Published : 21 Jun 2020 08:41 AM
Last Updated : 21 Jun 2020 08:41 AM

இப்படித்தான் சமாளிக்கிறோம்: அர்த்தம் கூட்டுகிறாள் பேத்தி

என் மகன், மருமகள், மூன்று வயது பேத்தி ஆகியோருடன் மூன்று ஆண்டுகளாகக் கோவையில் இருந்தேன். வைரஸ் தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் மார்ச் 31 அன்று என் கணவர் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக இருந்ததாலும் பேத்தியை அழைத்துக்கொண்டு மார்ச் 16 அன்று தூத்துக்குடி வந்தேன். மகனும் மருமகளும் மார்ச் 31 அன்று வந்து அவளை அழைத்துச் செல்வதாகத் திட்டம். ஆனால், ஊரடங்கு உத்தரவால் நாங்கள் மட்டும் தூத்துக்குடியிலேயே தங்கும் சூழல் ஏற்பட்டது.

மூன்று ஆண்டுகளாகப் பேத்தியுடன் இருந்தாலும் சிறு குழந்தை என்பதால், இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் நகர்த்த வேண்டிய கட்டாயம். காலையில் எழுந்துகொள்வதில் இருந்து இரவு உறங்கும்வரை அவளுடனே இருக்க வேண்டும். வீட்டு வேலைக்கு ஆட்களும் வர முடியாத நிலையில், அவள் தூங்கி எழுவதற்குள் எல்லா வேலைகளையும் முடித்தாக வேண்டும்.

காலையில் சிறிது நேரம் கார்ட்டூன் பார்ப்பாள். பிறகு டீபாயில் விளையாட்டுச் சமையலறை அமைத்து, அதில் சிறிய பாத்திரங்களை வைத்துச் சமைத்து, எனக்கும் என் கணவருக்கும் தருவாள். பிறகு அவளுடைய பொம்மைகளுக்குச் சாப்பாடு. ஓவியம் வரையவும் வண்ணம் தீட்டவும் சிறிது நேரம். அவளுக்கென்று உள்ள சிறிய கரும்பலகையில் டீச்சர் விளையாட்டு இடையிடையே நடக்கும். எங்களுக்கு உடற்பயிற்சி, யோகா எல்லாம் சொல்லித்தருவாள்.

இதற்கிடையே என் கணவரின் பணிநிறைவு நாள் வந்தது. 40 ஆண்டுப் பணிக்குப் பிறகு சக ஊழியர்கள், பிள்ளைகள் என யாரும் வழியனுப்ப வர முடியாத நிலையில், தன் பிஞ்சுக் கையால் பிளாஸ்டிக் மலர்க்கொத்துக் கொடுத்துத் தாத்தாவை அவள் வாழ்த்தியது நெகிழ்ச்சியான தருணம்.

நாங்கள் இருப்பது 11 கதவுகள் கொண்ட பெரிய வீடு. அதில் மூவரும் ஒளிந்து விளையாடியபடி மதிய உணவும் இரவு உணவும் ஊட்ட வேண்டும். மதிய வேளையில் புதிர் விளையாட்டு, ஆங்கில எழுத்துகளைச் சேர்ப்பது, மாதங்களை வரிசைப்படுத்துவது என்று பொழுது நகரும். பரண் மேல் இருந்த அவளது அப்பா, சித்தப்பாவின் விளையாட்டுப் பொருட்களும், அவர்கள் பரிசாகப் பெற்ற கதைப் புத்தகங்களும் அவளது விளையாட்டுப் பொருட்களாயின. இதற்கிடையே நாங்கள் மூவரும் கண்கட்டி விளையாடும் பாண்டி விளையாட்டும் நடக்கும்.

ஒருநாள் மாலையில் அவளுடைய பொம்மைகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடினோம். அவளது உதவியுடன் கேக் செய்தோம். பிறந்தநாள் வாழ்த்தை பிரிண்ட் எடுத்து வண்ணமடித்து ஒட்டி, கேக் வெட்டிக் கொண்டாடினோம். கதவுகளில் பொம்மைகளுக்குத் தூளி கட்டிக்கொடுத்தோம்.

இரவு நேரத்தில் அவளே மருத்துவராக மாறி பொம்மைகளுக்கும் எங்களுக்கும் சிகிச்சையும் ஆலோசனையும் தருவாள். வீட்டிலுள்ள மிருதங்கத்தை அவள் வாசிக்க, நாங்கள் மழலையர் பாடல்களைப் பாட வேண்டும். என் பெற்றோரின் 56-ம் திருமண நாள் ஏப்ரல் 19 அன்று வந்தபோது கொள்ளுத் தாத்தா, பாட்டிக்கு அவள் கையால் வாழ்த்துமடல் தயாரித்து, அதைப் படமெடுத்து அனுப்பினோம். மூன்று வயதுக் குழந்தை என்றாலும் நாம் சொல்வதைக் கவனமாகக் கேட்டு அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதில் கவனமாக இருப்பாள். “கரோனா வைரஸ் பரவலால்தான் அம்மா, அப்பா இன்னும் வரலியா? நாம் வீட்டிலேயே இருப்போம்” என்று அவள் சொல்லும்போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்குகின்றன.

