பெண்ணுலகம்: முகநூலில் மிரட்டினால் புகார் அளிக்கலாம்

பெண்ணுலகம்: முகநூலில் மிரட்டினால் புகார் அளிக்கலாம்
Updated on
2 min read

ஒடிஷா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் பானாபூர் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுப் பெண் ஆகஸ்ட் 24 அன்று தற்கொலை செய்துகொண்டார். வாழ்க்கை நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது என்கிறபோதும், இந்தப் பெண் இறந்துபோனது தன் மகளுக்கு நேர்ந்த துயரத்துக்காக. 17 வயதுடைய தன் மகளின் ஒளிப்படம் தவறாகச் சித்தரிக்கப்பட்டு முகநூலில் உலாவருவதை அறிந்த அவர், தன்னை மாய்த்துக்கொண்டிருக்கிறார்.

காதலின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறையின் விளைவுதான் இதுவும். 17 வயது இளம்பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்ன 24 வயது இளைஞர், அந்தப் பெண்ணைப் படமெடுத்திருக்கிறார். பிறகு தன்னுடன் நெருக்கமாக இருக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். அந்தப் பெண் மறுத்துவிட, அவருடைய ஒளிப்படத்தைத் தவறாகச் சித்தரித்து முகநூலில் அந்தப் பெண்ணின் பெயரிலேயே போலிக் கணக்கைத் தொடங்கிப் பதிவிட்டிருக்கிறார். அதன் பிறகே அந்தப் பெண் தன் குடும்ப உறுப்பினர்களிடம் நடந்தவற்றைச் சொல்லியிருக்கிறார்.

அதிகரிக்கும் குற்றங்கள்

இந்தச் செயலில் தன் பெண்ணின் மானம் பறிபோய்விட்டதாகவும் அதை மீட்கவே முடியாதெனவும் நினைத்த அந்தப் பெண்ணின் தாய் தன்னை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்தக் குற்றச் செயலில் அந்த இளம்பெண்ணுக்கு எந்தப் பங்கும் இல்லாதபோதும் அந்தப் பெண்ணும் அவளைச் சேர்ந்தவர்களுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் சூழலில் பெண்கள் மீதான இணையவழி வன்முறையும் அதிகரித்துவருகிறது. 2017-ம் ஆண்டில் பதிவான பெண்கள் மீதான இணையவழிக் குற்றங்களின் (சைபர் கிரைம்) எண்ணிக்கையின்படி இத்தகைய குற்றங்கள் 77 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்திருக்கிறது. கரோனா ஊரடங்குக் காலத்தில் இப்படியான குற்றங்கள், குறிப்பாகப் பெண்கள் மீதான இணையவழிப் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. தன் ஒளிப்படத்தைத் தவறாகச் சித்தரித்து இணையத்தில் பதிவேற்றப்படுவதை நீக்கச் சொல்லி வெற்றியடையவது வாய்ப்பும் வசதியும் உள்ள படித்த பெண்களுக்கே சவாலாக இருக்கும் நிலையில், எளிய பெண்கள் இணையவழிக் குற்றங்களை எதிர்த்து எப்படி வெற்றிபெற முடியும் என்கிற கேள்வியையும் இந்தப் பெண்ணின் மரணம் எழுப்பியிருக்கிறது.

2016-ல் சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் இப்படியான இணையவழி வன்முறைக்குத் தன்னை மாய்த்துக்கொண்ட சம்பவத்தை ஒடிஷா சம்பவத்துடன் பொருத்திப்பார்க்க முடியும். பெண்ணின் உடல் மீது சுமத்தப்படும் புனித பிம்பம்தான், நெருக்கடியான நேரத்தில் அவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கித் தவறான முடிவுக்குத் தள்ளுகிறது. தன் இறப்பின் மூலமாவது தன்னையோ தன்னைச் சார்ந்த பெண்ணையோ குற்றமற்றவள் என்று நிரூபித்துவிடும் கையறுநிலையின் வெளிப்பாடுதான் இப்படியான மரணங்கள்.

இன்னொரு பக்கம் பெண்ணின் பொதுவெளிப் புழக்கத்தை முடக்கிவிடும் வேலையையும் இந்த இணையவழி வன்முறைகள் செய்யத் தவறுவதில்லை. காரணம், இதுபோன்ற வன்முறைகளால் பாதிப்புக்குள்ளாக்கப்படுவது பெண்ணின் கண்ணியம் என்றுதான் நம்பப்படுகிறது. அதனால், பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களின் எல்லை மீண்டும் சுருக்கப்படும் அபாயமும் இருக்கிறது. பெண்ணும் தன்னளவில் சோர்ந்துவிடுவதற்கான சாத்தியமும் இதில் இருக்கிறது. பெண்கள் மீதான இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுப்பதுடன் பெண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தன் மீது இணையவழியான தாக்குதலோ வன்முறையோ நிகழ்த்தப்பட்டால் தயங்காமல் புகார்கொடுக்க வேண்டும். இதில் அவமானப்பட ஏதுமில்லை என்பதைக் குடும்பங்கள் உணர்வதுடன், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பக்கபலமாக நிற்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in