விவாதக் களம்: தண்டிக்கும் உரிமையைத் தந்தது யார்?

விவாதக் களம்: தண்டிக்கும் உரிமையைத் தந்தது யார்?

Published on

ஆணும் பெண்ணும் பழகினாலே நம் பண்பாட்டுக்குப் பங்கம் வந்துவிட்டது என்று கொதித்தெழும் கலாச்சாரக் காவலர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் செப்டம்பர் 20-ம் தேதி வெளிவந்த ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியிட்டிருந்தோம். அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடும் கலாச்சாரக் காவலர்களின் செயல் சரியா என்ற நம் கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த பதில்களில் சில உங்கள் பார்வைக்கு...

முதாய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் சதிப்பின்னலின் தொடக்கமே கலாச்சாரக் காவலர்களின் செயல்பாடு. தடியெடுக்கும் இந்தத் தண்டல்காரத்தனம் கண்டிக்கத்தக்கது. வயதுவந்த ஆணும் பெண்ணும் யாருடன் பழக வேண்டும் என்பது அவரவர் உரிமை. அதில் ஏன் அடுத்தவர் தலையிட வேண்டும்? பெற்றோருக்கு இல்லாத கவலையும் தலைவலியும் இவர்களுக்கு ஏன்? காவல் துறையின் கைகள் கட்டப்படுகிற இடங்களிளெல்லாம் கலாச்சாரக் காவலர்களின் சதிச் செயல்கள் அரங்கேறுகின்றன.

- மு. குழந்தைவேலு, கோபாலசமுத்திரம்.

டுத்தவர் அந்தரங்கத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. பொது இடங்களில், அலுவலகங்களில், கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பழகுவதை யாரும் தவறாக நினைப்பதில்லை. ஆனால் இதைத் தாண்டி படகு மறைவு, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஆகிய இடங்களில் ஆணும் பெண்ணும் தனியாகப் போகும்போதுதான் கலாச்சாரச் சீர்கேடு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மத, இன கலவரமாக்கி, குளிர்காய்கின்றனர்.

- வரலஷ்மி முத்துசாமி, சென்னை.

காதல் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் பொது இடங்களில் அத்துமீறி நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கதே. ஆனால் இது போன்ற செயல்கள் தவறு என்று சம்பந்தப்பட்ட அந்த இருவர் உணர்ந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, அடுத்தவர் அதில் தலையிட உரிமையில்லை. ஒரு மதத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவருடன் பேசக்கூட அனுமதியில்லை என்றால் நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

- பிரவீனா சார்லஸ்.

ந்தரங்கம் என்னும் வார்த்தையே ஒருவரின் தனிப்பட்ட உரிமையைக் குறிக்கிறது. நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை படித்து, பதவியில் இருப்பவர்களே அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் அதிகம் மூக்கை நுழைக்கின்றனர். பெற்றவர்களே ஒரு பருவத்தில் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணமானவுடன், ‘இது உங்கள் குடும்ப விஷயம்’ என்று நாசூக்கு காட்டும்போது, மற்றவர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. ஒரு காலத்தில் தங்கள் அந்தரங்க உணர்வுகளை நாட்குறிப்பில் குறித்து வைத்த காலம் போய், இன்று பலரும் போடும் சொற்ப ‘லைக்’குகளுக்கும், அற்ப கமென்ட்களுக்கும் தங்கள் அந்தரங்கத்தைச் சமூக வலைதளத்தில் வெட்ட வெளிச்சமாக்குவதில் நம் தவறும் உள்ளது.

- எம். விக்னேஷ், மதுரை.

பொதுவெளியில் ஓர் ஆணும் பெண்ணும் பேசினாலே அவர்கள் காதலர்கள்தான் என்று நினைக்கும் இந்தச் சமுதாயத்தில் அடுத்தவர் நம்மைத் தவறாக நினைப்பதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுதான் சிறந்த வழி. அதை விட்டு நான் அந்த ஆணுடன் பேசினால் என்ன என்று கேட்டு பிரச்சினையைப் பெரிதாக்குவதால் என்ன பயன்? அடுத்தவரை நீ அந்தரங்கத்தில் தலையிடாதே என்று தடுப்பதைவிட நாம் அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் இருப்பதே சிறந்த வழி.

- உஷா முத்துராமன், திருநகர்.

ருவரின் தனிப்பட்ட விஷயம் என்பது அதன் எல்லைக் கோட்டைப் பொறுத்து மற்றவரின் தலையீடு நுழைகிறது. ஆணும் பெண்ணும் நண்பர்களாகவோ, காதலர்களாகவோ பழகுவது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இருந்தாலும் அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்போதோ அல்லது பொது இடத்தில் முகம் சுளிக்கும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமையும்போதோ மற்றவர்களின் தலையீடு ஏற்படுகிறது. கணவன் - மனைவி உட்பட இந்த உலகில் அனைத்து உறவிலும் அவரவர்க்கு என்று சொந்த விஷயங்கள் உண்டு. அதில் நுழைய எவருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒருவரின் செயல்பாடுகள் மற்றவரை பாதிக்காத வகையில் இருக்கும்போது உறவுகள் வலுப்பெறுகின்றன .