- விஜயா முரளி, ஆறுமுகநேரி.

எதிர்நீச்சலிட்டுத் துயரைக் கடப்போம்

உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டி ருக்கும் ஊரடங்கு உள்ளத்தை உருக்கினாலும், இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து இருப்பது இனிமையான அனுபவம்தான். எங்களுடைய ஒரே மகன் ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைக்க இருக்கிறான். விடுமுறை என்பதால் காலை ஏழு மணிக்குத்தான் அவனுக்குச் சூரியன் உதிக்கும். எழுந்ததும் ‘இந்து தமிழ்’ நாளிதழை வாசிப்பான். தலைப்புச் செய்தியை முழுவதுமாக வாசித்து வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்புவான்.

அதன் பின் இணையம்வழி உலகத்தைச் சுற்றி வருவான். தனக்குப் பிடித்த சுற்றுலாத்தலங்களையோ, தலைவர்களையோ, முக்கிய உலகச் செய்திகளையோ குறித்துப் பதிவிடுவான். இதற்காக எடிட்டிங் சாப்ட்வேர்களையும் கற்றுவருகிறான்.

விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது அவனது கனவு. வீட்டில் இருக்கும் பழைய மின்சாதனப் பொருட்களைக்கொண்டு அவ்வப்போது சிறு சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அன்றாடம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளான். தோட்டம் அமைப்பது அவனுக்குப் பிடித்தமானது. காய்கறி, பூச்செடிகளை நட்டுப் பராமரித்துவருகிறான். மீன்களுக்கும் வாத்துக்களுக்கும் உரிய நேரத்துக்கு உணவளித்துப் பொறுப்புடன் பராமரித்துக்கொள்கிறான். சில நேரம் படங்களை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்கிறான். என்னுடன் இணைந்து விதவிதமான உணவு சமைப்பான்.

டிரம்ஸ் வாசிக்கும் அவனுடன் இணைந்து பாடல்களைப் பாடி ஊக்கப்படுத்துவேன். மாலை நேரத்தில் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின்மூலம் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறான். வாழ்க்கையின் கடின காலங்களில் எப்படி எதிர்நீச்சலிட்டுச் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பாக இந்த ஊரடங்கைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.

- இரா. ச. சுஜி, உதவிப் பேராசிரியர், நாகர்கோவில்.

ஊரடங்கு கற்றுத்தந்த பாடம்

ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் என்ன செய்வதென்று தெரியாமல் விதவிதமாய் சமைப்பது, உண்பது, தூங்குவது, வீட்டுக்குள்ளே குழந்தைகளுடன் விளையாடுவது என்று நேரம் போனாலும் ஏதோவொரு வெறுமை தொடர்ந்துகொண்டே இருந்தது. காரணம், என் பள்ளியில் உள்ள குட்டிக் குழந்தைகள். பள்ளி நாட்களில் சத்துணவுதான் அவர்களுக்குப் பசியாற்றும் மருந்து. காலையில் அரை வயிற்றுக் கஞ்சியை மட்டும் குடித்துவிட்டு வருவார்கள்.

இந்த ஊரடங்கு நேரத்தில் அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு வேலை இல்லாமல் என்ன செய்கிறார்களோ என்ற யோசனையில் 100 குழந்தைகளுக்கும் தயிர்ச் சோறு செய்து எடுத்துச் சென்றேன். குழந்தைகள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. எப்போதும் தனியாகவே சென்ற நான், கல்லூரியில் படிக்கும் மகனை ஒரு நாள் உடன் அழைத்துச் சென்றேன். வீட்டில் செய்யும் சாப்பாட்டை அலட்சியத்துடன் சாப்பிடும் அவன், அங்கே சென்ற பின் பசித்திருப்பதன் மனநிலையை அறிந்துகொண்டான். ஒரு வேளை உணவு கிடைக்காத குழந்தைகளின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டான்.

இப்போதெல்லாம் உணவை அவன் வீணாக்குவதில்லை. என்னுடன் ஆர்வத்துடன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வருகிறான். அறம் சார்ந்த சிந்தனைகளைப் பிள்ளைகளுக்கு அறிவுரையாகக் கூறத் தேவையில்லை. நாம் வாழ்ந்து காட்டினாலே போதும், புரிந்துகொள்வார்கள். ஊரடங்கு கற்றுத்தந்த பாடம் இது.

- ம.ஜெயமேரி, ஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி.

உங்கள் வீட்டில் எப்படி?

வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும்.

மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x