

பலரும் சொல்வதைப் போல் கரோனா காலத்தில் வாசிப்பு வசப்படுவதில்லைதான். பயமும் எதிர்காலம் குறித்த பதற்றமும் சூழ்ந்திருக்கும் இந்த நாள்களில் புத்தகத்தில் மனம் கரைவ தென்பது இயலாதுதான். ஆனாலும், கடந்துவிட்ட காலத்தை நம்மால் மீட்டுக்கொண்டுவர முடியாதுதானே. அதைக் கருத்தில்கொண்டுதான் புற உலகைக் கொஞ்ச நேரமேனும் மறந்து, அகவுலகில் சஞ்சரிக்கலாம் என்று வாசிப்புக்கும் நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.
சரியாக எந்த வயதில் என் வாசிப்புத் தொடங்கியது எனத் தெரியாது. ஆனால், நினைவு தெரிந்ததில் இருந்து வாசித்தபடிதான் இருக்கிறேன். வாசிப்பு எல்லாக் காலத்திலும் மகிழ்ச்சியைக் கொடுக்கத் தவறியதில்லை. குட்டிக் கதைகள், ஆனந்த விகடன், கல்கண்டு என்று தொடங்கியது புத்தகங்களுடனான காதல்.
கேரளத்தின் கடற்கரை நகரமொன்றில் வளர்ந்த எனக்கு, வீட்டுக்கு அருகே இருந்த பொது நூலகம், பள்ளி நாட்களிலேயே எனது இரண்டாம் வீடாக மாறியது. ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது அப்பாவுடைய நண்பர் ஒருவர் ஒராண்டுக்கான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ்களைப் பரிசாக அனுப்பிவைத்து புதிய ஜன்னல்களைத் திறந்துவைத்தார். அந்த ஆண்டு கோடை விடுமுறையில் ‘தாமஸ் ஹார்டி’யின் எல்லா நூல்களையும் ஒரே மூச்சில் வாசித்தது, என் பசுமை நினைவுகளில் ஒன்று.
பள்ளி நாள்களிலேயே தீவிர வாசிப்பும் தொடங்கியது. தமிழை நேசித்த அம்மாவால் ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ம், கல்கியின் ‘பொன்னியின் செல்வ’னும் அறிமுகமாயின. அதுதான் பிற்காலத்தில் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சாவி, மணியன், சாண்டில்யன் முதல் சுஜாதாவரை தேடித் தேடி வாசிக்க வித்திட்டது. மலையாளத்தில் வைக்கம் முஹம்மது பஷீரும் தகழியும் நெருக்கமானவர்கள் ஆனார்கள்.
ஆங்கில நூல்களும் அவற்றின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பும் என்னைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலவைத்தன. முதுகலைப் படிப்புக்காக திருவனந்தபுரம் சென்ற நான், கல்லூரியில் செலவிட்ட நாள்களை விடவும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் செலவிட்ட நாள்களே அதிகம். மிகச் சிறந்த பேராசிரியர்கள் அமைந்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறு. அவை என் வாழ்வின் பொக்கிஷ நாள்கள். கவிஞர் நகுலன் எனக்கு அமெரிக்கக் கவிதைகளைக் கற்பிக்கும் பேராசிரியராக இருந்தார்!
அறுபது வயதைக் கடந்துவிட்ட எனக்கு இப்போதும் மகிழ்ச்சியை அள்ளித் தருபவை புத்தகங்களே. கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நான் அவதிப்பட்டபோதும், என்னை வலியில் ஆழ்த்திவிடாமல் காப்பாற்றிக் கரைசேர்த்தவை எனதருமைப் புத்தகங்களே!
- விஜி நாராயணன், கோயம்புத்தூர்.