- சு. தட்சிணாமூர்த்தி, கோவை.

ம் வீட்டிலேயே ஆயிரம் வேலை மற்றும் பொறுப்புகள் இருக்கும்போது அடுத்தவர் என்ன செய்கிறார்கள் என்று எதற்காக கவனிக்க வேண்டும்? நாம் ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிட்டு அவர்களின் குற்றத்தைச் சொல்லிக் காட்டுவதால் இந்தச் சமுதாயத்தில் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடியுமா? எல்லாம் கண் துடைப்பு. ஒரு வயதுக்கு மேல் நம் பிள்ளைகளையே நாம் கேள்வி கேட்க முடியாதபோது அடுத்தவர் அந்தரங்கத்தில் எதற்குத் தலையிட வேண்டும்? நம் வீட்டுக்குள்ளேயே அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால்தான் நிம்மதியான வாழ்க்கை அமையும்.

- லஷ்மி ஹேமமாலினி, சென்னை.

லாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் ஒருவரது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது முற்றிலும் தவறு. ஒரு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் பேசிக்கொள்வதால் மட்டும் கலாச்சாரக் கேடு ஏற்பட்டு விடாது. அவர்களது செயல் மற்றவர்களைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வது நல்லது.

- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர்.

லாச்சாரக் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்பவர்கள் தங்களுடைய பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் இத்தகைய செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றனர். இதை எதிர்த்துப் பேசவும் கேட்கவும்கூட ஆள்பலம் மற்றும் பண பலம் முக்கியத் தேவையாயிருக்கின்றன. ஏதோ ஒரு சில நேரங்களில் மட்டும் இந்த மாதிரி கலாச்சாரக் காவலர்களைத் தட்டிக்கேட்க முடிகிறது. மற்ற நேரங்களில் கலாச்சாரமும் அரசியலும் கலந்துவிடுவதால் தட்டிக்கேட்க முடியவில்லை. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் எதிர்ப்பது மதம், சாதி மாறிய திருமணங்கள் மற்றும் நட்புகளைத்தான். நட்பு, திருமணம் போன்றவற்றை ஒருவரின் அந்தரங்கமாக இவர்கள் கருதுவதில்லை. சாதி, மதம் இரண்டும் மிகவும் உணர்ச்சிபூர்வமானவை என்பதால் ஆட்சியாளர்களும் தங்கள் வாக்கு வங்கியை நினைத்துப் பெரும்பாலான நேரங்களில் வாய் மூடி மவுனமாக இருந்து விடுகிறார்கள். இதுவும் இந்தக் கலாச்சாரக் காவலர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.

டுத்தவர் செய்வது நமக்குத் தவறாகத் தெரிந்தால் உரிமையின் அடிப்படையில் சுட்டிக் காட்டலாம். ஆனால் தட்டிக்கேட்கிறோம் என்ற பெயரில் கலாச்சாரத் தூதுவர்களாய்த் தங்களைக் காட்டிக்கொள்வோர் வன்முறையைக் கையில் எடுப்பது முற்றிலும் தவறு. பொது இடங்களில் எல்லை மீறுவோரைச் சட்டப்படி தண்டிக்கக் காவல் துறை இருக்கும்போது ஒரு பெண் ஆணிடம் பேசிக்கொண்டிருந்தாள் என்பதற்காக ஆணை அடித்து உதைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் மதக்கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

ர் ஆணும் பெண்ணும் பேசினாலே கலாச்சாரம் சீரழிந்துவிடுகிறது என்று கூச்சல் போடுவது காட்டுமிராண்டித்தனமான செயல். காதலிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். காதலர் தினத்தில் மட்டும் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் பறப்பதும், மற்ற தினங்களில் கண்டுகொள்ளாமல் விடுவதும் கேலிக்குரியது. நமது சமூகத்தில் அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிவதில் ஆர்வம் கொண்டவர்கள் பலர். இந்தப் பிற்போக்குத்தனமான பார்வை முதலில் மாற வேண்டும். வெளியிடங்களில் காதலர்கள் அநாகரிகமாக நடப்பதைக் கண்டிக்கலாம். ஆனால் காதலிப்பது தவறு என்று கூற முடியாது.

- தேஜஸ், காளப்பட்டி.

