இப்படித்தான் சமாளிக்கிறோம்: திறமையை வெளிப்படுத்தும் களம்

இப்படித்தான் சமாளிக்கிறோம்: திறமையை வெளிப்படுத்தும் களம்
Updated on
1 min read

எதிர்பாராத வேளையில் இக்கட்டான நிலைமை ஏற்படும் போது, நமது ஆறாம் அறிவு மிகுந்த விழிப்புடன் செயல்படுகிறது. மாற்றங்களை ஏற்று, அவற்றுக்கு இசைந்து கொடுத்து, பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்காமல் மீண்டு வரவே அறிவுறுத்துகிறது. ‘உடலின் பணி, மூளைக்கு முட்டுக்கொடுப்பதே’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் கூறியதுபோல், கரோனா ஊரடங்கைச் சரியான திட்டமிடலுடன் இயல்பாக நகர்த்திக்கொண்டிருக்கிறது என் குடும்பம்.

வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருப்பதும், குழந்தைகள் அவற்றை வாசிக்க நேரம் செலவிடுவதும் நமக்குக் கிடைத்த வரம். என் மகள் ‘பொன்னியின் செல்வன்’ ஐந்து பாகங்களையும் படித்து முடித்துவிட்டு, இப்போது ‘கள்வனின் காதலி’யைத் தொடர்ந்துகொண்டிருக்கிறாள். என் மகனுக்குப் பத்தாம் வகுப்புக் கோடை விடுமுறையில் ‘குறிஞ்சி மலர்’ வாங்கிப் பரிசளித்தேன். அப்போது அதைப் படித்தவன், இப்போது அலைபேசி விளையாட்டில் மூழ்கிவிடுகிறான். ஆனால், நான் சமைக்கும்போது எனக்குச் சிறுசிறு உதவிசெய்து, சமையலைக் கற்றுக்கொள்கிறான். என் கணவர் யூடியூப் பார்த்து, புதுப்புது உணவு வகைகளுக்கு ரெசிபி சொல்ல, விதம்விதமாகச் சாப்பாடு தயாராகிறது.

இதற்கிடையில் நான், மார்ச் மாத இறுதியில் 32 பள்ளிகளைச் சேர்ந்த 69 மாணவர்களை ஒருங்கிணைத்துத் ‘தேவதைகள் கூட்டம்’ என்ற வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினேன். நாள்தோறும் ஒரு செயல்பாடு அடிப்படையில் போட்டிகளை நடத்திவருகிறேன். மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள்வரை மகிழ்ச்சியோடு கலந்துகொள்கின்றனர்.

ஓவியம் வரைதல், பட்டம் தயாரித்தல், காகிதக் கப்பல் செய்தல், காய்கறிக் கழிவு, தீக்குச்சிகள், பருப்பு வகைகள், இலைகள், பூக்கள் போன்றவற்றைக் கொண்டு உருவங்கள் செய்தல், அகரமுதலி வரிசைப்படி சொற்களை அமைத்தல், கூட்டுச் சொற்களைக் கண்டுபிடித்துப் பொருத்துதல், கவிதை, பாடல் எழுதுதல், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, விடுகதை, புதிர் கணக்குகள் என நாளும் ஒரு போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்கள் திறன்களை வெளிப்படுத்துகின்றனர்.

ஊரடங்கு முடிந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியதும், விழா நடத்த அரசு அனுமதியளித்த பிறகு ஒரு நாள் தேவதைகள் கூட்ட விழா நடத்தி, கலந்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசளிப்பதாக அறிவித்திருக்கிறேன்.

- பா.தென்றல், காரைக்குடி.

உங்கள் வீட்டில் எப்படி?

வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும்.

மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in