இப்படித்தான் சமாளிக்கிறோம்: பிறர் துயரை உணர்ந்துகொண்டோம்

இப்படித்தான் சமாளிக்கிறோம்: பிறர் துயரை உணர்ந்துகொண்டோம்
Updated on
2 min read

முதல் கட்ட ஊரடங்கில் குழந்தைகளுக்கும் என் கணவருக்கும் எனக்கும் பிடித்த உணவு வகைகளைச் சமைப்பதும் சாப்பிடுவதுமாக சில நாட்கள் கழிந்தன.

பிறகு ஒரு நாள், கோவையில் முதியோரைப் பராமரிக்கும் நண்பர் ஒருவர் பத்து முதியவர்களுக்கு மருந்து, மாத்திரைகளுக்காக உதவி தேவை எனக் கோரிக்கைவிடுக்கவும், சற்றுத் திடுக்கிட்டு யோசித்தேன். எத்தனை பேர் இப்படி உணவு, மருந்துக்காக அல்லல்படுகிறார்கள், நாமோ விதம் விதமாகச் சமைத்து, உண்டு, உறங்கி வீணாகக் காலம் கழிக்கிறோமோ என மனசாட்சி உறுத்தியது. அதன் பிறகு நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் உதவிபெற்று, உதவி கேட்ட நண்பருக்கு அனுப்பி வைத்தேன்.

இதுவரை நண்பர்கள் உதவியுடன் 70,000 ரூபாய்வரை பணமாகவும் மளிகைப் பொருட்களாகவும் பலருக்கும் உதவியுள்ளேன். தற்கொலைக்குத் தயாராக இருந்த ஒரு குடும்பத்துக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்து அவர்களை மீட்டதுடன், அவர்களது தேவையைப் பூர்த்திசெய்தேன்.

கணவனை இழந்த பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள், என் பள்ளியில் படிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என 20 குடும்பங்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன்.

இது தவிர, நேரமின்மையால் பல நாட்களாகப் பேச இயலாமல் இருந்த ளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன்.

தியானம், நடைப்பயிற்சி போன்ற உடல், மனம் சார்ந்த நலன்களுக்கான முயற்சிகளில் வெற்றியும் பலனும் பெற்று, மற்றவர்களும் அவற்றைக் கடைப்பிடிக்கப் பரிந்துரைத்துவருகிறேன். கணினியை இயக்கக் கற்றுக்கொண்டதுடன் பயனுள்ள பல இணையப் பயிற்சிகளிலும் உறவினர்கள், நண்பர்கபங்கேற்றேன். தேவையற்ற பயத்தையும் சிந்தனையையும் விடுத்துத் தகுந்த பாதுகாப்பு, விழிப்புணர்வுடன் இந்தக் கடினமான நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற நம்மால் முடியும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

- இரா. ருக்மணி, கொத்தப்பள்ளி, ஒசூர்.

எச்சரிக்கையுடன் இருக்கும் மகள்

என் மகள் இனியா இரண்டாம் வகுப்பு செல்கிறாள். ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பதால் படிப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். சனிக்கிழமையும் பள்ளி உண்டு. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அபாகஸ் வகுப்புக்கும் சென்றுகொண்டிருந்தாள்.

நாமெல்லாம் சிறு வயதில் படித்ததைவிட விளையாடியதே அதிகம். ஆனால், இப்போது குழந்தைகளுக்கு விளையாட நேரம் கிடைப்பதே இல்லை என்று மகளை நினைத்துக் கவலையாக இருக்கும். ஆனால், இந்த ஊரடங்கால், விளையாடுவதற்கு அவளுக்கு நிறைய நேரம் கிடைத்துள்ளது. பல்லாங்குழி, தாயம், நூற்றுக்குச்சி இவற்றைப் பற்றியெல்லாம், இனியாவுக்குச் சொன்னேன். உடனே மிகவும் ஆர்வமாகி, தனக்கும் அந்த விளையாட்டுகளை விளையாட ஆசையாக இருப்பதாகச் சொன்னாள்.

ஆனால், எங்கள் வீட்டில் பல்லாங்குழி கிடையாது. நானும் இனியாவும் சேர்ந்து, தர்மாகோலில் பல்லாங்குழிப் பலகை செய்து விளையாடினோம். தாயமும் விளையாடினோம். கோலம் போடச் சொல்லிக் கொடுத்தேன். இப்போதெல்லாம், தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து இனியாவே வாசல் தெளித்து, கோலம் போடுகிறாள். நான் சமைக்கும்போது, இனியாவும் என்னுடன் வந்து உதவுவாள். ஒரு நாள், “என்னம்மா பயங்கர சூடா இருக்கு. நீங்க தினமும் இவ்வளவு சூட்டுல நின்னு கஷ்டப்பட்டுதான் சமைக்கிறீங்களா?” எனக் கவலையுடன் கேட்டாள். அவள் அப்படிக் கேட்டது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நிறைய ஓவியம் வரைவாள்.

மிகவும் எச்சரிக்கையாக இருப்பாள். “நம்ம தெருவுல உள்ள கடைக்குப் போயிட்டு வருவோமா?” என நான் சும்மா விளையாட்டாகக் கேட்டால், “அச்சச்சோ, நான் வரமாட்டேன்பா. கரோனா வந்துடும்” என்று சொல்வாள். இப்படியாக இனியாவுடன் பொழுதைப் போக்குவதே அலாதியான மகிழ்ச்சி. இனியாவின் ஆலோசனைப்படி எங்கள் வீட்டில் இருந்த பழைய பொம்மைகளுக்கு சார்ட் பேப்பரில் ஆடை வடிவமைத்தோம். என்ன வேலை செய்தாலும் எப்போதும் என்னுடனே இருந்தும், நாங்கள் ஒன்றாக உணவருந்தியும் பழகி விட்டது. ஆனால், மீண்டும் இனியா பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைத்தாலே கவலையாக இருக்கிறது.

- ரேவதி, தஞ்சாவூர்.

உங்கள் வீட்டில் எப்படி?

வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும்.

மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in