யாருக்கும் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் செய்துகொள், ஆனால் பொது இடங்களில் பேசக்கூடக் கூடாது என்பது எத்தகைய கலாச்சாரம்? வழிபாட்டுத் தலமான கோயில்களில் இருக்கும் சிற்பங்கள் எத்தகைய கலாச்சாரத்தைச் சார்ந்தவை என்பதை இந்தக் கலாச்சார அபிமானிகள் சொல்வார்களா? எந்தவொரு விஷயத்தையும் அடக்கிவைக்க நினைக்கும்போதுதான் அது முன்பு இருந்ததைவிட மிக அதிகமான வீரியத்துடன் செயல்படத் தொடங்கும். சட்டத்தைத் தாங்களே கையிலெடுத்துக்கொண்டு மூர்க்கத்தனமாகத் தண்டிப்பது எந்த வகை கலாச்சாரம்? அரசாங்கமும் காவல் துறையும் இதைப் பார்த்துக்கொண்டு எப்படிச் சும்மா இருக்கின்றன என்பதுதான் புரியவில்லை.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

ந்தரங்கம் என்பதே ரகசியம். அதைப் பொது இடத்தில் பிறர் நெளியக்கூடிய அளவுக்கு அல்லது பிறர் வெட்கப்படும் அளவுக்குச் செய்து அத்துமீறும் நேரங்களில் நிச்சயமாய் அந்த அந்தரங்கத்தில் தலையிடலாம்.

- பவானி சாகர் மனோ.

மூன்றாம் மனிதர்களுக்கு ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிடும் உரிமை கொஞ்சமும் இல்லை. அப்படித் தலையிடுவது நாகரிகமான செயலும் இல்லை. அதோடு அது குற்றமும் ஆகும்.

- சின்னஞ்சிறு கோபு, சென்னை.

லாச்சாரக் காவலர்கள் என்று அவர்களுக்கு பெயர் சூட்டாதீர்கள், அவர்கள் மனிதர்களே அல்ல, அதே சமயம் ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது அவர்களுடைய உரிமை. சமூகப் பொறுப்போடு நடக்காதவர்களை தண்டிக்க இவர்களுக்கு உரிமை இல்லை. சட்டத்திற்கு மட்டுமே உண்டு.

- எம். ஜெகன்னாதன் (இணையம் வழி).

ளமைக் காலத்தில் காதல் அனுபவமோ பெண்களுடனான நட்பு பாராட்டுதலோ இல்லாமல் விரக்தி அடைந்த சிலர், கலாச்சாரத்தை பாதுகாக்கின்றோம் என்னும் போர்வையில் இளைஞர்களை தூண்டிவிட்டுச் செய்யும் விஷமத்தனமான வேலை என்றே படுகிறது.

- பா. சுபிசுதா

ரம்பு மீறாத நிலையில் பொது இடங்களில் ஆணும், பெண்ணும் பேசுவதில் குற்றம் காண்பது, பரந்த எண்ணம் நம்மிடையே குறைந்து வருவதையே காட்டுகிறது. இது ஆபத்தானது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சேர்ந்து இது போன்ற விரும்பத்தகாத விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

- ஆ. பீர்முஹம்மது, தலைஞாயிறு.

ணும், பெண்ணும் சரிசமமானவர்கள். அவர்களை வித்தியாசப்படுத்தி விமர்சிப்பவர்கள் மனிதர்களே இல்லை. சுதந்திரமடைந்து 70 ஆண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மனித மனங்கள் இன்றும் அடைபட்டுத்தான் கிடக்கிறது. வீட்டுக்குள்ளே பெண்களை அடைத்து வைத்த காலத்தில் வாழ்ந்தவர்களைப் போல் அடுத்தவர் அந்தரங்கத்திலும் தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடுவது மகா தவறு. குற்றமாகும். நம் நாட்டின் பண்பாடு, கண்ணியம், கட்டுக்கோப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு பொது இடங்களில் ஆணையும் பெண்ணையும் பார்த்தால், தாக்குவதும் விரட்டுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு விளம்பரங்களைத் தேடிக்கொள்ளும் இவர்கள் சமூக காவலர்களா? பொது இடத்தில் ஆணும் பெண்ணும் பேசினாலே அவர்களை அவமானப்படுத்துவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். இன்றைய இளம் தலைமுறையினர் இருபாலருக்குமே சுய சிந்தனை இருக்கிறது. பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். நல்லதையும் கெட்டதையும் பகுத்துப் பார்க்கும் அறிவும் நிறையவே இருக்கிறது.

அதையும் மீறி தடம் மாறிப் போகிறார்கள் என்றால் அதைக் கண்காணிக்கவும் சரிப்படுத்தவும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். கலாச்சாரக் காவலர்களே, தட்டிக் கேட்கவும், போராட்டம் நடத்தி சரி செய்ய வேண்டிய பிரச்சினைகள் நாட்டில் ஏராளமாக இருக்கின்றன. முன்னேற்றப் பாதையில் வீறு நடை போடும் இளம் வயதினரின் வாழ்க்கைப் பாதையை அரிக்கும் கறையான்களாக இருக்காமல், வழிநடத்துபவர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in