Published : 02 Aug 2020 09:21 am

Updated : 02 Aug 2020 09:21 am

 

Published : 02 Aug 2020 09:21 AM
Last Updated : 02 Aug 2020 09:21 AM

கரோனாவை வென்றோம்: மீண்டவர்களுக்கு ஒரு புன்னகையைப் பரிசளிக்கலாமே!

we-beat-corona

உமா மோகன்

பெருமையாகச் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. லட்சக்கணக்கானவர்கள்போல் நானும் கரோனாவைத் தாண்டிவிட்டேன். கரோனா தொற்று குறித்து அனைத்துச் செய்திகளையும் எல்லாக் கோணங்களிலும் தொடர்ந்து அறிந்துகொண்டே இருந்தும் தொற்றுக்கு ஆளானவர்கள் பட்டியல் பெரிதாகத்தான் இருக்கிறது. எந்த விதிமுறையையும் தாண்டாமல் பின்பற்றிக் கொண்டிருந்த எனக்கு, கரோனா தொற்று ஏற்படாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், அதை சோப்புக் குமிழ்போல் ஊதித் தள்ளியது ஒரு அதிகாலை தொண்டையிலே ஏற்பட்ட ‘கிச்கிச்’.


நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இரண்டாலும் பல ஆண்டுகளாக நான் பாதிக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தினர் பயந்துபோனார்கள். எனக்கோ கரோனாவைவிடவும் அரசு மருத்துவமனையின் பொது வார்டுகளில் நாளைக் கழிப்பது குறித்தே சங்கடமாக இருந்தது. வீட்டிலேயே நடுக்கூடத்தில் எல்லோரும் ஜமுக்காளத்தை விரித்து உருண்டுகொண்டிருந்த காலத்தை யெல்லாம் தாண்டி, வெகு நாட்களாயிற்றே. போதாக்குறைக்கு மருத்துவமனையில் கழிப்பறைகளும் பொது. துணைக்கு யாரும் வர முடியாது. கரோனாவை அம்போவென விட்டுவிட்டு, இவற்றைப் பற்றியே நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.

மூன்றாம் நாள் காய்ச்சல். ஆக்சிஜன் அளவு 94, 93 எனப் பரமபத ஏணியில் ஏறி இறங்கிக்கொண்டிருக்க வேறு வழியின்றிச் சோதனைக்குச் சென்றேன். இரண்டு நாட்களில் நான் எதிர்பார்த்தபடியே கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. புதுவையைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி என இரண்டு இடங்கள்தாம் அப்போது. இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாலும், அவையெல்லாம் ஊருக்கு வெளியேதான். வீட்டுத் தனிமைக்கும் அனுமதி இல்லை. நான் ஜிப்மருக்குச் சென்றேன்.

தொற்று உறுதிசெய்யப்பட்ட கணம் முதல் உடல்நிலையைப் பார்ப்பதா, மருத்துவமனை செல்லத் தயாராவதா, இடைவிடாது அடிக்கும் அலைபேசி யைக் கவனிப்பதா எனத் திணறிப் போனேன். இதற்கு நடுவில் வீட்டைப் பற்றியும் திட்டமிட்டுவிட்டுக் கொஞ்சமாகக் கவலைப்பட்டுக்கொண்டேன்.

அச்சத்தைப் போக்கிய மருத்துவமனை

ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து செவிலியர் வந்து கொஞ்சம் ஆறுதல், கொஞ்சம் வழிகாட்டல் என்று பேசிக்கொண்டிருக்க, அப்போது முதல் நானும் என் வீடும் அரசின் கைப்பிடியில் என்று சொல்வதுபோல் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அப்போது புதுவையில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று மெதுவாக ஏறிக்கொண்டி ருந்தது. எனவே, வேலைகள் வேகமாக நடந்தன. நாமும் அதே வேகத்தில் புறப்பட வேண்டும்.

என்னுடைய வீட்டு உதவியாளர் இரண்டு நாட்களாக வரவில்லை என்றாலும், அதற்கு முன்புவரை வந்துகொண்டிருந்ததால் குடும்பத்தோடு வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டார். ஏழு நாட்களுக்குப்பின் சோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானது.

புதிய கட்டிடம் ஒன்று கோவிட் மருத்துவ மனையாக மாற்றப்பட்டிருந்தது. அந்த இடம் வசதியுடன் தூய்மையாகவும் இருந்தது. அங்கே இருந்தவர்களில் பெரும்பாலானோர் தொற்று கண்டவர்கள் என்பதைத் தவிர, வேறு பெரிய பிரச்சினை இல்லாதவர்கள். குறைந்தபட்சம் காய்ச்சல்கூட இல்லை.

கைகொடுத்த கஷாயம்

என்னைப் போல நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், வேறு நாள்பட்ட பிரச்சினை உள்ளவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவந்தார்கள். மருந்து என்றால் காய்ச்சலுக்கான பாரசிடமால்தான். என் காய்ச்சலும் வீட்டிலேயே மட்டுப்பட்டுவிட்டது. தொண்டையில் கோழை மட்டும் தொடர்ந்து தொல்லை செய்தது. காய்ச்சல் தொடங்கியதிலிருந்தே சென்னையில் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மருமகளின் ஆலோசனைப்படி, சில மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். தவிர நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர், கஷாயம் எனத் தொடர்ந்து தக்க இடைவெளியில் எடுத்துவந்திருந்தேன். ஜிப்மரில் அலோபதி மருத்துவம் மட்டுமே.

