போகிற போக்கில்: கண்ணைக் கவரும் சுடுமண் நகைகள்

போகிற போக்கில்: கண்ணைக் கவரும் சுடுமண் நகைகள்
Updated on
1 min read

மண்ணைச் சுட்டு மனித உருவச் சிலைகள் முதல் அழகிய ஆபரணங்கள்வரை செய்வது பாரம்பரியக் கலைகளில் ஒன்று. “எளிமையான, விலை குறைவான ஆபரணங்களைக் கண்ணைக் கவரும் வண்ணம் செய்யலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ முத்துராமன். சுடுமண் நகைகள் செய்வது குறித்து விளக்குகிறார் ஜெயஸ்ரீ.

“களிமண்ணை பானை விற்பவர்களிடமோ, கடைகளிலோ வாங்கிக்கொள்ளலாம். இது கிலோ ரூபாய் அறுபது முதல் நூற்றியிருபது வரை விற்கப்படுகிறது. அந்த மண்ணைக் கொஞ்சம் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து, எலுமிச்சம் பழ அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனைச் சிறு சிறு உருண்டைகளாகவோ, அச்சுக்களின் மூலம் பல அழகிய வடிவங்களாகவோ செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவரவர் கற்பனை திறத்திற்கு ஏற்ப மயில், யானை, பூக்கள் ஆகியவற்றைக்கூடச் செய்துகொள்ளலாம். இவை ஈரமாக இருக்கும்போதே மாலை கோப்பதற்கு வசதியாக தேவையான அளவு சிறிய மற்றும் கொஞ்சம் பெரிய துளைகளைப் போட்டுவிட வேண்டும். காது கம்மலுக்கு தேவையான வளைந்த ஹூக்குகளைப் பொருத்திவிட வேண்டும். பிறகு இரண்டு நாட்களுக்கு அப்படியே ஆறப்போட வேண்டும். ஆனாலும் இது பச்சை மண்தான். இவற்றைச் சுட்ட பின்னரே நகைகளைச் செய்ய முடியும். குமுட்டி அடுப்பு அல்லது ‘மைரோவேவ் அவன்’மூலம் இந்த வடிவங்களைச் சுடலாம்.

மண் நிறத்தில் காணப்படும் இவை நிறம் பெற கடையில் கிடைக்கும் ‘பிரைமர்’ கொண்டு முதலில் மேல் பூச்சாகப் பூச வேண்டும். பின்னர் அக்ரலிக் அல்லது மெட்டாலிக் பேர்ல் ஆகிய வண்ணப் பூச்சுக்கள் கொண்டு தேவையான வண்ணங்களைப் பூச வேண்டும். புது வண்ணம் பெற, இரண்டு, மூன்று வண்ணங்களைச் சேர்த்துக் குழைக்கலாம். இதில் அக்ரலிக் பளபளப்பு இன்றியும், மெட்டாலிக் பேர்ல் மின்னும் வண்ணத்துடனும் காணப்படும். தயாரிக்கப்பட்டுள்ள வண்ண வண்ண சுடுமண் மணிகளுக்கு இடையே கிரிஸ்டல் மணிகளைக் கோத்தால் நகைகள் டாலடிக்கும். ஒரு செட் இருநூறு ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரை விற்கலாம்.”

தனது தந்தை பாலகிருஷ்ணன் தந்த ஊக்கமே இதற்குக் காரணம் என்கிறார் ஜெயஸ்ரீ முத்துராமன். ஏழு வயதுச் சிறுமி முதல் எழுபது வயது முதியவர்கள்வரை பலரும் இவரிடம் சுடுமண் நகைகள் செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.

படங்கள்: எல்.சீனிவாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in