

நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்ற மாயத் தோற்றத்தை உடைத்தெறிகின்றன அடிக்கடி அரங்கேறும் கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறல்கள். சமீபத்திய உதாரணம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த ஒரு சம்பவம். ஒரு பெண், தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு ஆணிடம் தெருவில் நின்றபடி பேசிக்கொண்டிருக்கிறார். உடனே ஒரு கும்பல் அந்த ஆணை அடித்து, உதைக்கிறது. காரணம் அந்தப் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அந்த ஆண் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். வேற்று மதத்தைச் சேர்ந்த ஆணுடன் ஒரு இந்துப் பெண் பேசியதாலேயே அந்த மதத்துக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்கிற ரீதியில் அந்த ஆணைப் பிடித்து, கம்பத்தில் கட்டிவைத்து உதைத்ததுடன் அதைப் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். தடுக்க வந்த அந்தப் பெண்ணை ‘இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுடன் உனக்கென்ன பேச்சு?’ என்று மிரட்டியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதும் அந்த ஆண் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அவனிடமிருந்து தன்னை அந்தக் கும்பல் மீட்டதாகவும் கூறியிருக்கிறார் அந்தப் பெண். இடையில் என்ன நடந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நம் சமூகத்துக்குப் புதிதல்ல. பொதுவெளியில் ஒரு ஆணையும் பெண்ணையும் பார்த்ததுமே எங்கிருந்துதான் கலாச்சாரக் காவலர்கள் முளைத்துவிடுவார்களோ தெரியாது. நம் நாட்டின் கண்ணியம் ஆண்களும் பெண்களும் பொதுவெளியில் பேசிக்கொள்ளாமல் இருப்பதில்தான் இருக்கிறது என்று நம்புகிற அவர்கள், ஜோடியாக இருக்கிறவர்களைக் கண்டாலே அவர்களை அடிப்பது, விரட்டுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் இறங்கிவிடுவார்கள்.
காதலர் தினம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். காதலர்களைக் கண்காணிப்பதையே பலர் முழுநேர வேலையாகச் செய்வார்கள். பொது இடத்தில் ஆணும் பெண்ணும் பேசினால், தோளில் கைபோட்டபடி நடந்தால், முத்தமிட்டுக்கொண்டால், பெண்கள் ஐஸ்கிரீம் பார்லர், பப் போன்ற இடங்களுக்குச் சென்றால், ஒரு மாணவன் தன் தோழிகளுடன் உற்சாகமாக வெளியே சென்றால்... என எந்தச் செயலாக இருந்தாலும் இந்தக் கலாச்சாரக் காவலர்கள் அதைத் தட்டிக் கேட்டுவிட்டுத்தான் ஓய்வார்கள். அதற்கு மதத்தையும் இனத்தையும் துணையாக அழைத்துக்கொள்வார்கள். ஓரிடத்தில் இப்படிச் சிறிய அளவில் ஆரம்பிக்கிற பொறிதான் பல நேரங்களில் பெரும் கலவரங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் பார்த்திருக்கிறோம்.
ஆணும் பெண்ணும் பழகினாலே, கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறோம் என்று தடியுடன் கிளம்பிவிடுகிற கூட்டத்தை என்னவென்று சொல்வது? பொதுவெளியிலும் பணியிடங்களிலும் ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகுவதும் காதலிப்பதும் பெருங்குற்றமா? அவர்கள் அப்படிக் காதலிக்காமலும் நண்பர்களாகப் பழகாமலும் இருப்பதில்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் கவுரவமே அடங்கியிருக்கிறதா?