நாம் இப்படி கஷாயம் குடிக்க வேண்டுமென விரும்பினால் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இஞ்சி, மிளகு, வெற்றிலை, மிளகுப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் அன்றாடம் சூப், கஷாயம் போன்றவற்றைக் குடும்பத்தினர் தயாரித்து அனுப்பினார்கள். நம் வீட்டில் யார் இருந்தாலும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவார்கள். நான் சொல்வது உள்ளூரில் உள்ள உறவு, நட்பு வட்டத்தை.

‘கோழை’க்கு எதிரான வீரம்

எனக்கு கரோனா தொற்று உறுதியானதில் மகிழ்ந்த ஒரே ஆள், என் மகனாகத்தான் இருக்கும். அவனுக்கு ஒருநாள் மட்டும் காய்ச்சல் இருந்தது, வேறு எந்தச் சிக்கலும் இல்லை. கெட்டில் கொண்டுவரச் செய்து வெந்நீர் போட்டுத் தருவதிலிருந்து, மருத்துவக் குழுவின் சோதனை முடிவுகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப முடிவெடுப்பதுவரை அவன்தான் கருத்துடன் பாதுகாத்தான்.

மிளகு, வெற்றிலை, தேன் மூன்றையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டு தொண்டைக் கோழையை முறியடிக்கும் வீரம் பெற்றேன். சர்க்கரை அளவு அதிகரித்தபோது மருத்துவர்கள் எனது வழக்கமான மருந்துகளுடன் இன்சுலினை அதிகப்படுத்தினார்கள். ரத்த அழுத்தத்துக்கும் அவ்வாறே. மற்றபடி நுரையீரலில் சளி சேராமல் இருந்ததும், பொதுவான ரத்தப் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருந்ததும் விரைந்து குணமடைய சாதகமாயிற்று.

கரோனா நம்மிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை வெளியிலிருந்து பார்ப்பதற்கும் உள்ளிருந்து பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பாதுகாப்புக் கவச உடை என்று குறிப்பிடப்பட்டாலும் எட்டு மணி நேரம் அத்துடன் கழிப்பது மருத்துவ, சுகாதார ஊழியர்களுக்கு இறுக்கம்தான். அதிலும் நேரம் செல்லச் செல்ல அவர்கள் பாட்டையும் அந்தத் தவிப்பையும் பார்க்கவே மிகக் கடினமாக இருக்கும். அத்துடன்தான் அவர்கள் சேவை புரிய வேண்டியுள்ளது.

நோயைத்தான் விலக்க வேண்டும்

அதேபோல் அங்குள்ள மற்ற தொற்றாளர்களின் சங்கடங்கள் ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ எனச் சொல்லிக் கொடுக்கும். நம் பொறுப்புகள், நம் மீது மற்றவர் காட்டும் அன்பு, கரிசனம் ஆகியவற்றையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தால், தொற்று வந்துவிட்டதே என்ற அச்சமும் மன அழுத்தமும் ஓடிப் போய்விடும். தேவையான உறக்கம், ஓய்வு, நல்ல உணவு ஆகியவற்றுடன் நிச்சயம் கரோனா தொற்றிலிருந்து மீண்டு விடலாம்.

எத்தனை நாளில் தொற்று நீங்கும் என்ற அடிப்படையில்தான் மருத்துவமனை வாசமோ வீட்டுத் தனிமையோ விதிக்கப்படுகிறது. அவற்றைச் சரியாகப் பின்பற்றினாலே போதும். ஆனால், தொற்று வராமல் தன்னைக் காத்துக்கொண்டு இருக்கும் வெளி உலகத்தினருக்குப் பெரும் கடமை இருக்கிறது. ‘நோயிடமிருந்துதான் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், நோயாளியிடமிருந்து அல்ல’ என்று நம் அலைபேசி லட்சோப லட்சம் முறை சொன்னாலும், பலர் அப்படி நடந்துகொள்வதில்லை.

போதுமான பாதுகாப்பு, தனி மனித இடைவெளியுடன் அவர்களுக்குச் சிறு சிறு உதவிகளைச் செய்யலாம். உங்கள் சொற்களால் உடனிருக்கலாம். அவர்கள் இப்பேர்பட்ட போரை முடித்து மீளும்போது அஞ்சி அவமானப்படுத்தாமல், ஒரு புன்னகையைத் தந்து வரவேற்கலாம். இப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குத் தொற்றும் வாய்ப்பும் இல்லை என்ற உண்மையை உங்கள் மனத்துக்கு அழுத்தமாகச் சொல்லிக்கொடுங்கள்.

கட்டுரையாளர்,

புதுவை வானொலி நிலைய முதுநிலை அறிவிப்பாளர்

தொடர்புக்கு: uma.mohan.air@gmail.comகரோனாவை வென்றோம்கரோனாமீண்டவர்கள்புன்னகைமருத்துவமனைகஷாயம்கோழைவீரம்வீட்டுத் தனிமைதனி மனித இடைவெளிBeat Corona

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x