

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலான ஓவிய ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் குறையாத ஆர்வத்துடன் சித்திரங்கள் தீட்டுகிறார் சந்திரோதயம். அவரது 72 வயது முதுமையை மறக்கடிக்கின்றன புத்துணர்வு ததும்பும் ஓவியங்கள். கணக்குப் பாடத்துக்குப் பயந்து ஓவியப் படிப்பைத் தேர்ந்தெடுத்தவர் சந்திரோதயம். கும்பகோணத்தில் பிறந்த இவர், தன் ஓவிய ஆசிரியர் பணியைத் தஞ்சாவூரில் நிறைவு செய்தார்.
“நான் ஸ்கூல் படிச்சபோது 1957-ம் வருஷம் ஒன்பதாவது படிக்கிற மாணவிகளுக்கு ‘பைஃபர்கேடட்’ (bifurcated) கோர்ஸ் அப்படின்னு தனியா ஒரு பிரிவு கொண்டுவந்தாங்க. அதுல கணக்கும் சிறப்புத் தமிழும் இருக்காது. அதுக்கு பதிலா வாரத்துல 13 ஓவிய வகுப்புகள் இருக்கும்னு சொன்னாங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரையறதுல ஆர்வம் அதிகம். அதுவும் இல்லாம நான் கணக்குல கொஞ்சம் மந்தம். அதனால அந்த கோர்ஸை எடுத்துப் படிச்சேன்” என்று சிரித்தபடியே சொல்கிறார் சந்திரோதயம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஓவியத்துக்கான சிறப்பு வகுப்புகளில் சேர்ந்து படித்தார்.
“எங்க அப்பா படிக்கலை. அதனால என்னை டாக்டராக்கணும்னு விரும்பினார். ஆனா எனக்கு ஓவியத்துலதான் ஆர்வம்னு அவர்கிட்டே சொன்னேன். அந்தக் காலத்துல கலைக் கல்லூரியில பெண்களுக்கு இடமில்லை. அதனால கலைக் கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற வாத்தியார்கிட்டே ஓவியப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்” என்று தன் இளமைகால நினைவுகளை வரிசைப்படுத்திச் சொல்கிறார் சந்திரோதயம்.
ஓவியத்தின் மீது காதல் கொண்ட இவருக்கு, ஓவியம் வரைகிறவரே கணவராக அமைந்தார். இவருடைய கணவர் தங்கம், பிரபல நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணியாற்றியவர். தஞ்சை பெரிய கோயில், குகையநல்லூர் மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் தெய்வ உருவங்களை வரைந்திருக்கிறார் சந்திரோதயம்.
“ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றை நான் நுணுக்கமாக வரைவேன். அங்க அமைப்புகளைச் சரிப்படுத்த என் கணவர் உதவினார்” என்று சொல்லும் சந்திரோதயத்துக்குப் பூக்கள் வரைவதில் ஆர்வம் அதிகமாம்.
“என்னைப் பொறுத்தவரை விதவிதமான பூக்கள் வரைவதுதான் சவாலானது. அவற்றின் நிறத்தையும் புத்துணர்ச்சியையும் கொஞ்சமும் குறையாமல் வார்த்தெடுப்பதில் இருக்கிற சவாலை நான் ரசித்து செய்வேன். இப்போது வயதாகிவிட்ட தால் முன்பு போல ஓவிய வகுப்புகள் எடுக்க முடியவில்லை. ஆனாலும் பள்ளி குழந்தைகளின் அன்பான வேண்டுகோள் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது” என்கிறார் சந்திரோதயம்.
தான் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்ய விரும்பாத இவர், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அவற்றை அன்பளிப்பாகத் தந்து மகிழ்கிறார்.
படங்கள்: ஜான் விக்டர்