவள் பாவம் என்று பேசிக்கொண்டிருந்த வாய், திடீரென்று அவளுக்குக் கொழுப்பு என்று சொல்கிறதே என்று நினைத்தேன். அதை மறைத்துக்கொண்டு, “இதில் என்ன தவறு? கணவனுடைய சித்திரவதை தாங்க முடியாமல்தானே இந்த முடிவெடுத்திருகிறாள்?” என்று கேட்டேன்.
“ஆமாம் தவறுதான். அவள் அலுவலகம் முடிந்து சாயங்காலம்தானே வீட்டுக்குச் செல்கிறாள். இரவு மட்டும்தான் அந்த வீட்டில் அவள் தங்கப் போகிறாள். அதிகபட்சம் நான்கு மணிநேரம். அந்த நான்கு மணி நேரம் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாதா? (என்னே இவர்களின் கணக்கு). நாளைக்குப் பிள்ளை பிறந்து அப்பா எங்கே என்று கேட்டால் என்ன செய்வாள்?” என்று என்னிடம் வாதிட்டனர். அதற்கு மேல் அவர்களிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்துவிட்டது.
குழந்தைக்கு அப்பா தேவை என்பதற்காக எப்படிப்பட்ட திருமண வாழ்க்கையையும் பெண்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமா? அதை விட்டு வெளியே வரும் சுதந்திரம் பெண்களுக்குக் கிடையாதா? பெரியார், அம்பேத்கர் போன்றோர் போராடி பெற்றுத் தந்த பெண் விவாகரத்து உரிமை வீண்தானா?
சமீபத்தில் ‘ஓகே கண்மணி’ படம் பார்த்தேன். தான் நினைத்ததைச் செய்யும் நாயகி. ஆனால் அவளுக்குத் தன்னைப் போலவே தன் காலில் நிற்கும் தன் அம்மாவைப் பிடிக்காது. காரணம் அப்பாவை விட்டுப் பிரிந்தது. எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாத, தன்னை விட்டுப் பிரிந்த அப்பாவைப் பிடிக்கும். ஆனால் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவைப் பிடிக்காது. நம் சமூகம் அம்மாவுக்கென வைத்திருக்கும் நெறிகளை அவள் உடைத்துவிட்டாள் என்ற மகளுடைய நினைப்புதான் அதற்குக் காரணம். இயக்குநர் நம் சமூகத்தின் மனசாட்சியை அப்படியே பிரதிபலித்திருப்பார்.
பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்ல ஒரு கூட்டம் வரும். ஆனால், தாய்-தந்தை பிரிந்து வாழும் சூழலில் வளரும் குழந்தைகளைவிட, சதா சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோரிடம் வளரும் குழந்தைகள்தான் அதிக மன அழுத்தத்துடன் வளர்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு பெண் அனைத்துச் சித்திரவதைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தால் அவள் தெய்வம். இல்லையென்றால் அவள் பெண்ணே இல்லை. சமூகத்தின் இந்தப் பார்வை என்று மாறும்? பெண்களுக்கு எப்போதுதான் அவர்கள் வாழ்வை அவர்களே முடிவுசெய்யும் உரிமை கிடைக்குமோ?
- ஜீவி, கடலூர்.