Last Updated : 26 Jul, 2020 09:19 AM

 

Published : 26 Jul 2020 09:19 AM
Last Updated : 26 Jul 2020 09:19 AM

தனித்திருந்தாலும் இணைந்திருப்போம்

இணையம் உலகையே இணைக்கிறது. ஆனால், வீட்டில் இருப்பவர்களைத் தனித்தனி உலகமாகப் பிரித்து வைத்திருக்கிறது. ஊரடங்கால் குடும்பத்துடன் அனைவரும் இருக்க நேர்ந்தாலும், வீட்டுக்குள் தனித்தனித் தீவுகளாக ஒதுங்கியே இருக்கின்றனர். கைபேசியும் இணையமும் இதற்குப் பக்கபலமாக இருக்கின்றன. உலகத்துடன் இணைந்திருப்பது அவசியம்தான். அதேநேரம் உறவுகளோடு இணைந்திருப்பது, அதைவிட அவசியம்.

வேலையின்மை, சம்பள வெட்டு எனப் பலரும் இந்த ஊரடங்கால் பல்வேறுவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலையில், குடும்பங்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க முடியாதுதான். ஆனால், மகிழ்ச்சியை மட்டுமல்லாமல், மனக்கவலையையும் பகிர்ந்துகொள்ளும் இடமும் நம் குடும்பங்கள்தானே? நெருக்கடிகளும் பாடம்தானே? கணவனும் மனைவியும் கலந்துபேசி விவாதிக்காமல், இயல்புநிலைக்கு எப்படித் திரும்ப முடியும்?

பெற்றோரின் கஷ்டங்களை அறிந்துகொள்ளாத, புரிந்துகொள்ளாத குழந்தைகள்தாம் வெகு இயல்பாக விலை உயர்ந்த ஸ்மார்ட்போனைக் கேட்கிறார்கள். தான் அனுபவித்த கஷ்டத்தைத் தன் பிள்ளை அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கும் பெற்றோர், தாங்கள் அனுபவித்த துயரங்களே, தங்களை முன்னேற்றியிருக்கின்றன என்பதை மறந்துவிடுகின்றனர். கூண்டுக்கிளிபோல் அவர்கள் விரும்பும் பழங்களையும் தானியங்களையும் கொடுத்துக் குழந்தைகளைப் பழக்கப்படுத்துவது, அவர்களுக்கே நல்லதல்ல. சிறகடித்துப் பறக்க வேண்டிய காலத்தில், அவர்களுக்கு நாம் வழங்கும் பாராசூட், எந்த வகையிலும் உதவாது.

அதற்காக, குழந்தைகளுக்கு எதையுமே செய்யக் கூடாது என்பதல்ல. குடும்பத்தின் பொருளாதார நிலை எப்படியிருக்கிறது என்பதைக் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். நமக்கு எது சாத்தியம், எது அவசியம், எது ஆடம்பரம் என்பதை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். படிப்பில் மதிப்பெண் வாங்குவது மட்டுமல்ல வாழ்க்கை, வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத்தேர்வதுதானே வாழ்க்கை.

ஒருங்கிணைவு தேவை

குழந்தைகளுக்குப் பணத்தின் அருமையை உணர்த்துங்கள். பள்ளிக் கட்டணம் கட்ட எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். படிப்பறிவுடன் பட்டறிவும் சேர்ந்தே அவர்களைப் பக்குவப்பட்டவர்களாக்கும். கரோனா கால நெருக்கடி அதற்கு உதவட்டும். ‘நான் சம்பாதிக்கிறேன், நான் சொல்வதைக் கேள்’ என்கிற ஆதிக்க மனோபாவம் வருமானமற்ற இந்தக் காலத்திலேனும் கொஞ்சம் தளரட்டும். ஊரடங்கின்போதும் அடங்காமல் வளர்கிறது குடும்ப வன்முறை. அடிமைபோல் அடி, உதை வாங்குவதும் சேவகம் செய்வதும் பெண்களின் வேலையல்ல. வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வதும் ஆண்களின் கடமை என்பதை இப்போது உணர்த்தாவிட்டால், வேறு எப்போது ஆண்களை விழிப்படைய வைக்க முடியும்?

குடும்பம் என்பது கூட்டுணர்வே. உரையாடல்களும் பகிர்தலும் அதற்கு அவசியம். ஆணைகளால் உறவுகளைக் கட்டியமைக்க முடியாது. ஒருங்கிணைவு என்பது நெருக்கடி காலத்தில்தான் உருவாகும் என்பார்கள். குடும்பத்துக்குள் அப்படியான ஓர் ஒருங்கிணைவை இந்த கரோனா நெருக்கடி உருவாக்கினால் மகிழ்ச்சிதானே. கரோனா முடிந்து நாம் திரும்பப்போகும் இயல்புநிலையைவிட, இதுவே சிறந்த இயல்புநிலையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x