

ஊரடங்கு நேரத்தில் உங்களை உயர்த்திக்கொள்ள ஏதாவது ஒரு முயற்சியைத் தொடருங்கள் என ‘ஈரோடு வாசல்’ வாட்ஸ் அப் குழுமத்தின் அட்மின் சொல்ல, உடனே செயலில் இறங்கினோம். தினமும் எதைச் செய்யப்போகிறோம், சொன்னதைத் தொடர்ந்து செய்கிறோமோ என்பதைத் தினமும் இரவு பதிவிட வேண்டும்.
உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், ரங்கோலி, வாசிப்பு, எழுத்து என்று ஏகப்பட்ட வேலைகளைச் செய்ய முடிவெடுத்தேன். காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஒரு சில நாட்களில் ‘இன்றைக்கு வேண்டாம், சலிப்பாக இருக்கு’ என்று நினைத்துக்கொண்டு எழுவேன். ஆனால், வாசல் தெளித்துக் கோலம் போட்டு உள்ளே வரும்போது உடல் புத்துணர்வாகிவிடும். பிறகு உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சியை முடித்துவிட்டு தியானம் செய்வேன். மாலையில் நடைப்பயிற்சி. இவையெல்லாம் சேர்ந்து என்னை இளைக்கவைத்துவிட்டன. இது மனத்தையும் சேர்த்தே பக்குவப்படுத்திவிட்டது. யாரையும் எதையும் விரோதமாக நினைக்காமல் உலகம் யாவும் செழிக்க வேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு மனம் மலர்ந்திருக்கிறது.
சிறு வயது ரங்கோலி ஆர்வத்தை இப்போது செயல்படுத்திவருகிறேன். வட்டமோ, பூவோ போட்டுத் தொடங்குவேன். அதுவே படிப்படியாகத் தன்னை வரைந்து கொள்கிறபோது மனம் பூரித்துவிடும். எங்கள் வாட்ஸ் அப் குழுமத்தின் மூலம் நடத்தப்படும் பட்டிமன்றங்களில் பங்கேற்பேன்.
மிக்ஸிக்கு விடுதலை தந்துவிட்டு ஆட்டாங்கல்லுக்கு மாறி சுவையரும்புகளுக்கு மகிழ்ச்சியளித்தேன். மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன் இது நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கிறது. பேத்தியுடன் விளையாடி மகிழ்ந்து உள்ளம் கரைவதில் உருவாகும் கவிதை, முகநூலில் இடம் பிடிக்கும். கரோனா காலத்தில் வறுமை தாக்க வீடு தேடி வருகிறவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் கொஞ்சம் நிறைவு. ஆறு கட்டுரைகள், இரண்டு சிறுகதைகளை இந்த இரண்டு மாதங்களில் எழுதி முடித்தேன்.
தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிப் படங்களைப் பார்த்து ரசிக்கிறேன். கரோனா நம்மை வீட்டுக்குள் சிறை வைத்து, பொருளாதாரத்தை நொறுக்கிப்போட்டாலும், வாழ்க்கையில் மறக்க இயலாத நல்ல நினைவுகளையும் ஆரோக்கியத்தையும் தந்திருக்கிறது.
- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.